Wednesday, November 5, 2014

வெறுமை


ஜென் துறவி ஒருவர் காட்டுப் பிரதேசங்களில் அலைந்து திரிந்துகொண்டிருந்தார். அவருடைய மனத்தில் ஏதேதோ சிந்தனைகள். கேள்விகள். தியானத்தின்மூலம் அவற்றுக்கு விடை காண முயன்றார்.

ஒருநாள் அவர் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தார். ‘வெறுமை’யைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து அந்த மரத்திலிருந்து நூற்றுக்கணக்கான மலர்கள் உதிர்ந்தன. அவருக்கு வணக்கம் செலுத்துவதுபோல் அவர்மீது பொழிந்தன.
ஆச்சர்யத்தோடு நிமிர்ந்து பார்த்தார் ஜென் துறவி.

‘மரமே, எனக்கு ஏன் இந்த மரியாதை?’ என்று கேட்டார்.

மரம் சொன்னது. ‘வெறுமைபற்றி நீங்கள் பேசியது கடவுளுக்கு மிகவும் பிடித்துவிட்டது. உங்கள்மீது மலர் தூவி வணங்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்!’

‘வெறுமையைப்பற்றி நான் பேசினேனா? இல்லையே!’

‘உண்மைதான்’ என்றது மரம்.

‘நீங்கள் பேசவில்லை. நானும் கேட்கவில்லை. கடவுளும் கேட்கவில்லை. இதுதானே நிஜமான வெறுமை?’
மீண்டும் அவர்மீது மலர்கள் சொரிந்தன.

No comments:

Post a Comment