Tuesday, November 4, 2014

கயல்விழி

நான் மாலை வேளைகளில் எப்போதும் லட்சுமி அத்தை வீட்டு வழியாகத்தான் நூலகம் செல்வது வழக்கம. அதற்கு காரணம் அத்தையின் இரண்டு பெண்கள் என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல

பின்னே அதுதானே குறுக்கு வழி?

பெரும்பாலும் அத்தையின் மூத்தப்பெண் கயல்விழி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) திண்ணையில் வயர்கூடை கட்டியபடி உட்கார்ந்து இருப்பாள்.

சிலசமயம் அத்தையும் உட்கார்ந்து இருப்பாங்க.

"என்ன அண்ணி மருமகன் தலைய குனிஞ்சிகிட்டே போறாரு தலைய குனிஞ்சி கிட்டே வராரு.பேச கூட வெக்கம்"

அம்மாவிடம் சொல்லி அங்கலாயித்தது உண்டு.

எனக்கு அப்போது 19வயது இருக்கலாம்.பார்க்கும் இளம் பெண்கள் எல்லாம் தேவதைகளாக தெரிந்த காலம்.

அத்தையின் இருபெண்களுமே கருப்புதான். அதிலும் கயல் அட்டக்கரி ஆனாலும் அவள் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்

அத்தை என்றால் உறவுக்காரர்கள் அவ்வளவுதான். நாங்கள் அனைவருமே நகர மக்களால் புதுப்பேட்டையார் குடும்பம் என்று அழைக்கப் பட்டோம். இன்றும் அதே பெயர்தான்.

நான் போகும் போதும் வரும்போதும் ஓரக்கண்ணால் கயல்விழியை பார்ப்பதுண்டு. சிவந்த உடலை விட இந்த கரிய முகம் என்னவோ செய்தது உண்மைதான்.

அவள் தைரியமாக என்னை தலை நிமிர்ந்து பார்ப்பாள்.

அந்த வயதுக்கே உரிய வெட்கமும் பயமும் என்னுள்.

எனக்கு அப்போதெல்லாம் பெண்களிடம் பேசவே பயம் வெட்கம் பிடுங்கி தின்னும்.

ஒருவேளை என் வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம்.

கயல் என்னை விட ஆறுமாதம் மூத்தவள் என்று அம்மா சொன்னாங்க.

அதனால் சின்னவளை பெண் கேட்கலாம் என்பது அம்மாவின் எண்ணம்.

ஆனால் சின்னவள் எனப்பட்ட அம்பிகாவை எனக்கு சுத்தமாக பிடிக்க வில்லை.அவளும் கருப்புதான்.
ஆனாலும் பெரியவளிடம் இருந்த தேஜஸ் இவளிடம் இல்லாமல் போனது.

மாமாவிற்கு மளிகை கடை.
நான் அங்கு போனால் ராஜமரியாதை

ஒரு நல்லநாளில் கயல்விழிக்கு திருமணமும் முடிந்தது.
இதில் சற்று வருத்தம் இருந்தாலும் வேற வழியில்லையே

பக்கத்து தெருவில் உள்ள கயல்விழியின் மாமா வீட்டிற்கு விருந்துக்கு வந்த தம்பதிகள்

மாமி சோற்றை பரிமாறி விட்டு பாயசம் எடுத்து வருவதற்குள் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டதை மாமி பொதுவில் வைத்து சொல்லி சிரித்தார்

எனக்கு அது ஒரு கிளர்ச்சியை உண்டு பண்ணியது என்னமோ உண்மை.

மாப்பிள்ளைக்கு வேலை இல்லை.
ஆண்வாரிசு இல்லாத மாமனாரின் கடையை நிர்வாகம் செய்து இருக்கலாம் அவருக்கு அத்தனை சாமார்த்தியம் போதவில்லை.

இதுவரைதான் நான் ஊரில் இருந்து தெரிந்த விசயங்கள்.

நான் பிறகு வேலை தேடி வேறு ஊர் சென்ற பிறகு எனக்கு வந்த செய்திகள்:

பெரியமகளின் கல்யாண செலவு மாப்பிள்ளைக்கு வேலை வாங்கிய செலவு மாமாவால் தாக்கு பிடிக்க முடியவில்லை.

கடையின் மூலதனம் குறைந்து போனது.விளைவு தவறான முடிவு

பணமாற்றம்

முதல் முறை ஜெயித்த மாமா மறுமுறை தோற்று போனார்.

ஏகப்பட்ட கடன்

அவசர அவசரமாக அம்பிகாவை தங்கை மகனுக்கு கட்டிக்கொடுத்து விட்டு தனிமையான ஓர் இரவில் அத்தையும் மாமாவும் விசம் அருந்தி இறந்து கிடந்ததாக சொன்னார்கள். காலையில் ஓருவரை ஒருவர் கட்டி பிடித்தபடி கிடந்தார்களாம்.

அதன்பிறகு அத்தையின் மகள்களை நான் பார்க்கவே இல்லை.

இன்று எப்படியோ எனக்கு கயல்விழியின் ஞாபகம் வந்து போனது.

No comments:

Post a Comment