Friday, December 19, 2014

அது கிராமத்து பண்ணை வீடு

சுற்றிலும் வயல்கள் நடுவில் இரண்டு கூரை வீடுகள். வீட்டிற்கு அருகிலியே பெரிய பெரிய பாறை கிணறுகள்.மழைநாட்களில் வரப்புகளில் நடந்து கொண்டே கிணறுகளின் தண்ணீரை காலால் எத்தலாம்.

தாறுமாறாய் உள்ளே குதித்தால் பாறை குத்தி கிழித்து விடும்.

கவலை போட்டுத்தான் தண்ணீர் இறைப்பார்கள் வயல்களுக்கு.

பாறையின் இடுக்குகளில் குபுக் குபுக் என தண்ணீர் கொட்டுவது ரம்மியம்.

இடை இடையே நெளியும் பாம்புகளை கண்டால் பவ்யம்.

அந்த வீடுகளில் காசு பணம் இருக்க வழியில்லை. மூட்டை மூட்டையாக கம்பும், சோளமும், நெல்லும் , எள்ளும், வெல்லமும்-(அப்போதெல்லாம் சர்க்கரை ஆலைகள் ஏது?)
அடுக்கப் பட்டிருக்கும்.

திருடர்கள் அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

அந்த வீட்டில் உறுப்பினர்கள் அதிகம். வயதுக்கு வந்த பெண்கள்(என் சித்திகள்), குழந்தைகள்(மாமா பிள்ளைகள்)
,புதிதாய் கல்யாணம் செய்த சின்னமாமி வரிசையாக தூங்கி கொண்டுருந்தார்கள்.

திருடன் வந்ததும் முதலில் விழித்தது என் நடு சித்தி.

என்ன செஞ்சாங்க தெரியுமா?

கண்ண கெட்டியா மூடிக்கிட்டாங்க

திருடர்கள் சோற்று பானையை கூட விட வில்லை.
அந்த வீட்டில் அடுப்பு எப்பவும் அனையாது.
கம்பஞ்சோறு , சோளசோறு பெரிய பானையில் ஆக்குவாங்க வயல்களில் வேலை செய்பவர்களுக்காக.

அந்த வீட்டிற்கு யார் எப்போது போனாலும் பசியாறலாம்.

அந்த பானையை கூட விடவில்லை வந்தவர்கள்

மறுநாள் திருடர்கள் யாரென்று தெரிந்து என பெரிய மாமா அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்.

உடன்படிக்கையின் சாராம்சம்:

இனி எங்கள் வீட்டில் திருட கூடாது
வருடம் ஒரு முறை உங்களுக்கு காணிக்கை கொடுக்கப்படும். காணிக்கை என்றால் பணம் அல்ல. விளைப் பொருட்கள்.

அதன் பிறகு அவர்கள் அங்கு திருட வர வில்லை.

கொஞ்ச நாள் கழித்து சித்தி சொன்னாங்க

"எனக்கு திருடங்க வந்தது தெரியும்"

"ஏன்டி சத்தம் போடல?"

"என்ன கொன்னுபுட்டானா?"

Friday, December 5, 2014

இன்று கார்த்திகை தீபமாமே
எனக்கொன்றும்
புரியவில்லை
மாலையும்
மயக்குகிறது
கொஞ்சம்
விளக்கிடேன்
ஒளி பரவட்டும்
அகத்திலும்
புறத்திலும்.

Tuesday, December 2, 2014

உன் முதல் நகர்த்தலிலேயே
என் ஆட்டம் களை கட்ட
துவங்கி விடுகிறது.

உதிர்த்துக் கொண்டே
இருக்கிறாய்
கோர்த்துக் கொண்டே
இருக்கிறேன்
உன் வார்த்தைகளை,
உதிர்ந்து போவது
நான் என்பது
அறியாமல்.
****-***********
******************

கசங்கிய காகிதம்
சொல்லிச் செல்கிறது
கசந்த நட்பு
புதுப்பிக்க முடியாதென்று.
***************

குபேரமூலையில்
பணப்பெட்டியை
வை, அடுக்கடுக்காய்
பெருகும் என்றார்.

நானும் அடுக்கி வருகிறேன்
அடகு கடை ரசிதுகளை.

********-**-******-*-*-*-*
**-*--**********************

Saturday, November 29, 2014


நரை விழுந்து நடை தளர்ந்து
பல் உதிர்ந்து கன்னம் ஒட்டி
தடி ஊன்றி தட்டுத்தடுமாறி
வாழ்ந்து முடிந்த
வயோதிகனைப் போல்
நானும் ஓர் ஓரமாய்
என் வழி தோன்றல்களுக்கு
வழி விட்டபடி...

சிலர் வாழ்க்கையை
தள்ள போராடியபடி
இவர்களின் வாழ்க்கை
தள்ளுவண்டியில்
போராடியபடி......

Friday, November 28, 2014

வாழ்க்கை வளமாய் அமைய:

உங்கள் அன்பிற்குரியவரின் முட்டாள்தனங்களை பெரிது படுத்தாதீர்கள்.

அதேவேளை உங்கள் முட்டாள்தனங்களை நக்கல் அடிக்கப்படும் போது அவர்களோடு சேர்ந்து சிரியுங்கள்.
------------------------
உங்களை அறிவாளி போல் காட்டிக்கொள்ளாதீர்கள்

உங்கள் அன்பிற்குரியவர் மிகுந்த அறிவாளி போல் சித்தரியுங்கள்.
--------------------------
நீங்கள் மிகவும் அழகென்று பீற்றி கொள்ளாதீர்கள்

அதே சமயம் உங்கள் அன்பிற்குரியவர் மிகவும் அழகென்று புகழுங்கள்.
--------------------------

எதிலும் உங்கள் அன்பிற்குரியவரிடம் கலந்து முடிவெடுங்கள்.
உன்னை கலக்காமல் எதுவும் செய்ய மாட்டேன் என்று நம்ப வையுங்கள்
அதன்படி நடந்து காட்டுங்கள்.

முக்கியமாய் உங்கள் அன்பிற்குரியவருக்கு பிடிக்காத எதையும் செய்யாதீர்கள்.

உங்கள் அன்பிற்குரியவரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுங்கள்.

அதிமுக்கியமாய் உங்கள் அன்பிற்குரியவரிடம் பொய் சொல்லாதீர்கள்.

இல்லறத்தின் பலதவறுகள் நீங்கள் சொல்லும் முதல் பொய்யிலிருந்து ஆரம்பம் ஆகிறது.

வாழ்க்கையை ரசிக்க அறிவாளி ஆக இருந்தால் மட்டும் போதாது..

கொஞ்சம் முட்டாள்தனமும் தேவைப்படுகிறது.

பெரும்பாலும் நான் முட்டாளாகவே இருக்கிறேன்.

கலையாத கனவுகளும்
நீங்காத நினைவுகளுமாய்
வாழ்க்கை,
கனவுகளும் நினைவுகளும்
தொடரும் என்ற நம்பிக்கையில்

Thursday, November 27, 2014

ஒரு சுப கதையை சோக கதையாக மாற்றி உள்ளேன்


ஒரு சிறுவன், ஒரு அழகிய சிறுமியின் புகைப்படத்தை தெருவிலிருந்து கண்டு எடுக்கிறான்.
பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொள்கிறான்.
அந்த சிறுமி எங்காவது தென்படுகிறாளா என்று பார்க்கிறான். அவளை காணவில்லை.
தினமும் அவளை தேடுகிறான்.
அந்த படத்தை தன் புத்தக பெட்டியில் பத்திரமாக வைக்கிறான்.
நான் பெரியவானாகி இவளையே திருமணம் செய்வேன் என்று நினைக்கிறான்.

காலம் மாறுகிறது. சிறுவன் இப்போது இளைஞன். நன்கு படித்து நல்ல வேலையும் கிடைக்கிறது.
அவனுக்கு திருமணமும் நடக்கிறது.இருப்பினும் அந்த சிறுமியை மட்டும் மறக்க முடியவில்லை.
இந்நேரம் அவளுக்கும் திருமணம் ஆகி இருக்கலாம். இங்குதானெ எங்காவது இருப்பாள் என நினைக்கிறான்.

அவனை திருமணம் செய்த பெண்ணும் மிக அழகானவள். அதை விட அன்பானவள்.
மனைவியின் அன்பில் அந்த சிறுமியை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கிறான்.

அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது.
குழந்தை தாயைப்போலவே கொள்ளை அழகு.

ஒரு நாள்

மறு நாள் தங்கள் திருமணநாள் ஆதலால், வீட்டை சுத்தம் செய்தாள்.
கணவன் வேலைக்கு போய்விட்டான்.
ஒரு பக்கமாக சுத்தம் செய்யும் போது அந்த பழைய புத்தகப் பெட்டியை திறந்து பார்க்கிறாள்.
அதில் அந்த சிறுமியின் படத்தை பார்க்கிறாள்.

பார்த்தவளின் முகம் ஒரு கணம் மலர்ந்து மறுகணம் கேள்வி குறியானது.

இந்த படம் இங்கு எப்படி வந்தது?
மீண்டும் அந்த படத்தை அங்கேயே வைத்தாள்.

கணவன் வீட்டுக்கு வந்ததும் அதைப்பற்றி கேட்டாள்.

அவன், தன் சிறுவயது காதல்கதையை சொன்னான்.

அவளுக்கு தாங்க முடியாத சந்தோசம்.
நான் இப்படியொரு பாக்யம் செய்தவளா? எனக்கு இப்படி ஒரு அன்பு கணவனா?

இல்லாயா பின்னே? அந்த படத்தில் இருந்தது அவள் அல்லவா?

நான்தான் அந்த சிறுமி என்று சொல்ல நினைத்து பின் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

'வேண்டாம். நாளை எங்கள் திருமண நாள் அல்லவா? இன்று சொல்வதை விட நாளை நல்ல பரிசு பொருளுடன் சொன்னால் நன்றாக இருக்கும்'

மறுநாள் காலை குழந்தையை கணவனிடம் விட்டு விட்டு பரிசு பொருட்கள் வாங்க கடைக்குப் போனாள்.

கணவனுக்கு நல்ல விலையுயர்ந்த பரிசு ஒன்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டும் தெருவில் இறங்கி நடந்தாள்.

நடந்தாள் என்று சொல்வதை விட வானத்தில் பறந்தாள் என்றே சொல்லலாம்.

வீட்டுக்குப்போய் கணவனிடம் நான்தான் அந்த சிறுமி என்று சொன்னால் தன் கணவன் எப்படி மகிழ்வான் என்று என்னியபடி வந்தாள். அவளுக்கு நிலை கொள்ள வில்லை. எப்போது வீடு போய் சேர்வோம் என்று ஒரே ஆவல். அவளுக்கு வானத்தில் பறப்பது போல் ஒரு பிரமை.

ஆம் அவள் வானத்தில்தான் பறந்தாள்.

எங்கிருந்தோ வந்த ஒரு வாகனம் அவளை தூக்கி எறிந்தது.

அவள் பரிசு பொருட்கள் தெருவிலே.

ஒரு உண்மை யாருக்கும் தெரியாமல் குழி தோன்டி புதைக்கப்பட்டது, அவளையும் சேர்த்து.

இரண்டாம் பாகம்:

மனைவி போன சோகம் இருந்தாலும் தன் குழந்தைக்காக உயிர் வாழ்ந்தான் அவன்.
குழந்தை தாயை போலவே வெகு அழகு. மிகவும் அறிவு.
குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தாள். பள்ளிக்கு செல்லவும் ஆரம்பித்தாள்.
குழந்தையின் அன்பில் மனைவியின் பிரிவை மறந்தான்.
அதே சிரிப்பு, அதே நடை, அதே அழகு, அதே அன்பு.. அதே............

ஏதோ பொறி தட்டியது அவனுக்கு.
வேகமாய் ஓடிப்போய் தன் புத்தக பெட்டியை திறந்து அந்த புகை படத்தை பார்த்தான்.

அதில்..... அதில் அவனு குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்படியென்றால்?

அவனுக்கு எல்லாமே புரிந்து விட்டது. அவன் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான்........

பெண்

பெண் - யார் இவள்?

நம்மை காக்க வந்த கடவுளா?

இல்லை நம்மை அழிவிலிருந்து மீட்க வந்த தேவதையா?

இங்கே நம் இதிகாசங்களில் கூட பெண்ணுக்கே முதலிடம்.

சீதை இல்லாமல் இராமயணம் இல்லை.
பாஞ்சாலி இல்லாமல் மகாபாரதம் இல்லை.

சரி இவைகளை கற்பனை கதைகள் என்று ஒதுக்கி விடலாம்.

சிலப்பதிகாரம்?

கண்ணகியும் மாதவியும் இங்கே.

பெண் சரித்திரம் படைத்திருக்கிறாள், பல சரித்திரங்களை உடைத்திருக்கிறாள்.
சரித்திரங்களை புரட்டி பார்த்தால் உண்மை புரியும்.

ஒருவனுக்கு குழந்தையும் அம்மாதான்.
மனைவியும் அம்மாதான்.
எல்லா சுப காரியங்களுக்கும் பெண்ணுக்கே முதலிடம்.

இப்படி பட்ட பெண்ணை வணங்க வேண்டாம்.
குறைந்த பட்சம் அவளும் ஒரு மனுசி என்று அங்கிகரித்தாலே போதும்.

என் வளர்ச்சிக்கு காரணம் என் மனைவிதான். என் தாரம் எனக்கே ஆதாரம்.

பெண்மையை போற்றுவோம்
பெண் கல்வி அளிப்போம்
அவளுக்கும் ஆணில் சரிபாதி அளிப்போம்.
வாழ்க பெண்கள்.

வலி


கோடிஸ்வரனோ கோவனான்டியோ ஒரு குடும்பத்தின் முதல் வாரிசு என்பது ஒரு வரம்.

ஆண்குழந்தை பிறந்துள்ளது என்ற கடிதம் கண்டதும் ஓடோடி வந்தேன் மருத்தவமனைக்கு.

என்னை கண்டதும் என் மனைவியின் முகத்தில் வெற்றி பெருமிதம்.

புதிதாய் பூத்த பூந்தளிரை கையில் எடுத்............

"அம்மாஆஆஆஆஆஆஆஆ"

அந்த மருத்துவமனையே கிடுகிடுக்கும் அலறல்.

என் உடல் ஒரு வினாடி தூக்கி போட்டது.

'என்ன?'

மனைவியை நோக்கினேன்

"ஆம்பளங்களுக்கு என்ன செத்த நேரம். எங்கள பாத்திங்களா? ஒருத்தி குழந்தை பெற்று விட்டாள்"

முதன்முதலாய் பெண்ணின் வலியை உணர்ந்தேன்.

என் கையில் இருந்த பூந்தளிர் அழகாய் முறுவலித்தது.

வெட்ட வெட்ட துளிர்விடும்
மரத்தைப்போல் நீ
திட்ட திட்ட பூக்குதடி
காதல்.

நேசம்


தூரலின் நேசம்
அது மண்ணின் வாசம்

இதயத்தின் நேசம்
அது நட்பின் சுவாசம்

நீங்கள் என் சுவாசமாய்
இருக்கும் வரை

என் நேசம்
உங்களுடன் பேசும்.

பிள்ளைப் பருவம்


அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு கதை கேட்ட அந்த நாட்கள்
பள்ளி விட்டு வந்து வீதியில் ஓடி விளையாடிய பிள்ளைப்பருவம்

ஊரே அடங்கிய வேளையிலும்
திருச்சி வண்டி எனப்படும் கடைச வண்டி வரும் வரை ஒளியல் பிடித்து, குச்சி எடுத்து வரும் அப்பாவை கண்டு ஒளிந்த நாட்கள்

சனி ஞாயிறு இரண்டு நாட்களும் எங்கள் கால்கள் சுற்றாத காடுமேடு இல்லை
சுவைக்காத பழங்கள் இல்லை.

மழை வந்தால் போதும்
ஏரிக்கு போய் களிமன் கொண்டுவந்து
விதவிதமாய் பொம்மைகளும் வண்டிகளும் செய்த நாட்கள்.

வேகமாய் ஓடிவந்து மல்லிகாவின் மேல் மோதிவிட்டு இருவருமே விழுந்த நாட்கள்.

ஆற்றினிலே குதித்துவிட்டு
அம்மாவிடம் அடி வாங்கியது.

பதின்பருவம்

வாய்க்கால் கரை புரண்டோடும்
என் மனமும் கழைகூத்தாடும்

எனையொத்த பெண்ணெவளும் இருந்து விட்டால்
பாய்ந்திடுவேன் தலைகீழாக.

அந்த காலம் இனிமேலும் வராது

என் பிள்ளைகளுக்கும் கிடைக்காது

விருந்தோம்பல்


புதுசா ஒரு வீட்டுக்கு போறிங்க.
அவங்க எப்படி அவங்க பழக்கவழக்கம் எப்படி இருக்கும் எதுவும் உங்களுக்கு தெரியாது.

அங்க இந்த மாதிரி அறுசுவை சாப்பாடபோட்டுட்டு உங்களையே உர்ருன்னு பாத்துக்கிட்டு இருந்தா உங்களால ரசித்து சாப்பிட முடியுமா?

எனக்கு இரண்டு நண்பர்கள்.

முதல் நண்பர் வீட்டில் கொஞ்சம் ஆச்சாரம்.
அங்க சாப்பிட கொஞ்சம் எனக்கு கூச்சமா இருக்கும்.
ஏதாவது தப்பா நினைப்பாங்களோ என.
எல்லாத்திலும் கொஞ்சமா சாப்பிடுவேன்.ரொம்ப நாசூக்கா.

இரண்டாவது நண்பர் வீட்ல இந்த மாதிரி அறுசுவை இருக்காது.
இலை சாப்பாடு இருக்காது.
ஒரே குழம்புதான்.
எனக்காக செய்த ஆடோ, கோழியோ. மீனோ.

தட்டு நிறைய கறியை அள்ளிப்போட்டு "சாப்பிடு அண்ணா"
என பாச மழை பொழியும் தங்கை-நண்பரின் மனைவி-

நான் இங்க கூச்சம் இல்லாமல் வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிடுவேன்.

முதல் நண்பர் வீட்டில் காபி குடித்தாலும் அதை குடிக்க கூச்சமாக இருக்கும். வாய் வைத்து குடித்தால் ஏதும் நினைத்து கொள்வார்களோ என.

இது பெண்களுக்கு:

உங்கள் வீட்டிற்கு புதிதாக ஆண்கள் யாராவது வந்தால் தேவையான பொருள்களை அவர் முன்னே வைத்து விட்டு

"ஏதாவது வேனும்ன்னா கூச்சப்படாம கேளுங்க"

என்று சொல்லி விட்டு உங்கள் கணவரை பக்கத்தில் இருக்க செய்து விட்டு,
அவர் உங்களை பார்க்காதபடி மறைவாக நின்றபடி அவர் சாப்பிடுவதை ரசியுங்கள்.
அவர் மனதார உங்கள் சமையலை ரசித்து சாப்பிடுவார்.

எங்கள் வீட்டில் புதிதாக வரும் ஆண்களுக்கு நடைபெறும் விருந்தோம்பல் இது.

பெண்கள் வந்தால் உங்கள் பாடு.சமையல் கட்டில் உக்காந்து கிட்டு நல்லா மொக்குவிங்க.

அது எனக்கு தெரியாதா?

என் எண்ணம்
தொட்டு செல்லும்
வண்ணத்துப்பூச்சியே
நீ எனை மறந்தாலும்

நான் உனை மறவேன்

பாவை


'பாகற்காய் கசக்கும்'

'பாகற்காய் எனக்கு பிடிக்காது'

'பாகற்காயை நல்லா வேகவைத்து பின் தண்ணீரை வடிகட்டிவிட்டு பின் குழம்பு வைக்கனும்'

'பாகற்காயை முதல்ல நல்லா கசப்பு போக நல்லா எண்ணெய் வறுத்துவிட்டு பின் குழம்பு வைக்கவும்'
இப்படி எல்லாம் சொல்பவர்கள்,
ஒரு பாகற்காயின் கசப்பையே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் எப்படி வாழ்க்கையின் கசப்புகளை ஏற்றுக்கொள்வார்கள்?

எங்கம்மா பாகற்காயடன் மொச்சைக்கட்டையும் வறுத்து ஊறவைத்து குழம்பு வைப்பாங்க. நல்லாருக்கும். இப்ப எங்க வீட்ல மற்ற கிழங்கு வகைகள் கிலோ கணக்கில் வாங்கினால் இந்த பாகற்காயை கால் கிலோ என்ற அளவில்தான் வற்புறுத்தி வாங்க சொல்வேன்.

வீட்டில் பிள்ளைகளுக்கு பாகற்காய் பிடிக்காது, கத்தரி பிடிக்காது வெண்டை பிடிக்காது.

பாவக்காய் குழம்பு வச்சி யாரு திங்குறது? நாம இரண்டு பேரும் சாப்பிட்டாத்தான் உண்டு-மனைவியின் அங்காலாய்ப்பு.

முழு பாகற்காயை என்னால் எந்த முகசுளிப்பும் இன்றி சாப்பிட முடியும்.

"நல்லா முத்திய காயா பழுக்காததா கெட்டியா இருக்குறதா பாத்து எடுங்க"

-இது என் மனைவி எனக்கு பாகற்காய் வாங்க சொல்லிக்கொடுத்த டெக்னிக்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
இரத்த கொதிப்பு இரத்த கோளாறுகளை சரிசெய்யும்

இரத்ததின் சர்க்கரை அளவை குறைக்கும்.

அரிப்பு தோல்தடிப்பு, சோரியாசிஸ் இவற்றுக்கு நல்லது.

முக்கியமாய் வேகவத்து தண்ணீரை வடிகட்ட கூடாது. கசப்பு போக எண்ணெயில் வறுக்க கூடாது. அதன் சுவை மாறாமல் சாப்பிடவும்.

எனது தொழில்

சினிமாவாழ்க்கை, ஒன்பது ஆண்டுகாலம் ஒவியனாய் இருந்ததை ஒப்பிட்டால் சினிமா வாழ்க்கை தன் கால் தூசிக்கு சமம் என்று நடிகர் திரு சிவக்குமார் சொன்னதாக படித்தேன்.,

இது உண்மையென்றால் இத்தனை காலம் தனக்கு சகல வசதியையும் கொடுத்த சினிமாவை இதை விட கேவலபடுத்த முடியாது.

என் பள்ளிப்பருவத்தில் வகுப்பில் தகப்பனாரின் தொழிலைச்சொல்ல மிகவும் வெட்கப்படுவேன். நான் ஓர் ஏழை என்று சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.அது அறியாத வயது.

எல்லாப்பிள்ளைகளும் என் அப்பா விவசாயி, ஆசிரியர், மளிகைக்கடைகாரர், என்று சொல்லும் போது என் அப்பா ஒரு நெசவாளி என சொல்ல மிகவும் வெட்கப்படுவேன்.

இப்பொது நான் செய்யும் தொழிலை என் குறிப்பிட முடியவில்லை. காரணம் மார்க் கம்பெனி பெயர் கேட்கிறார்.எனது பாதுகாப்பிற்காக கம்பெனி பெயர் பொதுவில் வைக்கப்படுவதில்லை. ஆனால் இன்பாக்ஸில் கேட்பவர்களுக்கு தொழில் விபரங்களை சொல்லி விடுகிறேன்.

இந்தத்தொழில்தான் என்னை வாழ வைத்தது. இந்த தொழில்தான் என் இரண்டு பிள்ளைகளை என்ஜினியர் ஆக்கியது. இந்த தொழில்தான் என்னையும் சொந்த வீடு கட்ட வைத்தது.

என் தொழில் உங்களைப்போல் அலுவலகத்தில் கம்யூட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாது. உங்களைப்போல் அழுக்கு படாமல் வியர்வை இல்லாமல் வேலை செய்யமுடியாது.

பாதுகாப்பு கவசங்களை உடுத்திக்கொண்டு எத்தனை உயரமென்றாலும் மேலேறி வேலை செய்ய வேண்டும்.
ஒரு நெசவாளனாய் இருந்து காலமாற்றத்தில் ஒரு பைப் வெல்டராகி பின் கண்களின் பார்வை குறைபாட்டால் ஒரு (structure fabrication) பிட்டராகி இன்று ஒரு டீம் லீடராக இருக்கிறேன். புதிய தொழிலார்களுக்கு சந்தேகம் வரும் போது நானே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விடுவேன். இது செய்ய முடியாது என்று சவால் விட்டால் ஏன் முடியாது என்று காரியத்தில் இறங்குபவன்.

என் தொழில் இரண்டு முறை முகத்தில grinding michine ல் அடி வாங்கி என் மூக்கு வளைந்து போனது. இருந்தும் என் தொழிலை நேசிக்கிறேன்.

Wednesday, November 26, 2014

மஞ்சப்பை

மஞ்சப்பையின் துயரங்களை நெகிழிகள் அறிவதில்லை. 

 புடவை வாங்கியதெற்கென ஒரு மஞ்சப்பை கல்யாண அன்பளிப்பென ஒரு மஞ்சப்பை இப்படி தான் சேர்த்து வைத்த மஞ்சப்பைகள் ஒரு பெரிய பையில் போட்டு வைத்து பரண் மேல் போட்டு வைப்பாள். 

 எங்கு சென்றாலும் என்னோடு பயணிக்கும் ஒரு மஞ்சப்பை. வீடு திரும்பும் போது அவளுக்கு பிடித்த மல்லிகை மொட்டுக்களோ, மாதுளைகளோ ஆப்பிள்களோ இல்லை குழந்தைகளுக்கென நொறுக்குத்தீனிகளோ இடம் பிடிக்கும்.

 இன்னமும் இரண்டாய் மடித்த மஞ்சப்பைகளில்தான் தன் கணக்கு வழக்குகளை வைத்துள்ளாள் என்னவள். 

 மஞ்சப்பையின் சந்தோசங்களையும் நெகிழிகள் தருவதில்லை.

எதிரும் புதிரும்

எதிரும் புதிருமான 
வாழ்க்கையை 
இளவயதில் புரிந்தவர்கள் எட்டாக்கனியென 
ஏடெடுக்க முடியாதவர்கள், 
தங்கள் கூடடைக்க 
 சுமந்தனர் 
கோணிப் பைகளை.

Tuesday, November 25, 2014

துபாயில் தொலைந்த மஹா


உங்கள் கடந்த கால அசட்டுத்தனங்களையோ தவறுகளையோ அல்லது கஷ்டங்களையோ இப்போது நினைத்துப் பாருங்களேன்.

உங்கள் முகம் புன்னகை பூக்கிறதா?

ஷார்ஜா வந்த புதிது. மொபைல் என்னிடம் இல்லை. துபாய் அத்தனை பரிச்சியம் இல்லை. எப்போதாவது ஒருதடவை வருவேன்.

மைத்துனன் அறை தெரியும்.சில இடங்கள் மட்டும் தெரியும் பார்த்தீபன் சொன்ன துபாய் பஸ்டாண்ட் துபாய் மெயின்ரோடு  தெரியும்.

ஷார்ஜாவிலிருந்து பேருந்து பிடித்து வந்து ரொம்ப தெரிந்தவனாட்டாம் பேருந்து நிலையம் அடைவதற்குள் இங்க இறங்கினால் சுருக்கா போயிடலாம் என இறங்கினேன்.

இறங்கியவரை சரிதான்.
ஆனால் இறங்கியவன் எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தேன்.

ஓடினேன் ஓடினேன் அரபி கடல் ஓரத்திற்கே ஓடினேன்.

அது வளைகுடாதானே.என்னை வளைத்துக் கொண்டது.

ஆஹா வழி தப்பி விட்டோம்.

திரும்பினேன். புறப்பட்ட இடத்திற்கே வந்து நின்றேன்.

என்ன செய்யலாம்.யாரை கேட்கலாம். எனக்கு உதவி செய்தது தெருவில் நிறுத்தப்பட்ட  தெருவின் வரைபடங்கள்.

அதன் முன் நின்றேன்.

you are here.

என்றது நான் நிற்கும் இடத்தை காட்டி. அதிலிருந்து மைத்துனன் இருக்கும் தெருவை கண்டு பிடித்தேன்.

இதுவரை இது இரகசியமாகவே இருந்தது.

குழம்பிய மனதை தெளியவைக்க

A வும் B யும் நண்பர்கள்
A வும் C யும் நண்பர்கள்
B யும் C யும் பகைவர்கள்.

A செய்வது அனைத்தும் Bக்கும்Cக்கும் மிகவும் பிடிக்கும்
B,C இருவர் செய்வதும் Aவுக்கு பிடிக்கும்

ஆனால் Bசெய்வது Cக்கோ C செய்வது B க்கோ பிடிப்பதில்லை.

A செய்வது அனைத்தும் சரியென நினைக்கும் B,
A விரும்பும் C யை விரும்புவதில்லை.

A செய்வது அனைத்தும் சரியென நினைக்கும் C,
A விரும்பும் Bயை விரும்புவதில்லை.

ஏன்?

‪#‎எனக்கே‬ கொஞ்சம் தலை சுத்துது