Thursday, November 13, 2014

குச்சி ஐஸ்

1996

"போலாம் ரைட் ரைட்"

என் மகனுக்காக வாங்கி வந்த ரிமோட் கன்ட்ரோல் காரை ஓட்டி கான்பித்தேன்.
நான் அவனுக்கு ஓட்டி கான்பித்தேனா இல்லை அந்த சாக்கில் என் சிறுவயது ஆசையை தீர்த்துக்கொண்டேனா?

தெருவில் உள்ள எல்லா பிள்ளைகளும் என் வீட்டு வாசலில்

அது என் கட்டுபாட்டையும் மீறி தெருவில் இருந்த முருங்கை மரத்தின் மீது இடித்து நின்றது.

"ஐயோ... போங்கப்பா"

"அப்பாவுக்கு வண்டியே ஓட்ட தெரியல. இல்ல கண்ணு"
என்று என் மனைவி பரிகசித்து விட்டு என்னை ஓர கண்ணால் பார்த்து சிரித்தாள்.

திடிரென்று தெருவில் வந்த ஐஸ் வண்டிக்காரன் குரல் எல்லா பிள்ளைகளையும் ஈர்த்தது.

எல்லோரும் ஐஸ் வண்டியை சுற்றி.

என் மகன் மட்டும் சோகமாய் உட்கார்ந்தான்.

"இந்தா நீயும் வாங்கிக்க"
காசை கொடுத்தேன்.

காசை வெடுக்கென பறித்தவள்

"உங்களுக்கு என்ன? நான்தானே அவதி படுறேன். டேய் டாக்டர் உன்ன ஐஸ் சாப்பிடக்கூடாதுன்னு சொன்னாருல்ல. போய் பிஸ்கட் எடுத்து தின்னு"


1970


அது ஒரு ஞாயிற்றுக்கிழமை

தமிழரசனுடன் கிட்டிப்புல் விளையாடிக் கொண்டிருந்தேன்.இன்னும் நிறைய பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தார்கள்.

எல்லா பிள்ளைகளின் கவனத்தையும் ஈர்த்தான் அங்கே வந்த ஐஸ் வண்டிக்காரன்.

உடனே எல்லோரும் விளையாட்டை நிறுத்தி விட்டு ஐஸ் வாங்க ஓடினார்கள்.

என் கை அனிச்சையாய் கால் சட்டைப்பையில் விரலை விட்டது.

அங்கே எதுவும் இல்லையென்று மனசு சொன்னாலும் கை கேட்பதாயில்லை.

இன்னைக்கு ஐஸ் தின்னே ஆகனும்.

கிடைக்காது என்று தெரிந்தும் அம்மாவிடம் ஓடினேன்.

"அம்மா"

"என்ன?"

"ஐஸ் மா"

"என்னா?"

"அஞ்சு காசு குடும்மா"

"இங்க வா"

கிட்ட போனேன்
நறுக்கென்று கொட்டினாள்

"உனக்கென்னா திங்கிற திமிறா. அஞ்சு காசு வேனுமா? குடும்ப வறுமை தெரியாமல்"

வலி தாங்க முடியாமல் அப்பாவை நோக்கி ஓடினேன். அப்பாவிடம் கேட்பதும் பள்ளிகூடத்து சுமைதாங்கி கல்லில் முட்டிக்கொள்வதும் ஒன்று. அம்மா காசு இருந்தாலும் கொடுக்க மாட்டாள். அப்பாவிடம் காசே இருக்காது.
இருந்தாலும் நப்பாசை.

வழியில் அய்யணார் கோயில்.
அய்யணாரப்பா இன்னைக்கி ஒரு ஐஸ் வாங்க வழிய காமி. உனக்கு சூடம் ஏத்துறேன்.


"அப்பா ஐஸுப்பா அஞ்சு காசு குடுப்பா"

அப்பா சட்டையே போடுவதில்லை. பின் எங்க காசு இருக்கும்.

"எங்கிட்ட இல்லடா. அம்மா கிட்ட கேட்டியா? முதலாளி வேற ஊர்ல இல்ல"

நான் அங்கேயே நின்றேன்

"ஐஸ் சாப்புட்டா காய்ச்சல் வரும். நீ போய் புத்தகத்த எடுத்து வச்சி படி"

தலையை தொங்க போட்டு வந்தேன்.

எல்லா பிள்ளகளும் ஐஸ் சாப்பிட்டு விட்டு குச்சியை அங்கேயே போட்டு விட்டு போயிருந்தார்கள்.

நான் மெதுவாக அந்த குச்சிகளை பொறிக்கினேன்.மெதுவாக பெரிய பள்ளிகூடத்து மதில் சுவர் பக்கமாக நின்றேன்.
யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் கவனித்தேன்.

குச்சியில் ஒட்டியிருந்த மண்ணை உதறி விட்டு குச்சிகளை ஒவ்வொன்றாக சப்பி கடித்து தின்று துப்பினேன்.

1996


ஒருநாள் பையன் பள்ளிக்கு போய் விட்டான். தெருவில் ஐஸ் வண்டி.

வீட்டில் என் மச்சான்களும் அவன் நண்பர்கள் மட்டும். எல்லோரும் ஆளுக்கொரு ஐஸ் வாங்கி வந்தார்கள். அப்படியே எனக்கும் ஒன்று.
இப்போது அதே குச்சி ஐஸ் பாலிதின் பேப்பரில் சுற்ற பட்டு. மிக அழகாக இருந்தது.
வாயில் வைத்து சப்பினேன். சுவையாக இருந்தது. எல்லோரும் குச்சிகளையும் பாலிதின் பேப்பரையும் அங்கேயே போட்டு விட்டு போயிருந்தார்கள்.


ஐஸ் தின்று முடித்து விட்டு வெளியே போய்விட்டு வீட்டுக்கு வந்தேன்.
என் மகன் அழுது கொண்டிருந்தான். கன்னம் வீங்கி இருந்தது.


""இங்க வாங்க உங்களுக்குத்தான் இரண்டு போடனும்.ஐஸ் தின்னுட்டு இங்க யாரு பேப்பர் போட்டது?
இவன் அந்த பேப்பர எடுத்து சப்பிக்கிட்டு இருக்கான்"

என் மனைவி என்னை அடிக்க பாய்ந்தாள்.

No comments:

Post a Comment