வயது 38
"அங்கிள் உங்கள அந்த ஆன்ட்டி கூப்பிடுறாங்க"
"யாரு?"
திரும்பி பார்த்தால்
தாமரை.
வயது 7
"ஏன்டா மாப்ள இன்னும் படுக்கைய நனைக்கிற பழக்கம் போகலயாடா"
மாமி தன் பெண்களுக்கு முன்னால் கேட்கும் போது நாக்கை பிடுங்கி கொள்ளலாம் போல இருக்கும்
அதுவும் இந்த தாமரை நமுட்டு சிரிப்பு சிரிப்பாள்.
தாமரை பெரிய மாமா பெண். மாமாவிற்கு இரண்டு பெண்கள்.
தாமரை என்னுடன் பேச மாட்டாள். எதுவாக இருந்தாலும் தன் தங்கையிடம் கொடுத்து விடுவாள் கடன்காரி.
விடுமுறை மாமா வீட்டில்தான் கழியும். கினற்றுக்கு குளிக்கப் போனோம். அது பெரிய பாறைக்கிணறு. எனக்கு இறங்க பயம். அவள் நன்றாக நீச்சல் அடித்தாள். எனக்கு நீச்சல் தெரியாது. அப்பவும் நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு எனக்காக பம்பு செட்டை போட்டு விட்டாள்.
வயது11
தாமரைக்கு இப்போது முன் இரண்டு பற்கள் நீண்டு அவலட்சனமாய் இருந்தாலும் அவள் லட்சனமாகவே இருந்தாள்
தாமரையின் ஊரில் பெரிய பள்ளிக்கூடம் இல்லாததால் எங்கள் வீட்டில் தங்கி படித்தாள். இங்கே நான் அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பேன். நான்தான் கிளாஸ் லீடர் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து கொண்டு இருந்தேன். ஆறாம் வகுப்பு முழுவதும் கணேசன் என்ற என் பெயர் பரவியது.
வகுப்பில் புளியங்காய் மாங்காய் இலந்த பழம் வைத்துக்கொண்டு ரகசியமாக தின்பார்கள்.அதில் இரண்டு குள்ளச்சியும் ஒரு கட்டச்சியும் கூட்டு களவாணிகள்.
என் வேலை அவர்களை ஆசிரியரிடம் போட்டு கொடுப்பது.
பின்ன என்னா நமக்கு குடுக்காம திங்குறாளுங்க.
தாமரை படிப்பில் சீரோ.
சில காலம் அவளை பிரிந்திட்டேன்.
வயது 19
சின்ன மாமாவிற்கு கல்யாணம் நடந்து சின்ன மாமி வந்துட்டாங்க.
நான் அவங்களுக்கு செல்ல பிள்ளை. ஒரு வகையில் அவங்க என்னை சிறுவயதில் தூக்கி யிருக்கலாம். எல்லோரும் சொந்தம்.
நான் எப்போதும் சின்ன மாமியுடன் தான் இருப்பேன்.
மாமி வயலில் வேலை செய்து கொண்டிருந்தாங்க. நான் வரப்பில் நின்று படி அவங்க கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன்.
திடிரென்று கரும்பு தோட்டத்தில் இருந்து யாரோ வரும் சத்தம்.
வந்தவள் தாமரை.
கையில் பூக்கூடையுடன் ஒரு தேவதை போல வந்தாள்
பருவத்தின் அத்தனை அழகையும் தன்னுள் அடக்கிய படி. பல வருடங்களுக்குப்பின் இன்றுதான் பார்க்கிறேன்.
என்னைப்பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள கண்களில் மின்னல் . இதழில் சிறு புன்னகை.
புன்னகைக்கிறாளா? நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாளா?
கடன்காரி பேசினால் என்ன முத்தா உதிர்ந்து விடும்.
'ஆ! எங்க போச்சி பல்லு?'
வாய்க்காலில் தண்ணிர் சலசலத்து கொண்டு ஓடியது. ஒற்றை வரப்பில் பூமி அதிராமல் நடந்தவள் லேசாக திரும்பி பார்த்து விட்டு ஒரு கனகாம்பரம் பூவை வாய்க்கால் தண்ணீரில் போட்டாள். தண்ணீர் நான் இருக்கும் திசை நோக்கி வந்ததால், இப்போது பூ என்னை நோக்கி.
குனிந்து பூவை எடுத்துக்கொண்டேன்.
திரும்பிப் பார்த்தால், அவள் வலமாக திரும்பி மறைந்து போனாள்.
எல்லாம் முடிந்தது ஒரு நிமிடத்தில்
"அத்தே எங்க பல்ல கானும் ?"
"டேய் இப்ப அவ வளந்துட்டாடா. நல்ல சதை போட்டிருக்கு. அவ பல்லுக்கு கம்பி கட்டியிருந்தா
அதான் பல்ல கானும். உனக்கு பிடிச்சிருக்கா? கட்டிக்கிறியா?"
"ஐயோ...! போங்க அத்தே. கிண்டல் பன்றிங்க."
"கிண்டல் இல்லடா. என்ன நீங்க இரண்டு பேரும் ஒரே வயசா போயிட்டிங்க. இல்ல நானே பெரியவர் கிட்ட சொல்லி முடிச்சுருவேன்"
"என்ன அத்தே இப்படி சொல்றிங்க? அப்ப உங்க பொண்ணு எனக்கில்லையா?"
"அய்யோ என் மருமகனே. அவளையும் சேத்து கட்டிக்க"
அதன் பிறகு தாமரை கல்யாணம் செய்து போய் விட்டாள்.
வயது 38
தாமரையை நோக்கி போனேன்.
"எங்களலாம் மறந்துட்டிங்களா?"
முதன் முதலாக என்னிடம் சகஜமாக பேசுகிறாள்.
என் மனைவி குழந்தைகளை பற்றி விசாரித்துக்கொண்டே போனாள்.
அவளுக்கும் மூன்று பெண்கள். அதில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் முடிந்து போனது.
நான் வந்தது அவளுடைய பெண்ணின் கல்யாணத்திற்குத்தான்.
பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவழைத்தாள்.
"பொண்ணு மாப்பிள்ளைய ஆசிர்வாதம் பன்னுங்க"
எனக்கு கட்டளையிட்டாள்.
ஆசிர்வதித்தேன்.
ஒரு நிமிடம் தாமரையை பார்த்தேன்.
தலையில் ஓரிரு நரைமுடிகள். ஒட்டிய கன்னம்.முன்நீட்டிய பற்கள். இருப்பினும் அவள் எனக்கு அழகாகவே தெரிந்தாள்.
அவள் இப்போது மாமியார். ஐந்தாவது படிக்கும் என் மகன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
நான் என்னை ஒரு நிமிடம் உள் வாங்கினேன் 38 வயது எனக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வ்ர வில்லை.
38 வயது ஆண் இன்னுமும் அப்பாதான்.
38வயது பெண் மாமியாராகி விட்டாள்.
No comments:
Post a Comment