ஆதவன்
ஆதவன் என்ற பெயரைக் கேட்டாலே போதும் நான் நீ என்று சம்பளம் எல்லாம் வேண்டாம் அவர் படத்தில் தலைக் காட்டினால் போதும் என்ற முன்னனி நடிக நடிகைகள் இன்று அவரைப் பார்த்தாலே நழுவுகிறார்கள்.
கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் லைட்பாயாக, உதவி டைரக்டராக அதற்குப் பின் அசோசியட் டைரக்டர் என்று வளர்ந்து மெதுவாக எப்படியோ ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து முதன்முதலாக ஒருப் படத்தை இயக்கினார்.
சண்டைக்காட்சிகள் இல்லாமல், குத்தாட்டம் இல்லாமல் இயல்பான பாடல்காட்சிகளுடன் மிகக் குறைந்த செலவில் படம் வெளிவந்தது.
படம் வசூலை வாரிகுவித்ததோடு அல்லாமல் அவார்ட்களை அள்ளித்தந்தது.
எல்லாம் மூன்று படங்கள் வரைதான். நாலாவதாக சொந்தப்பட முயற்சியில் படுதோல்வி. ஒருவாரம் கூட நிற்கவில்லை.இரண்டாம் நாளே காலைக் காட்சி போடலாமா என்று ஆலோசித்தனர் தியேட்டர்க்காரர்கள்
"ஆதவன் அவன் அவ்வளவுதாய்யா. நான் சொல்லல. கலை கலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தா இன்டஸ்ட்ரில நிக்க முடியாது தெரியுமோ.அங்கங்க மசாலா தூவனும்". -அனுபவஸ்தர் ஒருவர்.
அடுத்து ஒரு தயாரிப்பாளர் உதவியில் படம் எடுத்தார். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டார்.
'ஆதவன் படத்துக்கு போவோமா கூட்டமே இருக்காது ' என்று காதலர்கள் பேசிக்கொள்ளுமளவிற்கு போய்விட்டது.
வீட்டில் மனைவி முகங்கொடுத்து பேசுவதில்லை. பிள்ளைகள் கிட்டே வர பயந்தார்கள். இனி யாரிடமும் உதவி டைரக்டர் என்று போய் நிற்க முடியாது.
என்ன செய்யலாம்?
இருப்பதை எல்லாம் விற்று பழைய கடன்களை அடைத்தார். ஓரிருவரை வைத்துக்கொண்டு மற்றவர்களை செட்டில் செய்து அனுப்பி வைத்தார்.
கையிலிருப்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தார். இதோட சரி.ஒன்னு இதுல நிலைச்சி இருக்கனும் இல்ல.எங்கேயாவது போய் டீ கிளாஸ் கழுவினாலும் சரி என்று முடிவெடுத்தார்.
மளமளவென்று புதுசா நடிக நடிகையை தேர்வு செய்தார். புது இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார். பாடல்களுக்கு இவர் சொன்ன மெட்டுக்களில் பாடல்கள் தயார் செய்தார். என்ன படம் என்ன கதை என்று யாருக்கும் புரியவில்லை. படம் கொஞ்சம் வளர்ந்தது. ஒளிப்பதிவாளர் பாதியில் கழண்டு கொண்டார்.
"என்னய்யா படம் எடுக்குறான்.ஒரு இழவும் புரியல"
ஒருவழியாக படம் முடிவடைந்தது.
கதை எங்கே என்று தேடுமளவிற்கு இருந்தது.
கதை இல்லாவிட்டாலும் பரவாயில்ல ஒரு கோர்வை வேண்டாமா?. குரங்கு மாதிரி ஹீரோ கோட்டான் மாதிரி ஹீரோயின். கலைப்படமா மசாலாப்படமா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. பாதியிலியே வினியோகஸ்தர்கள் எழுந்து விட்டனர்.
மெதுவாக சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரை வாடகைக்குப் பிடித்து காலை காட்சி மட்டும் திரையிட்டார்.
முதல் காட்சி பத்து பேர் கூட தேறாது. அடுத்த காட்சி போடலாமா வேனாமா? ,ஆலோசித்தார் தியேட்டர்க் காரர்.
அடுத்த நாள் காலைக் காட்சி கொஞ்சம் சுமாரானக் கூட்டம்
கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அடுத்தடுத்து கூட்டம் திமுதிமுவென.
'என்னமா படம் எடுத்திருக்கான்யா.சூப்பர்ல?'
பத்திரிக்கைகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தன. மளமளவென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் படம் பிய்த்துக்கொண்டு போனது.
இப்போது ஆதவனுக்கே ரசிகனின் மனநிலை புரியவில்லை.
"நான்தான் சொன்னேன்ல உண்மையான கலைஞனுக்கு அழிவு கிடையாதுய்யா ஆதவன் திரும்ப எழுந்து வருவான்னு சொன்னேன்ல இந்தா வந்துட்டான் பாத்தியா?"
-தூற்றிய கூட்டம் துதி பாடியது.
No comments:
Post a Comment