Wednesday, November 5, 2014

ஓர் இரயில் பயணம்

அந்த இளைஞன் பயணம் செய்துகொண்டிருந்தான்.காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. அவனிடம் நிறைய பணம் இருந்தது.சாப்பிடத்தான் மனம் இல்லை.

எங்கோ வெறித்தபடி எப்போது ஊர் போய் சேருவோம் என்ற கவலை வேறு.
பலமாதங்களாக வீட்டை பிரிந்த ஏக்கம்.
பெரும்பாலும் வழியில் விற்கும் பொருட்களை சாப்பிட பிடிக்காது அவனுக்கு.
இதோ இப்போது கொலைப்பட்டினியுடன்.

ஏதோ ஒரு நிலையத்தில் இரயில் நின்றது.
அவன் அருகே வந்து அமர்ந்தது ஒரு குடும்பம். நண்டுசிண்டுமாய் குழந்தைகள். கணவன் மனைவி.

அந்த குழந்தைகள் விளையாடுவதும் தம்பதிகள் இரகசியமாக கிசுகிசுப்பதும் பார்க்க இரம்யம். பசியை மறந்தான்.அவர்களை லயித்தான்.

என்ன அந்த பெண்ணுக்கு அவன் வயது இருக்கலாம்.பார்க்க அழகாக இருந்தாள். ஆனாலும் ஓர் ஓவியத்தை இரசிப்பது போல் அந்த குடும்பத்தை இரசித்தான். அவர்கள் தெலுங்கர்கள்.
இவனுக்கு தெலுங்கு தெரியாது.

அடுத்து, அந்தப்பெண் வீட்டில் இருந்து கொண்டு வந்த உணவுகளை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்தாள்.
அடுத்து கணவனுக்கும் கொடுத்தாள்.
அடுத்ததாக இவனுக்கும் ஒரு சிறிய தட்டில் கொஞ்சம் சோற்றை போட்டு கொடுத்தாள்.

இவனுக்கோ வெட்கம் தாங்க முடியவில்லை. பட்டினி கிடந்து இருக்கிறான் எத்தனையோ இரவுகள்.அரை வயிற்றோடு படுத்துள்ளான் ஆனால் இதுவரையிலும் யாசகம் கேட்டதில்லை.

இவன் வேகமாக தலையை இடவலமாக ஆட்டி மறுத்தான்.

ஆனால் அவள் விடவில்லை. சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கட்டாயப் படுத்தினாள். அவள் மொழி புரியாவிட்டாலும் கண்களின் பாஷையை புரிந்து கொண்டான். அதில் தெரிந்தது தாய்மை.

அவள் அன்று அவனுக்கு போட்டது கைப்பிடிச்சோறு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாகி விட்டது.இன்னமும் அந்தப்பெண்ணை-தவறு அந்த தாயை ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறான்.

அன்று பயணம் செய்தது நான்தான். இந்த பதிவு மூன்றாம் முறையாக பதிவு செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment