Sunday, November 16, 2014


வியாபாரி ஒருவன் பொருட்களை கப்பலில் ஏற்றி அயல்நாடுகளுக்கு கொண்டு போய் வியாபாரம் செய்து வந்தான். அவன் வியாபாரத்தில் இருந்த நாட்டத்தால் கல்யாணம் செய்து கொள்ளாமல் நாட்களை கடத்தி விட்டான்.
வயதும் ஐம்பது ஆகிவிட்டது.

இப்போது மற்ற குழந்தைகளை பார்க்கும்போது தான் செய்தது தவறோ என நினைத்தான்.
இத்தனை காலமும் திருமணம் செய்யாமல் நாட்களை கடத்தி விட்டோமே என கவலை கொண்டான்.

அவன் நண்பர்கள் சிலர். இப்பவும் உன்னை திருமணம் செய்ய பல பெண்கள் காத்திருக்கின்றனர் என சொல்லி ஓர் இருபது வயது இளம்பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.

திருமணம் செய்து சிலகாலம் மனைவியுடன் இன்பமாய் இருந்தான். ஆனாலும் அந்த வாழ்க்கை அவனுக்கு அலுத்து விட்டது.

காலமெல்லாம் உலகம் சுற்றியவன் அல்லவா?
உடனே கப்பலில் நிறைய பொருட்களை ஏற்றி மீண்டும் வியாபரத்திற்கு கிளம்பி விட்டான்.

புறப்படும் போது மனைவியை அழைத்து தன் நிலையை விளக்கி இந்த ஒரு தடவை மட்டும் நான் போய்விட்டு வந்து விடுகிறேன்.

அதற்குமுன் சிலவார்த்தைகள் உன்னிடம் பேசவேண்டும்.என் வார்த்தையை தட்டாமல் கேட்கவேண்டும் என்றான்.

நீயோ இளம் வயதினள். நான் இல்லாத போது உனக்கு சபலம் வரலாம். அது ஒன்றும் தவறில்லை. அப்படி உனக்கு ஆண்துணை வேண்டும் என நினைத்தால் நல்ல ஒழுக்கமுடைய இளைஞனாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்.
ஐயோ நான் அப்படி எல்லாம் உங்களுக்கு துரோகம் செய்வேனா என்று எல்லா பெண்களும் சொல்வது போல் சொல்லி உன்னை நீயே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். ஆனால் தகுதி உள்ள இளைஞனாக தேர்வு செய்து கொள் என்று சொல்லி முடித்தான்.

மனைவியும்,

"நான் என்ன சொல்வது இந்த விசயத்தில். உங்களை மறுத்து பேசக்கூடாது என சொல்லிவிட்டீர்கள். உங்கள் விருப்பப்படியே செய்கிறேன் " என்றாள்.

வியாபாரியும் கிளம்பி விட்டான்.
கணவன் சொன்னாலும், மனைவி வேறு எந்த நினைவும் இல்லாமல் தன் வேலைக்காரியுடன் வாழ்ந்து வந்தாள்.
சிலநாளில் அவளுக்கு தனிமை வாட்டியது. இப்போது யாராவது ஆண் துணை இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.
இதை முன்னிட்டுதான் கணவன் சொல்லிவிட்டு சென்றான் போலும் என நினைத்தாள்.

கணவன் இல்லாத பெண் என்பதால் பல ஆண்கள் அவளை வட்டமிட்டனர்.
ஆனால் அந்த நகருக்கு வந்த ஒரு புதிய இளைஞன் மேல் நாட்டம் கொண்டாள்.
அதனால் அவன் பார்க்கும்படி தன்னை நன்றாக அலங்கரித்து கொண்டு அவன் பார்க்கும்படி தன் வீட்டில் நிற்பாள்.

ஆனால் இளைஞனோ அவளை தலைநிமிர்ந்து கூட பார்க்க மாட்டான். இதனாலே இன்னும் அவளை அவன் கவர்ந்தான்

ஒருநாள் வேலைக்காரியை விட்டு அவனை அழைத்து வர சொன்னாள்.

இளைஞன் வீட்டுக்கு வந்தான்.
வந்தவன் புத்திசாலி அழைத்த நோக்கத்தை புரிந்து கொண்டான்.
ஆனாலுமே அவளாக சொல்லட்டும் என காத்திருந்தான்.

அவளும் தன் கதையை சொல்லி இந்த விசயத்தில் தனக்கு உதவ வேண்டும் என்றாள்.

இளைஞனும் சம்மதித்தான்.ஆனால் அவன் ஒரு நிபந்தனை விதித்தான்.

"நான் எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் விரதம் இருப்பதாக கடவுளுக்கு வேண்டிக்கொண்டு உள்ளேன்.அப்படி பட்ட வாழ்க்கை எனக்கு இப்பொது அமைந்துள்ளது. விரதத்தில் நீயும் பங்கு கொண்டால் விரதம் முடிந்து நாம் இருவரும் ஒன்று சேரலாம்.விரதம் இரண்டு மாத காலம் வரை.ஒருவேளை சைவ சாப்பாடு மட்டும் சாப்பிட வேண்டும். உனக்கு சம்மதமா" என கேட்டான்.

அவளும் சம்மதித்தாள்.

அதன்படி ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தாள். சிலநாளில் அவள் உடல் மெலிந்து அவள் காம எண்ணங்கள் அவளிடம் இருந்து போனது.

அப்போதுதான் இளைஞனின் திட்டம் அவளுக்கு புரிந்தது.
தன்னை நல்வழி படுத்தவே இளைஞன் இந்த மாதிரி செய்தான் என புரிந்து கொண்டாள்.

இளைஞனிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவனுக்கு நன்றி சொல்லி கணவனுக்காக காத்திருந்தாள். கணவன் வரும் வரை உணவை குறைத்து கடவுள் பக்தியுடன் கணவனின் வரவை எதிர் நோக்கினாள்.

சிலநாளில் கணவனும் வந்து சேர்ந்தான். அவனும் மனைவியிடம் தான் இல்லாத போது நடந்தவைகளை கேட்க வில்லை.இவளும் எதுவும் சொல்ல வில்லை.
அதன் பிறகு கணவன் உலகம் சுற்ற போகாமல் தன் மனைவியுடன் சந்தோசமாக இருந்தான்.அவளும் கணவனின் அன்பில் சந்தோசமாக இருந்தாள்...
=============

நான் படித்த கதைகளில் என்னை கவர்ந்த கதை உங்களுக்காக....

2 comments:

  1. மிக நன்றாக எழுதப்பட்ட அருமையான கதை. சில கதைகள் மட்டுமே மனதில் காலத்தைக் கடந்தும் நிற்கின்றன.

    ReplyDelete
  2. நன்றிகளும் காலை வணக்கங்களும் சார்

    ReplyDelete