Thursday, November 6, 2014

ஒரு சித்தாளும் சில சித்துவேலைகளும்

"யாரும்மா இது புதுசா இருக்கு?"

"மேஸ்திரி, இவ பேரு அன்னம். என் பக்கத்து ஊடு.புருசன் போய்ட்டான்.பாவம் மூனு புள்ளைங்க அதான்"

"சரி சரி இந்த பொண்ண மாணிக்கத்துட்ட இன்னைக்கு வேலைக்கு அனுப்பு"

"அய்யா வேணாம் யா. அவ இங்கேயே கல்லு மண்ணு தூக்கட்டும்.அவனுக்கு இவ சரிபட மாட்டா"

"என்ன அஞ்சலம் இப்படி பேசற. அவனோட ஆளு இன்னைக்கு வரல. அதான் இன்னைக்கு ஒரு நாளு அட்ஜஸ் பண்ணிக்க."

வேறுவழியில்லை. மேஸ்திரி சொன்னால் சொன்னதுதான். அதுக்காக அந்த மாணிக்கத்து கூட எப்டி அனுப்புறது? யோசித்தாள் அஞ்சலம்.

அது ஒரு கட்டிடத்தொழில் நடைபெறும் இடம். அஞ்சலம் இந்த மேஸ்திரிகிட்ட வேலைக்கு சேர்ந்து ரொம்ப வருசம் ஆகிறது. இந்த கொத்தனார் மாணிக்கம் இருப்பதிலே மோசமானவன். அவன் இரட்டை அர்த்த பேச்சுகளும் அவன் பார்வையும்.

'த்தூ' என்று காரி துப்பி யிருக்கிறாள் அஞ்சலம். அவள் அண்ணன் கொஞ்சம் முரடன் அதனால் அவளளவில் அடங்கி விட்டான். அவனிடம் வேலைக்கு வருபவர்கள் அவனுக்கு அடங்கி போக வேண்டும்.
இல்லையென்றால் மாற்றிவிடுவான்.

நல்லவேலைக்காரன்.இதனாலே அவனை மேஸ்திரியாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.

"சனியன் உரலுக்கு சேலை கட்டினாலும் தூக்கி பாப்பான்"-இது அவனைப்பற்றி பல பெண்களின் கமெண்ட்.

அப்படிபட்ட மாணிக்கத்திடம் தன் வறுமையின் பொருட்டு சித்தாளாய் போகப்போகிறாள்.

புருசனும் கொத்தனார்தான்.கட்டிட விபத்தில் போய்ட்டான்.மூனு பெண் குழந்தைகள். ஆனால் இன்னும் வாளிப்பாகத்தான் இருந்தாள்.

அவள் வேலைக்கு போகிற இடமெல்லாம் அவள் அழகே அவளுக்கு எமனாக,.

ஒரு ஹோட்டல் அப்பறம் ஒரு சேட்டு வீடு... இப்படி பல கட்டத்தை தாண்டி இப்போ சித்தாளாக உருவெடுத்துள்ளாள்.

அஞ்சலம் அன்னத்தை பாவமாக பார்த்தாள்.

"நீ விடுக்கா நான் பாத்துக்குறேன்"

கொத்தனார்களிடம் சில சங்கேத வார்த்தைகள் உண்டு*(அதை இங்கு எழுத முடியாது)

அதை பெண்களிடம் பிரயோகித்து பார்ப்பார்கள். ஈ என்று இளித்தால் அவள் தொடர்வாள்.இல்லையென்றால் ஆள் மாறும்.சில பெண்கள் கல்லுமண்ணு தூக்க கஷ்டப்பட்டுக்கொண்டு அவனுக்கு இசைந்து போவார்கள்

மாணிக்கம் மடமடவென்று அன்னம் கல் எடுத்து கொடுக்க கற்களை அடுக்க ஆரம்பித்தான்.

"ஏய் அந்த அரைக்கல்லு எடு"

அவள் முக்கால் கல்லை எடுத்துக்கொடுத்தாள்

அவள் கலவையை குழைக்கும் போது அவன் கூப்பிட கூப்பிட காதுல வாங்காமல் குழைத்துக்கொண்டே இருந்தாள். அவன் கிட்ட வந்து தலையைத்தட்டி,

"ஏய் காது கேக்காதா?"

"நான் காலம்புறவே சாப்பிட்டேன்"

"ஏய் கடுப்ப கிளப்பாதடி காது கேக்காதா" என்று காதில் கை வைத்து கையை ஆட்டியபடி

"அவளும் கையை ஆட்டினாள்"

"யோவ் மேஸ்திரி இங்க வாய்யா ஒரு செவுட்டு பொணத்த இங்க கொண்டாந்து உட்டுட. ஆள மாத்துயா.இவள கட்டி என்னால மாரடிக்க முடியாது"

அடுத்த நிமிடம் எந்தவித இடையூறும் இல்லாமல் கல்லுமண்ணு தூக்கப்போனாள் நன்றாக காது கேட்கும் அன்னம்.

No comments:

Post a Comment