Wednesday, November 5, 2014


இனியதொரு இரவு வேளை. ஓர் அரசன் தன் மகாராணியுடன் யமுனை நதிக்கரையில் அமர்ந்து யமுனையின் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

ரசித்தவன் யமுனையை தன் மகாராணியுடன் ஒப்பிட்டு வர்ணித்தான்.

"அன்பே இந்த யமுனை நதியின் நீரோட்டத்தின் சலசலப்பு உன்னை அழகி அழகி என கூறிக்கொண்டே செல்வது போல் தோன்றுகிறது. சரிதானே?"

ஆனால் அரசியோ அரசின் கூற்றை மறுத்தாள்.

"உங்களுக்கு அப்படி தோன்றுகிறது. ஆனால் யமுனையின் சலசலப்பு ஒரு பெண்ணின் அழுகை போல்.தோன்றுகிறது."

இதைக்கேட்ட அரசன் அதிர்ச்சி அடைந்தான்.

"ஏன் உன் அழகை கண்டு பொறாமைப்பட்டு யமனை அழுகிறதோ?"

அரசியின் முகம் வெட்கத்தால் சிவந்து போனது.
ஆனாலும் அரசனின் கூற்றை மறுத்தாள்.

"உங்களால் முடிந்தால். யமுனை அழும் காரணத்தை கண்டுபிடியுங்களேன் அரசே"

மறுநாள் அரச சபை கூட்டப்பட்டது

"யமுனை அழுது கொண்டிருக்க என்ன காரணம்?"

அரசர் தன் சந்தேகத்தை அமைச்சர்கள் முன்வைத்தார்.

பலருக்கும் விடை தெரியவில்லை.
ஒருவர் மட்டும் விடை சொன்னார்

"அரசே யமுனையின் தாயகம் இமயமலை.
யமுனையின் புகுந்தவீடு வங்ககடல். பிறந்தவீட்டில் செல்வசெழிப்பாக வளர்ந்து தான் போகும் இடமெல்லாம் எல்லாருக்கும்.பயனை தந்து கடைசியில் தன் உரு மறைந்து கடலில் கலக்க வேண்டியுள்ளது. திரும்ப தன்னால் தன் பிறந்த வீட்டை பார்க்கமுடியவில்லை. தன்னை உருவாக்கிய பிறந்த வீட்டுக்கு தன்னால் ஏதும் செய்ய முடியவில்லை என்று நினைத்துதான் யமுனை அழுகிறது அரசே"

அரசர் அமைச்சரின் கூற்றை ஆமோதித்தார். அமைச்சர் மேலும்.சொன்னார்.

"இங்கே திருமணம் முடிந்த பெண்கள் கூட யமுனையை போல்தான் அரசே. பிறந்த வீட்டில் தேவதை போல் வளர்கிறாள். பின் மணம் முடித்து அவள் போகும் இடத்தின் தேவைக்காக மட்டும் பயன்படுகிறாள். அவள் கணவன், பிள்ளைகள், மாமானார் மாமியார் நலன்கள் மட்டும் இங்கே முக்கியமாய் போய்விடுகின்றன. ஆனால் அவளால் தன் பிறந்த வீட்டுக்கு ஏதும் செய்யமுடியவில்லை. இதுதான் அரசியாரின் உள்கருத்து அரசே"

அரசன் அமைச்சரின் மதிநுட்பத்தை எண்ணி வியந்தான். —

No comments:

Post a Comment