ஸஸேமிரா
~~~~~~~
நந்தன் என்று ஓர் அரசன். அவனுக்கு மதிநுட்பம் வாய்ந்த சுதன் என்றொரு மந்திரி. சுதனின் மதிநுட்பத்தால் நந்தன் தன் எல்லைகளை விரிவு படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.
நந்தனின் பட்டமகிஷி பானுமதி.
பானுமதி யாராலும் வர்ணிக்க முடியாத அளவிற்கு கொள்ளை அழகு வாய்ந்தவள்.
இவர்களின் பட்டத்து இளவரசன் ஜெயபாலன்.
நந்தன் தன் மகாராணியின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தான். அரசனுக்கு தன் மகாராணியை ஓவியம் வரைய நினைத்தான் இதற்காக நாட்டில் தலைசிறந்த ஓவியனை வரவழைத்து ஓவியம் வரையச் சொன்னான்.
ஓவியனும் மிகச் சிறப்பாக ஓவியத்தை வரைந்து முடித்தான். அரசன் அளாவிலா மகிழ்ச்சி கொண்டான்.ஓவியம் அத்தனை தத்ரூபமாக அமைந்திருந்தது.
ஆனால் நாட்டின் ராஜகுரு ஓவியனைப் பார்த்து இந்த ஓவியத்தில் ஒரு பிழை உள்ளது என்றார்.
அரசன் கேட்டான்,
"அப்படி என்ன பிழை உள்ளது ராஜகுருவே?"
"மகாராணியின் தொடையில் எள்ளளவு மச்சம் ஒன்று உண்டு.அது ஓவியத்தில் இல்லை" என்றார் ராஜகுரு.
அந்த நிமிடம் முதல் அரசனின் நிம்மதி பறி போயிற்று.
'மகாராணியின் மச்சம் ராஜகுருவுக்கு எப்படி தெரிந்தது?'
உடனே மந்திரி சுதனை அழைத்து,
இந்த ராஜகுருவை சிரச்சேதம் செய்து விடுங்கள் எனக் கட்டளை இட்டான்.
சுதனுக்கும் ராஜகுரு ஒரு உத்தமமான மனிதர் என்று தெரியும். இருந்தாலும் அரசனின் கட்டளை ஆயிற்றே.
ராஜகுருவோ,
"என்னைப் போய் அரசன் சந்தேகப் பட்டானே, பானுமதி என் மகள் போல் அல்லவா?" என்று அழுது புலம்பினார்.
"ராஜகுருவை தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டு,
அரசனிடம்
ராஜகுருவை சிரச்சேதம் செய்து நானே என் கையால் புதைத்து விட்டேன்" என்றான்.
அரசனும் மந்திரி மேல் உள்ள நம்பிக்கையால் சரியென்றான் இருந்தாலும் அரசனுக்கு உள்ளூர வருத்தம் ராஜகுருவை இழந்தது.
இது இப்படி இருக்க, ராஜகுமாரன் ஜெயபாலன் வேட்டைக்கு கிளம்பினான் அப்போது மந்திரியின் குமாரன் ராஜகுமாரனை தடுத்து சகுனம் சரியில்லை இப்போது வேட்டைக்கு போவது தங்களுக்கு ஆபத்து என்றான்.
ராஜகுமாரனோ மந்திரிகுமாரனின் பேச்சை கேட்காமல் வேட்டைக்கு கிளம்பினான்.
காட்டில் பல மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடினான்.
பொழுதான சமயம் புலி ஒன்று இவனை துரத்தியது. புலிக்கு பயந்து பதற்றத்தில் கையில் இருந்த வில் அம்புகளை போட்டு விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். மரத்தின் மேல் அவனுக்கு இன்னோர் ஆபத்து காத்திருந்து.
மேலே கரடி ஒன்று உட்கார்ந்து இருந்தது.
மேலே கரடி, கீழே புலி
செய்வதறியாது திகைத்தான்.
அப்போது, ராஜகுமாரன் கரடியைப் பார்த்து சொன்னான்
"என்னை மரணபயம் ஆட்டுவிக்குறது தயவு செய்து என்னை புலியிடமிருந்து காப்பாற்று எனக்கு அடைக்கலம் தா"
கரடி சொன்னது,
"ராஜகுமாரனே பயப்படவேண்டாம், நான் உனக்கு அடைக்கலம் தருகிறேன். வாருங்கள். அடைக்கலம் புகுந்தவர்களை காப்பாற்றுவதே மரபு."
கீழே புலி,
எப்படியும் இவன் கீழறங்கித்தானே ஆக வேண்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தது.
நேரமோ இருட்டிக் கொண்டே வந்து இரவும் ஆனது.
அப்போது, கரடி சொன்னது,
"ராஜகுமாரனே என் மடியில் படுத்து உறங்குங்கள்.இப்போது அந்த புலி போகிற மாதிரி தெரியவில்லை. எப்படியும் காலையில் போய்விடும் அதன்பிறகு நாம் கீழே இறங்கலாம்"
ராஜகுமாரனும் கரடியின் மடியில் படுத்துக் கொண்டான்.
அப்போது புலி கரடியைப் பார்த்து சொன்னது.
"ஏ கரடியே நாம் ஓரினம் இவன் மானுடன் எப்படி பார்த்தாலும் நமக்கு இவன் பொது எதிரி. இவனால் இந்தக் காடே நாசம் அடையும். அவனை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன்"
அதற்கு கரடி,
"புலியே,இப்போதைக்கு இவன் என்னிடம் அடைக்கலம் புகுந்தான்.அடைக்கலம் புகுந்தவர்களை காப்பதே சாஸ்திரம்.நான் இவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் உயிரை காப்பதாய்,நான் சத்தியத்தை மீறுவதாக இல்லை" என்றது.
சற்று நேரம் கழித்து கரடி ராஜகுமாரனை எழுப்பி,
"ராஜகுமாரா, நான் கீழே விழுந்து விடாமல் நீ பார்த்துக் கொள் நான் சற்று நேரம் உறங்கிக் கொள்கிறேன்" என்று உறங்கி விட்டது.
அப்போது புலி, ராஜகுமாரனைப் பார்த்து,
"ராஜகுமாரா, கரடி ஏன் உனக்கு அடைக்கலம் தந்தது என்று நீ யோசிக்கவில்லையா? நான் போனபிறகு உன்னை கொன்று சாப்பிடத்தான். பேசாமல் கரடியை கீழே தள்ளி விடு. நான் உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.
ராஜகுமாரனும் தனக்கு அடைக்கலம் தந்தது கரடி என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் நன்றி மறந்து கரடியை கீழே தள்ளி விட்டான்.
கரடியின் நல்ல நேரம் கீழே விழ இருந்த கரடியை ஒரு கிளை தடுத்து விட்டது. உடனே கரடி ஒரு முனிவராக மாறினார்.
ஆம் முனிவர்தான் கரடியின் உருவில் இருந்தார்.
முனிவர் ராஜகுமாரனைப் பார்த்து சொல்கிறார்.
"நன்றி இல்லாத கீழ் மகனே, பயப்படாதே உன்னைப் போல் நான் செய்ய மாட்டேன்.ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். நான் உன்னை சபிக்கிறேன். நீ உன் சுய நினைவு மறந்து சித்தபிரமை பிடித்து அலைய வேண்டும்
உனக்கு 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் நினைவில் இருக்காது. எப்பொழுதும் அதே வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டு இருப்பாய்"
பயந்து போன ராஜகுமாரன், முனிவரின் காலில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்க வேண்டினான்.சாப விமோசனமும் வேண்டினான்.
அதற்கு முனிவர்,
"சாபம் கொடுத்தது கொடுத்தது கொடுத்ததுதான்.இருந்தாலும் உனக்கு ஒரு பரிகாரம் சொல்கிறேன். என்று நீ இந்த ஸஸேமிரா என்ற வார்த்தையின் பொருளை ஒரு தர்மாத்மாவின் வாயால் கேட்டு உணர்கிறாயோ அன்று நீ சுயநினைவை அடைவாய்" என்றார்.
அதற்குள் விடிந்து விட்டது. புலியும் போய் விட்டது.
அங்கே அரண்மனையில் மகனை காணாமல் ராணி அழுது புலம்பினாள்.
அரசனும் மந்திரியும் படைகளுடன் வந்து ராஜகுமாரனைத் தேடி கண்டு பிடித்து அழைத்து சென்றனர்.
அரசன் தன் மகனுக்கு உலகின் அத்தனை வைத்தியர்களையும் அழைத்து சிகிச்சை அளித்தான்.ஆயினும் குணம் ஆகவில்லை.
அப்போது அரசன் சொன்னான் மந்திரியிடம்,
"ராஜகுரு இப்போதிருந்தால் ஏதாவது உதவி செய்வார்.ஆராயாமல் அவசரப் பட்டு நான் அவரை கொன்று விட்டேன்"
என்றான்.
மந்திரி,
"அரசே கவலைப் படாதீர்கள்,நான் ஏதாவது வழி கிடைக்குமா என்று ஆலோசிக்கிறேன்" என்று கூறி விட்டு தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த ராஜகுருவிடம் கலந்து ஆலோசிக்கிறான்.
மறுநாள் ராஜகுருவின் ஆலோசனைப் படி மந்திரி அரசனிடம் சொல்கிறான்,
"அரசே என் வீட்டில் ஓர் இளம் பெண் இருக்கிறாள், தன்னை வந்து இளவரசன் பார்த்தால் ஏதாவது வழி சொல்கிறேன் என்கிறாள்,இதையும்தான் முயற்சித்து பார்ப்போமே"
அதற்கு அரசனும் சம்மதிக்க, ராஜகுமாரன் மந்திரியின் வீட்டில் உட்கார வைக்கப் படுகிறான்.அவன் எதிரே ஒரு திரைச்சீலை. மறுபுறம் ராஜகுரு.
ராஜகுமாரன், எப்போதும் போல் 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை முனுமுனுக்கிறான்.
அதை கேட்ட ராஜகுரு அம்பிகையை தியானித்து அந்த வார்த்தையின் அர்த்தங்களை கேட்டார்.
அம்பிகையும் அந்த ஸ ஸே மிரா என்ற நான்கு எழுத்துக்களுக்கான நான்கு சுலோகங்களை அவர் காதில் உச்சரித்தாள்.
ராஜகுரு அந்த வார்த்தையின் முதல் எழுத்தான ஸ என்ற எழுத்தின் அர்த்ததை சொல்ல தொடங்கினார்
ஸ
"ஸத் குணங்களை நம்பிக் கொண்டிருக்கும் ஒருவனை ஏமாற்றுவதில் என்ன புத்திசாலித் தனம் உள்ளது மார்பில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை கொல்வதில் என்ன வீரம் உள்ளது"
அடுத்து ராஜகுமாரன் ஸேமிரா என்றான். காரணம் அவனுக்கு ஸ என்ற எழுத்தின் அர்த்தம் தெரிந்து விட்டது.
ராஜகுரு சொல்கிறார்,
ஸே
"கங்கையில் குளித்தால் பிரம்மஹத்தி தோசம் போய்விடுகிறது.ஆனால் உற்ற நண்பனுக்கு துரோகம் செய்பவனுடைய பாவம் விலகுவதில்லை.பாவத்தின் தன்மையை பொறுத்து தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்"
அடுத்து 'மிரா ' என்றான் ராஜகுமாரன்.
'மி'
ராஜகுரு சொல்கிறார்:
"மித்திர (நண்பன்)துரோகி, நன்றியில்லாத மனிதன், நம்பிக்கை துரோகி இம்மூவரும் சந்திர சூரியர் இருக்கும் வரை நரகத்தில் கிடப்பர்.
அடுத்து, ரா என்றான்.
ராஜகுரு சொல்கிறார்,
'ரா'
ராஜனே உன் மகனின் நலத்தை உண்மையில் நீ விரும்பினால் அறிஞர்களை போற்று.அவர்களுக்கு பரிசுகளை கொடு
என்று நான்கு சுலோகங்களை சொல்லி முடித்தார்.
ராஜகுமாரன் சுயநினைவுக்கு வந்து காட்டில் நடந்த விபரங்களை சொல்கிறான்.
அப்போது அரசன் சொல்கிறான்,
"அழகிய பெண்ணே நீ யார்? காட்டில் நடந்த விபரங்கள் உனக்கு எப்படி தெரியும் "
திரைச்சீலையின் மறைவில் இருந்த ராஜகுரு பெண் குரல் விடுத்து,
"எனக்கு நான் வணங்கும் அம்பிகை தேவி அருள் செய்கிறாள்.அவள் எனக்கு எல்லா விசயங்களையும் அறிய செய்கிறாள். அதுபோலவே மகாராணியின் தொடையில் இருந்த மச்சம் என்னுடைய ஞான திருஷ்டியால் கண்டு கொண்டேன்.அதைதான் நான் சொன்னேன் என்கிறார்.வ
அரசன் திரைச்சீலையைப் பிடித்து இழுக்கிறான் ராஜகுரு வெளிப் படுகிறார்.
மந்திரி சுதனும் ராஜகுருவை தான் மறைத்து வைத்த ரகசியங்களை சொல்கிறான்.
அரசன் ராஜகுருவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்து அருளுமாறு மண்றாடுகிறான். ராஜகுரு அரசனை மன்னித்து ஆசிர்வதிக்கிறார்.
குறிப்பு: இந்தக் கதை விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதாக சொல்லப் படுகிறது