ghost
நண்பர்களுடன் செகண்ட் ஷோ பார்த்து விட்டு விசில் அடித்தபடியே தன் அறைக்கு திரும்பிய பரத் தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான்.
மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தான்.
ஏதோ நிழலாடுவது போல் இருந்தது.
கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நடந்தான்.
திரும்பவும் யாரோ பின் தொடர்வது போல் இருந்தது .
மெதுவாக திரும்பிப் பார்த்தான்.
தெருநாய் ஒன்று வந்து கொண்டிருந்தது.
" ச்சே இதுக்கா பயந்தோம்"
தன்னைத்தானே தேற்றியபடி அறைக் கதவைத் திறந்தான். பேண்ட்டை கழட்டி லுங்கிக்கு மாறிய பரத் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து லாவகமாக புகையை
இழுத்தபடி மொபைலை எடுத்தான்
அது சார்ஜ் முழுவதும் தீர்ந்து எப்பவோ உயிரை விட்டிருந்தது
சார்ஜரில் மொபைலுக்கு கனைக்சன் கொடுக்கும் போதுதானா மின்சாரம் போக வேண்டும்.
அப்போதுதான் கவனித்தான்.
ஏதோ கரக் மொரக் என்ற சப்தம்
மேஜை டிராயரில் இருந்த பென்சில் டார்ச்சை எடுத்து அடித்துப் பார்த்தான்
ஒரு எலி பழைய புத்தகங்களை பிராண்டிக் கொண்டிருந்தது.
விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும்
பயந்து போன எலி கண்ட படி ஓடத் துவங்கியது.
எலி ஓடும் பாதையில் டார்ச்சை திருப்பிய பரத் டார்ச்சை கையிலிருந்து தவற விட்டான்.
கீழே விழுந்த டார்ச் விழுந்த வேகத்தில்
இங்குமங்கும் உருண்டது.
டார்ச்சை எடுக்கத் திரும்பிய பரத் அந்த சிறிய வெளிச்சத்தில் ஒருப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.
'அறையை உள்ளே பூட்டி விட்டுத்தானே வந்தேன். அப்படியென்றால்?.........'
- தொடரும்
பேய்க்கதை மன்னன் எழுத்தாளர் ஏகாம்பரம் அடுத்த நாள் பத்திரிகைக்கு கொடுக்க வேண்டிய கதையை எழுதி முடித்ததும் மின்சாரம் துண்டித்து போனது.
அப்போது தன்னைத்தவிர இன்னொரு ஆள் அறையில் இருப்பது போல் உணர்ந்தார்.
கைகால்கள் தந்தியடிக்க முகமெல்லாம் வியர்த்துப்போய் இருட்டில் மொபைலைத் தேடினார்.
அப்போது இரண்டு கைகள் பின்னாலிருந்து அவர் உடலைப்பற்றி இழுத்து அணைத்தது.
ஏகாம்பரம் பயந்து நடுங்கியபடி குழறிய வார்த்தைகளில்
" ஏய் நீ யாரு? கதவ பூட்டித்தானே வச்சேன் எப்படி உள்ள வந்த,உனக்கு என்ன வேணும்?" என்றார்.
கலகலவென்று சிரித்த அந்த உருவம்
" எனக்கு உன் உயிர்தான் வேண்டும் " என்றது.
" ச்சே நீதானா? நான் பயந்தே போய்ட்டேன், ஊரிலிருந்து எப்ப வந்த?"என்றார் சிரித்தபடி.
" இப்பத்தான் வந்தேன், வந்த நேரம். கரண்டு போயிடுச்சி. மெதுவா சாவிய போட்டு திறந்தேன். கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு பாத்தேன். இப்படி நடுங்குறிங்க"
' இதுக்கு அந்த பேயே வந்திருக்கலாம்'
'' என்ன வாய்க்குள்ள முனகுறிங்க"
" ஒன்னுமில்லம்மா. வெளிய சொல்லிடாத பொண்டாடிக்கு பயந்தவன்னு காரி துப்புவாங்க"
No comments:
Post a Comment