Saturday, November 15, 2014

வாசலில் கட்டியிருந்த கீற்றுப் பந்தலும் அரைகுறையாய் கட்டப்பட்டு வெட்டப்பட்ட வாழைமரமும் அந்த வீட்டில் இரண்டு நாளைக்கு முன் சாவு நிகழ்ந்ததிற்கான செய்தியை சொல்லாமல் சொல்லின.,

ராமசுப்பு அந்தவீட்டிலினுள் நுழையும் போது ஒரு மாடு அந்த வாழைமரத்தை எட்டி இலைகளை தின்றுகொண்டிருந்தது.

மாட்டை விலக்கி விட்டு உள்ளே நுழைந்தார்.

"பாட்டி யாரோ வந்திருக்காங்க"

வாண்டு ஒன்று கத்திக்கொண்டே உள்ளே ஓடியது.

சத்தம் கேட்டு வெளியே வந்த சகுந்தலாவை கண்டு கொஞ்சம் விசனித்தார்.

அவள் கணவன் சாகிற வயதில்லைதான்.என்ன செய்ய? விதி.

"வாங்க. நீங்க யாருங்க?"

"நான் ராமசுப்பு..சண்முகம் எங்கூடத்தான் வேலை பாத்தான். மனசு கஷ்டமா இருக்குங்க"

'------------'

"அப்பறம் அவன்கிட்ட கைமாத்தா அய்யாயிரம் வாங்கியிருந்தேன் இந்தாங்க. இப்ப உங்களுக்கு தேவைப்படும்"

"அப்படியா? இருங்க என் பையன கூப்பிடுறேன்.. அவன்கிட்டயே கொடுங்க"

அடுத்த இரண்டு நிமிடத்தில் வந்த சகுந்தலாவின் மகனிடம் பணத்தை கொடுத்து விபரம் சொன்னார்.

"அம்மாவ பாத்துகுங்க தம்பி."

போய்வருகிறேன் என்பதற்கு அறிகுறியாக சகுந்தலாவிற்கு வணக்கம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி தெருவில் நடந்தார். இப்போது அவர் எதையோ சாதித்தது போல் உணர்ந்தார். இறந்துபோன நண்பனை அசைபோட்டது அவர் மனது.

அவர் போய்விட்டது உறுதிபடுத்திக்கொண்ட சகுந்தலாவின் மகன் அம்மாவிடம் கத்திக்கொண்டிருந்தான்.

"ஏம்மா உனு புருசனுக்கு அறிவே இல்லம்மா. இப்படி இளிச்சவாய்தனமா கண்டவங்க கிட்டலாம் பணத்த கொடுப்பாரா மனுசன்.ஒரு பாண்டு இல்ல பத்தரம் இல்ல. இன்னும் யாரு யாருக்கிட்ட கொடுத்து ஏமாந்தாரோ? இப்ப கொடுத்துட்டு போச்சே ஒரு கிழம். இந்த அய்யாயிரம்தானா. இல்ல இதுக்கு மேலயோ. யாருக்குத்தெரியும்.நல்லவன் மாதிரி வேசம் போட்டு அய்யாயிரத்த கொடுத்துட்டு போறான் கிழவன்"

இவை எதுவும் தெரியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தார் சண்முகம் புகைபடமாக..

No comments:

Post a Comment