தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு............
ஈர்ப்பு
ஒரு மாலை வேளையில் ஓர் உணவகத்தில்தான் அந்த இளம்பெண்ணை சந்தித்தேன். ஏதாவது சாப்பிடலாம் என்று நினைத்து சர்வரை அழைக்க நினைத்த போது என் எதிரில் இரண்டு குழந்தைகளுடன் ஓர் இளவயது பெண் வந்து உட்கார்ந்தாள்.
" வணக்கம் சார்"
" வணக்கம்மா"
" என்னத் தெரியுதா சார்?"
" எனக்குத் தெரியலம்மா"
" முதல்ல இத பிடிங்க" என்றபடி ஒரு பூங்கொத்தை நீட்டினாள்.
" இது எதுக்கும்மா?"
" முதல்ல பிடிங்க, அப்பறம் இன்னைக்கு என்னோட ட்ரீட்"
" சாப்பிடுறேன். ஆனா காரணம் இல்லாத எப்படி?"
" முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் சொல்றேன்"
" சாப்பிட்டே ஆகனுமா?"
" ஆமாம், உங்கப் பொண்ணு வாங்கி கொடுத்தா சாப்பிட மாட்டிங்களா?"
" கண்டிப்பா, இந்த குழந்தைங்க?"
" என் குழந்தைங்கதான். இவ சாருமதி, பையன் ஆனந்த்.இவங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"
குழந்தைகளை ஆசிர்வதித்தேன்
" என்னோட பேரு கூட ஆனந்த கிருஷ்ணன் தான்"
" தெரியும் சார் உங்க பேர் தான் வச்சிருக்கேன்"
" என் பேர் எப்படி தெரியும்மா உனக்கு?"
" எனக்குத் தெரியும். சரி என்ன ஞாபகம் இருக்கா உங்களுக்கு?"
" சொன்னாதானே தெரியும்"
'" உங்களுக்கு ரொம்ப மறதி சார்"
" வயசாடுச்சிம்மா"
" சார் உங்களுக்கு அப்படி ஒன்னும் வயசான மாதிரி தெரியலயே. என்னோட பெயர் கலைமதி
" சரி எனக்கு எதுக்கு ட்ரீட் கொடுக்க ஆசை படுற கலைமதி?"
" யோசிங்க. இப்ப சாப்பிடுங்க"
அனைவருக்கும் உணவு வரவே சாப்பிட்டோம்"
" என்ன யோசிச்சிங்களா?"
" ஞாபகம் வரலயே கலை"
" நல்லவங்க அவங்க செஞ்ச நல்லத உடனே மறந்துடுவாங்க. சரி நானே சொல்றேன். நான் இப்ப ஒரு டாக்டர். குறிப்பாக சொல்லனுமுன்னா மகப்பேறு மருத்துவர். அன்பான கணவர் , பிஸ்னஸ் பண்றார். நல்ல மாமனார் மாமியார். இந்த ஊரிலயே ரொம்ப பெரிய குடும்பம்"
" ரொம்ப சந்தோசம்மா"
" இத்தனையும் நீங்க சொன்ன சின்ன அறிவுரை"
" நானா, எப்ப?"
" இதே இடத்துல"
" இதே இடத்துலயா?"
" அப்ப நான் +2 படிச்சிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுக்கே உள்ள சேட்டைகள், அடாவடி இதெல்லாம் எங்கிட்ட இருந்துச்சி. அதோட அந்த வயசுக்கே உள்ள பொய்யான ஈர்ப்பை காதல்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் நீங்க மண்டையில உரைக்கிற மாதிரி புத்தி சொன்னிங்க"
" இப்ப எனக்கு ஞாபகம் வருது கலை, ஒரு பையன் கூட ஸ்கூல் யூனிபார்ம்ல சாப்பிட வந்த, அந்த பையன் கை கழுவ போன சமயத்துல உன்ன நல்லா திட்டி விட்டேன்."
" யப்பா திட்டா அது ? நல்லா வெளுத்து வாங்கிட்டிங்க என்ன"
" இல்லம்மா, அறியா வயசுல ஏற்படுற ஈர்ப்பை காதல்னு நம்பி ஏமாந்து போற புள்ளைங்க நிறைய, அதான் வந்த கோபத்துல நல்லா திட்டினேன். நான் கூட அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன். அதோட அன்னைக்கு நீங்க இரண்டு பெரும் பண்ண சேட்டைகள், அளவு கடந்த நெருக்கம் எனக்கு கோபத்த வரவச்சிடுச்சி. அதுக்காக வருத்தப்படுறேன்"
" இல்லப்பா.... உங்கள அப்பான்னு கூப்பிடலாம்தானே?
" தாராளமா"
" அன்னைக்கு ரொம்ப அழுதேன். அப்பறம் யோசிச்சு பாத்தேன். யாரோ முன்னபின்ன தெரியாதவங்க ஏன் நம்மை திட்டனுமுன்னு. அப்பறம் காதலை மூட்டை கட்டி வச்சிட்டு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன்"
" அந்த பையன்?"
" சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விலகிட்டார்"
" விலகிட்டார்? ரொம்ப நல்ல பையன் போலிருக்கு"
" அதனாலதான் நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"
" ஓ...!
" எனக்கு வேலை கிடைச்சப்ப, அவர் அவங்கப்பாவோட வியாபாரத்தை கவனிச்சிக்கிட்டு இருந்தார். இதோ இதே இடத்துலதான் என் காதலை அவர்கிட்ட சொன்னேன்"
" ரொம்ப சந்தோசப் பட்டார். இரண்டு வீட்டலயும் சம்மதிச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம் இப்ப நான் சிட்டியில பேமஸ் டாக்டர்."
" ரொம்ப சந்தோசம்மா"
" அப்பா, நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ஒருநாளைக்கு"
" கண்டிப்பா வரேன் மா"
கலைமதி கொடுத்த விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டு வாழ்த்தி விட்டு விடைபெற்றேன்.
No comments:
Post a Comment