Wednesday, November 19, 2014


அப்பு ஒரு குடும்பத்தலைவன். அவனுக்கு எப்போதும் தான் மட்டும் தன் குடும்பத்திற்காக உழைப்பதாகவும் தன் மனைவி நன்றாக சாப்பிட்டு அனைத்து சுகங்களையும் அனுபவிக்கிறாள் என நினைக்கிறான்.

'நான் மட்டும் பெண்ணாய் இருந்தால் விதவிதமாய் உடை உடுத்தலாம், எல்லா டீவி சீரியல்களையும் பார்த்து ரசிக்கலாம். நிறைய நகைகளை போட்டு அழகு பார்க்கலாம்'-இப்படி நினைக்கிறான்.

ஒருநாள் வெறுத்து போய். கடவுளிடம் வேண்டுகிறான்.

"கடவுளே, என்னை பெண்ணாகவும் என் மனைவியை ஆணாகவும் மாற்றிவிடேன்"

கடவுளும் சிரித்துக்கொண்டே மாற்றி விடுகிறார்.

அடுத்த நாள் பெண்ணாக மாறிய அப்பு, காலையில் எழுந்து குளித்து காபி போட்டு கணவனை எழுப்பி அவனுக்கு வெந்நீர் வைத்து அவனை குளிப்பாட்டி சமைத்து அவனை வேலைக்கு அனுப்பி விட்டு எழமறுத்த குழந்தைகளை பிடிவாதமாக எழுப்பி அவர்களை குளிப்பாட்டி அவர்களுக்கு சாப்பாடு போட்டு சாப்பிட மறுத்த குழந்தைகளை தாஜா செய்து சாப்பிட வைத்து, அவரகளுக்கு உடை அனிவித்து சாப்பாடு கட்டி கொடுத்து பள்ளி பேருந்து வரும் வரை காத்திருந்து அவர்களை அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தால் வாரமொரு முறை வரும் குடிதண்ணீரை சேமித்து நிமிர்ந்து காலண்டரை பார்த்தால், ஞாபகத்திற்கு வந்தது. இன்று கரண்ட் பில் போன் பில் கட்ட கடைசி தேதி. அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது இன்று சர்க்கரை ரேசன். அதோடு வீட்டில் மளிகை பொருட்கள் ஒன்றும் இல்லை.

புறப்பட்டாள் பெண்ணாகிய மாறிய அப்பு.
சிலபைகளோடும் பணத்தோடும். மறக்காமல் ஈபி நம்பரை குறித்துக்கொண்டாள்.

ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு வந்தால், வீட்டில் ஒரு மூட்டைத்துணி வரவேற்றது. சரியாக கரண்ட் கட். வாஷிங் மிஷின் வாங்கி பயனிலை.

எல்லாத்துணிகளை அடித்து துவைத்து காயவைத்தாள்.

அப்போது ஞாபகத்திற்கு வந்தது. தான் சாப்பிட மறந்ததை.

கடிகாரம் காட்டியது பிள்ளைகள் திரும்பும் நேரத்தை.

அவர்களை போய் அழைத்து வந்து அவர்களுக்கு சிற்றுண்டி கொடுத்து அவர்களை படிக்கவைத்து, அடுத்து வந்த கணவனை கவனித்து இரவு சமையல் செய்து சாப்பிட்டு குழந்தைகளை தூங்கவைத்து பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு படுக்கைக்கு வந்தவள் அப்போதுதான் கவனித்தாள் தான் கட்டியிருந்த அழுக்கேறிய புடவையையும் கலைந்த தலைமுடியையும்.

அடுத்து காத்திருந்த கணவனை திருப்தி செய்து கணவன தூங்க வைத்தவள் நொந்து போனாள்.
கணவன் தூங்கிய பிறகு கடவுளை வேண்டினாள்.

"கடவுளே போதும் இந்த பெண் ஜென்மம். திரும்ப என்னை ஆணாக மாற்றிவிடேன்"

கடவுள் சொன்னார்: மன்னிக்கவும் பக்தா அதற்கு இன்னும் பத்து மாதம் காத்திருக்கவும்.ஏனெனில் நீ கர்ப்பமாய் இருக்கிறாய்.

No comments:

Post a Comment