"அம்மா இம்மாம் பெரிய மீனுமா, மார்க்கெட்ல பாத்தேன்மா. ஒரு நாளைக்கு வாங்கி குழம்பு வைம்மா"
இப்படி கேட்ட மகனை பரிதாபமாய் பார்த்தாள் மீனாட்சி.
அவள்தான் என்ன செய்வாள்.
கட்டியவன் சரி இல்லை. எப்ப வருவான் எப்ப போவான்னு தெரியாது.
இருந்தாலும் ஏன் பொறுத்துக்கொள்கிறாள் என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
"சரிடா என் செல்லம். இன்னும் இரண்டு நாள்ல மாமி வீட்ல எல்லாருமே ஊருக்கு போறாங்க.அன்னைக்கு என் செல்லத்துக்கு மீன் குழம்பு வச்சி தருவேனாம்."
"சரிம்மா"
"சரி வா போவோம். மாமி சத்தம் போடுவாங்க"
மீனாட்சி ஸ்டோர் மாமி வீட்டில்தான் வேலை செய்கிறாள்.
மாமிக்கு ஏன் ஸ்டோர் மாமி என பெயர் வந்தது எப்படி என அவளுக்கு தெரியாது
மாமி ரொம்ப நல்லவள். நிறைய கொடுப்பாள்.நிறைய திட்டுவாள்.நிறைய வேலை வாங்குவாள்.
மீனாட்சியின் மகன் முருகேசன் இரண்டாவது படிக்கிறான். அவனுக்கு வேலை
மாமி கறந்து தரும் பசும்பாலை வினியோகித்து வரவேண்டும்.
அம்மாவிற்கு கொடுக்கும் சம்பளத்திற்கு இவன் டிஸ்கவுன்ட் வேலைக்காரன்.
ஆனால் மாமி எத்தனை கொடுத்தும் அசைவ சாப்பாடு கொடுக்க முடியாதே.
மீனாட்சி சமைப்பதே இல்லை.
கணவன் எப்பவாது வருவான். கையில் இருப்பதை கொடுப்பான் போகும் போது வாங்கிக்கொண்டு போய்விடுவான்.
மாமி ஒரு நாள் கேட்டாள்
"அந்த சனியன எதுக்குடி கட்டிக்கிட்டு அழற? ஒழிச்சி தலைய முழ்குடி"
"இல்ல மாமி அவன் கேடு கெட்டவனா இருந்தாலும் புருசன்னு ஒருத்தன் இருக்கான். இப்பவே இவ வளைஞ்சி குடுப்பாளான்னு நிறைய நாய்ங்க பாக்குறானுங்க. இவனும் இல்லன்னா என் கதி?"
"சரிசரி அழாதடி. கண்ண துடச்சிக்க. இந்தா இத முருகேசன் கிட்ட குடு"
மாமி பலகாரம் தந்தாள்.
அன்று மீனாட்சிக்கு வேலை இல்லை. காலைல சொன்னாள் மகன் கிட்ட.
"மாமி வீட்ல யாரும் இல்ல. இன்னைக்கு என் தங்கத்துக்கு மீனு குழம்பு வச்சி தருவேனாம். நீ பள்ளிக்கூடம் போய்ட்டு வருவியாம்"
முருகேசன் சந்தோசமாய் பள்ளிக்கூடம் போனான்.
பரபரவென்று மீனாட்சி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.
மாலை பள்ளி விட்டதும் ஆசை ஆசையாக வீட்டுக்கு வந்தான்.
வீட்டில் முருகேசனின் அப்பன் நன்றாக குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.
முருகேசனுக்கு அப்பா என்பது ஒரு பொருட்டு அல்ல. கிட்டதட்ட அப்பன் முகம் மறந்து கூட விட்டான். எப்பவாது வந்து கையில் பத்து பைசா தினிப்பான்.அடுத்து கானாமல் போவான்.
"அம்மா சோறு போடும்மா"
அம்மா அழுது கொண்டிருந்தாள்
"ஏம்மா அழுவுற?"
"நான் சோத்த ஆக்கி வச்சிட்டு குளிக்க போய்ட்டேன்டா. திடிர்னு உங்கப்பன் வந்து எல்லா மீனையும் தின்னுட்டு தூங்குது சனியன். நான் உனக்கு இன்னொரு நாளைக்கு வச்சி தரேன்டா. இப்ப வெறும் குழம்பு மட்டும் இருக்கு சாப்புடுறா"
முருகேசன் அப்பனை வெறுப்புடன் பார்த்துக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.
மீனாட்சி வைத்த அரைக்கிலோ மீனை சாப்பிட்டுவிட்டு குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தான் முருகேசனின் அப்பா.
Thursday, November 13, 2014
மீன் குழம்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment