Saturday, June 27, 2020

இறப்பதெப்படி?

இறப்பதெப்படி?
******************

இறப்பதெப்படி?

தூக்குப் போட்டுக் கொள்ளலாமா?

வேண்டாம். கழுத்து இறுகி தொண்டை எலும்பு உடைந்து மூச்சு திணறி கைகால்களை உதைத்துக்கொண்டு...
ஒரு கோழையால் அது முடியாது.

நிறைய பேர் செய்வது போல் ஓடுகிற இரயில் அடிபட்டு?

இரயில் வரும் நேரம் பார்த்து மிகச்சரியாய் குறுக்கே பாயவேண்டும். சினிமாவில் வருவது போல் தண்டவாளத்தில் தலைவைப்பது எல்லாம் வேலைக்காகாது. மின்னல் வேகத்தில் பாய்ந்து அதைவிட விரைவாக உடல் கிழிந்து தலை உடைந்து  நாலு மூலைக்கும் சிதறுமோ? இல்லை தூக்கி முழுசாக எறிந்து விடுமோ?
இதுவும் வேண்டாம்.

சினிமாவில் வருவது போல் விஷம் குடித்தால்?
அதுசரி அவர்களுக்கு மட்டும் விஷம் எங்கிருந்து கிடைக்கும்?

"அண்ணே ஒருபாட்டில் விஷம் கொடுண்ணே. காசு வந்ததும் திருப்பி கொடுக்கிறேன்"

-செருப்பால் அடிக்கமாட்டான்?

தண்ணிர் லாரிகளுக்கு முன் பாயலாமா?

நம் நேரம்-அவன்நேரமும் கூட- அலர்டா இருப்பான்.

"ஏன்டா சாவுகிராக்கி கொய்யாலே வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? அய்ய மூஞ்சப்பாரு"
நாலுதலைமுறைகள் சந்தி சிரிப்பார்கள் அவன் நாவிற்கிடையில்.

சின்னவயசா இருக்குறப்ப அருக்காணி புருசன்கிட்ட சண்ட போட்டுகிட்டு ஒரு நெருப்புட்டி குச்சி எல்லாத்தையும் தண்ணியில கரைச்சி வச்சிருந்துச்சே அதுமாதிரி?
அதெப்படி நெருப்புகுச்சி மருந்த தின்னா செத்து போகலாமா?

பத்து வயதில் வந்த சந்தேகம்.

வெறும் வயிற்றில் அரளி விதைகளை நைசாக அரைத்து விழுங்கி விட்டால் குடலில் பசை போல ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே யாருக்கும் தெரியாமல்  எங்காவது படுத்து விட்டால் போதும் கொஞ்ச நேரம்  வயிற்றை பிராண்டும் அதை தாங்கி கொண்டால் பிறகு பரலோகம்தான்......

நான் ஏன் சாகவேண்டும்?

அதுசரி நான் இதுவரை  வாழ்ந்து என்ன கிழித்து விட்டேன்.... 

நான்கு வயதில் அப்பாவை முழுங்கினேன்.  பத்து வயதில்  நண்பர் களோடு சேர்ந்து பீடி குடிக்க ஆரம்பித்தேன் படிப்படியாக வளர்ந்து குடி சீட்டாட்டம்  பெண்கள் சகவாசம்

அம்மாவின் உழைப்பை சீட்டாடத்தில் விட்டேன். கொடுக்காவிட்டால் அம்மாவை இழுத்துப்போட்டு அடித்தேன்.அம்மா இருக்கும் வரை அம்மாவின் அருமை புரியவில்லை.

இன்று நான் அனாதை. கையிலே காசில்லை சீந்துவோர் யாருமில்லை.  
வயது நாற்பதை நெருங்கி விட்டது. கடைசி வரை அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. 

" டேய் கொமாரு ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிடா"

காதில் வாங்க வில்லையே. ஒரு வேளை அம்மா பேச்சை கேட்டிருந்தால் வாழ்க்கை மாறி இருக்கலாம்

எங்கு போவது என்று புரியாமல் நடக்கின்றேன் இந்த இரயில் பாதைகளுக்கிடையில்

சரேலென என்னை இரண்டு கரங்கள் இழுத்து விட்டன. நான் தண்டவாளத்துக்கு அப்பால்  போய் விழுந்தேன் உடலெங்கும் சி்ராய்ப்பு

என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் ஒரு பாசஞ்சர் கடந்து போனது.

" இந்நேரம் செத்து போயிருப்பய்யா"

 என்னை காப்பாற்றுவதாக நினைத்து இழுத்துப் போட்டவள் சொன்னாள்

அவளைப் பார்த்தேன்  அழகான முகம் ஆனால் ஏனோ முகமெல்லாம் சோகம் அப்பி கிடந்தது. கழுத்தில் தாலி இல்லை. வயது முப்பதுக்கு மேல் இருக்கலாம்.

" என்னை ஏன் காப்பாத்தினே?"

" சரி இரு அடுத்த இரயில்ல தள்ளி விடுறேன்"

நான் புன்னகைத்தேன்

" சரி வா  போகலாம்"

" எங்க?'

" என் கடைக்கு வாய்யா ஒரு டீ போட்டுத் தரேன் குடிச்சிட்டு போ"

" எங்கிட்ட காசு இல்ல"

" அட காசு வேனாம் உன்ன பாத்தா பாவமா இருக்கு, இனிமே சாக நினைக்காதே சாக நினைக்கனுமுன்னா நானெல்லாம் எப்பவோ செத்து போயிருக்கனும்"

மெதுவாக எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.

அவள் ரோட்டோர டீக்கடை ஒன்றில் நுழைந்தாள். நான் அழுக்கு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.

ஒரு டீயை போட்டு என்னிடம் கொடுத்தாள்.

' ம்..... டீ நல்லாத்தான் போடுறாள்'

" இப்ப சொல்லு உனக்கு என்னதான் பிரச்னை?"

என் கதையை சொன்னேன்

" நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ, பொழைக்க ஆயிரம் வழி இருக்குய்யா, நான் ஏன் உசுரோட இருக்கேன்? இந்தா இதுங்க இரண்டுங்களுக்காத்தான்"

அவள் கை காட்டிய இடத்தில் மணலில் இரண்டு பெண் குழந்தைகள் புழுதியை பூசியபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" அவன் இதுங்க இரண்ட கொடுத்துட்டு ரயில்ல அடிப்பட்டு செத்து போய்ட்டான், என்ன பண்றது? வயிறு இருக்கே  ஆனா ஒன்னுய்யயா   என்ன மாதிரி பொண்ணுங்க இந்த உசுர காப்பாத்துறத விட  மானத்த காப்பாத்துறது பெரிய விசயம்.  டீ குடிக்க வரியான்னு கேக்குற மாதிரி படுக்க வரியான்னு கேக்குறானுங்க"

நான் எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பினேன்

" எங்கய்யா போற?"

" எங்காவது, எனக்குன்னு ஒரு வேல கிடைக்காமலா போயிடும்?"

அவள் என் கையைப் பிடித்தாள்

" நீ இங்கயே இருந்துடுயா எனக்குத் தொணையா"

" உன்னோட பேரென்ன?"

" காவேரி"

" இங்க பாரு காவேரி, நான் கேடு கெட்டவன். என்னால் உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது"

" இந்த உலகத்துல யாருமே கெட்டவங்க இல்லைய்யா பொறக்கும் போது.  இன்னைக்கு  நீ  புதுசா பொறந்திருக்க உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா"

மறு பேச்சி பேசாமல் நீ தள்ளு இனிமே நான் டீ போடுறேன் என்றேன்

"உனக்கு டீ போடத்தெரியுமாய்யா?"

"என் வாழ்க்கையில் முழுசா கத்துக்கிட்ட வேல இது ஒன்னுதான்"

காவேரி க்ளுக்கென்று சிரித்தபடி  என் இடுப்பில் குத்தி  விட்டு உள்ளே போனாள்.


நல்லறமும் இல்லறமும்

#சிறுகதை

நல்லறமும் இல்லறமும்

வசந்திக்கு தன் கணவன்  சுந்தரம் யாருடனோ மொபைல் போனில் பேசுவது
தெளிவாக கேட்டது. ஆனால் மறுமுனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

"இல்ல காவேரி நான் சொல்றது கேளு"

"-------------"

"உண்மைதான். நீ எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்க இல்லங்கல்ல? நம்ம நட்பு நீடிக்கனுமுன்னு ஆசைபடுறேன். இதுவரைக்கும் நல்லவனா வாழ்ந்துட்டேன். அத்தோட  இந்த விசயம் என் பொண்டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவளுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது."

"-----------------------"

"காவேரி நான் சொல்றத புரிஞ்சிக்க, இதுவரைக்கும் என் பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சதில்லை, ப்ளீஸ் என்ன விட்டுடேன்"

சரேலென்று இடை புகுந்தாள் வசந்தி.

"எவ அவ காவேரி? இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும். எத்தன நாளா நடக்குது இந்த கூத்து? ச்சே உங்களுக்கு அசிங்கமா இல்ல....."

"வசந்தி ஒரு நிமிசம்....."

"பேசாதிங்க, பேரன் பேத்தி எடுத்த வயசில.... மருமகன் மருமகளுக்குலாம் தெரிஞ்சா காரி துப்ப மாட்டாங்க?"

சுந்தரம் ஒரு கணம் ஆடிப்போனார்.

"கத்தாத வசந்தி... விசயம் தெரியாம பேசாத...,"

"இன்னும் என்ன விசயம் தெரியனும்... இப்பவே என் புள்ளைங்கள கூப்புடுறேன்"

சுந்தரம் அழுது விடுவார் போலிருந்தது.

"ப்ளீஸ் வசந்தி என்ன பேசவிடேன்"

"என்ன சொல்லப் போறிங்க?"

சுந்தரம் ஒன்றும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

வசந்தி மெதுவாக அவர் அருகே வந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சுந்தரம் இப்போது மேலும் குழம்பினார்.

'என்ன செய்கிறாள் இவள்?,அந்த கத்து கத்தியவள் இப்போது வாஞ்சையோடு முத்தமிடுகிறாள்"

வசந்தி கணவனின் தலையை மெல்ல வருடியபடி,

"பயந்துட்டிங்களா? இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவ்வளவுதானா என்னை புரிந்து கொண்டது? ஆனால் உங்களை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். உங்களால் தவறு செய்ய முடியாது.  என்ன பிரச்னை?"

"காவேரி என்னுடைய புதிய நண்பன், பல கஸ்டமர்களை எனக்கு  கொடுத்துருக்கான், அதுக்கு நானும் நிறைய கமிசன் கொடுத்திருக்கேன்,நாளைக்கு அவனுக்கு பர்த் டே. அதான் பார்ட்டி கொடுக்க கூப்பிடுறான், உனக்குத்தான் தெரியுமே நான் குடிக்க மாட்டேன்னு, அதான் நாசூக்கா தவிர்த்தா விடாப்பிடியா  கம்பல் பண்றான். இல்லன்னா நம்ம பிஸ்னஸ முறிச்சிக்கலாங்குறான்"

"ம்"

"அதான்... அதுக்குள்ள நீ கத்தி கலாட்டா பண்ணிட்ட நான் பயந்தே போய்ட்டேன்"

"சும்மா கொஞ்சம் விளையாடி பார்த்தேன். உங்க மேல எனக்கு சந்தேகம் வருமா?,அப்பறம் அந்த மாதிரி நட்பு நமக்கு வேண்டாம், கழட்டி விட்றுங்க போகட்டும்' என்றபடி தன் கணவனை கட்டிக் கொண்டாள் வசந்தி.

வள்ளி ஓடி விட்டாள்

வள்ளி ஓடி விட்டாள்
*****************

" என்னங்க என்னங்க எங்க இருக்கிங்க
இங்க பாருங்களேன் நம்ம வள்ளி ஓடிப்போயிட்டாங்க இத படிச்சிப் பாருங்களேன்" என்று கையில் ஒரு கடுதாசியுடன் அரக்க பரக்க ஓடி வந்தாள் சிவகாமி.

கணவர்  முருகேசன் அதை வாங்கி படித்துப் பார்த்தார்.

' அன்புள்ள அப்பா அம்மாவுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது. என் மனதுக்கு பிடித்தவருடன் போகிறேன் என்னைத் தேட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்'

" சிவகாமி, இது எங்க இருந்துச்சி?"

" அவ டேபிள்லதாங்க, இப்ப என்னங்க பண்றது?"

உடனடியாக கல்லூரிக்கு போன் போட்டார்

வள்ளி இன்று கல்லூரிக்கு வரவில்லை என்ற பதில் வந்தது.

அவள் தோழிகள் யாருக்கு போன் செய்தாலும் 
நாங்க பாக்கலயே என்ற பதில்தான் வந்தது.

நம் வள்ளியா இப்படி செய்தது என்ற குழப்பமே இருவருக்கும்

வள்ளி அப்படி பட்ட பெண் இல்லையே, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பேசி முடிச்சிருக்கலாமே இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுச்சி என்று புலம்பித் தீர்த்தார்.

இப்ப எங்கன்னு தேடுவது? சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா எத்தனை அசிங்கம் என்றாள் சிவகாமி

" உன் வேலைய பாருடி என்  பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ புலம்பாத" 

" புலம்பாம என்னங்க பண்றது?"

" நாமளே கண்டு புடிச்சி  முறையாக கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம்"

" அய்யோ அவன் என்ன சாதியோ குலமோ?"

" என்னடி பெரிய சாதி குலமுன்னு பினாத்துற, என் பொண்ணுக்கு  பிடிச்சிருந்தா அப்பறம் அதில் நாம யாரு"

வாசலில் யாரோ வரும் சப்தம்

வள்ளிதான்  வந்தாள். அப்பா அம்மாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தவுடன்,

' கண்டு புடிச்சிட்டாங்களோ' என்ற எண்ணம் ஓடியது அவள் மனதில்
 பூனை போல் மெதுவாக தன் அறைக்குள் நுழைய முயன்றவளை

அப்பாவின் குரல் தடுத்தது.

" வள்ளி"

நடுங்கிய குரலில்,

" அப்பா" என்றாள்

" எங்க போய்ட்டு வர?"

" காலேஜ்குப்பா"

" பொய்"

" நிசமாந்தான்பா"

" வள்ளி என்கிட்ட மறைக்காத, என்கிட்ட உண்மைய சொல்லு உன்ன மன்னிச்சுடுறேன்"

" அது வந்து......என் மேல கோப  பட மாட்டிங்கல்ல"

" என்னன்னு சொல்லி தொலடி"- சிவகாமி

" நீ  பேசாம இரு சிவகாமி"

" பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க"

" அது வந்து,   சொல்லுவேன் என்ன திட்டக்கூடாது சரியா"

" சரி திட்டல"

" அத்தைய பாக்க போனேன்"

" அத்தையா....?" எகிறினார் முருகேசன்

" பாத்திங்களா கோப மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப  கோப படுறிங்க"

" சரி அத்தைக்கு நமக்கும்  ஆகாதுன்னு தெரியுமுல்ல?"

" நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட சண்ட போட்டுக்கிட்டா நான்  எங்க அத்தைக்கிட்ட பேசமா இருக்கனுமா?"

" அப்ப இது என்ன?" கையிலிருந்த பேப்பரை காட்டினார் 

 அவள் விழுந்து விழுந்து சிரித்தபடி

" இதுக்குத்தான் கோபமா? இது எங்க காலேஜ்ல நாடகம் போடுறோம் அதுக்கான ஸ்கி்ரிப்ட்"

" நீ சொல்றத நம்பலாமா?"

" உங்க மேல சத்தியம்"

" சரி இது எத்தன நாள் நடக்குது?"

" எது?"

" அத்தைய போய் பாக்குறது?"

" ரொம்ப நாளா"

" சரி உங்க அத்த எப்படி இருக்கா?"

" அத்தைக்கு உடம்பு சரியில்ல, ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

" என்னாச்சி என் தங்கச்சிக்கு, சிவகாமி கிளம்பு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்"

அரக்க பரக்க கிளம்பினார் முருகேசன்.

ghost

ghost

நண்பர்களுடன் செகண்ட் ஷோ பார்த்து விட்டு விசில் அடித்தபடியே  தன் அறைக்கு திரும்பிய பரத்  தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான்.

மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தான்.
ஏதோ நிழலாடுவது போல் இருந்தது.

கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  நடந்தான்.

திரும்பவும் யாரோ பின் தொடர்வது போல் இருந்தது .

மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

தெருநாய் ஒன்று   வந்து கொண்டிருந்தது.

" ச்சே இதுக்கா பயந்தோம்"
தன்னைத்தானே தேற்றியபடி அறைக் கதவைத் திறந்தான்.  பேண்ட்டை கழட்டி  லுங்கிக்கு மாறிய பரத் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து லாவகமாக புகையை
 இழுத்தபடி மொபைலை எடுத்தான் 

அது சார்ஜ் முழுவதும் தீர்ந்து  எப்பவோ உயிரை விட்டிருந்தது

சார்ஜரில் மொபைலுக்கு கனைக்சன் கொடுக்கும் போதுதானா மின்சாரம் போக வேண்டும்.

அப்போதுதான் கவனித்தான்.

ஏதோ கரக் மொரக் என்ற சப்தம்

மேஜை டிராயரில் இருந்த பென்சில் டார்ச்சை எடுத்து அடித்துப் பார்த்தான்
ஒரு எலி பழைய புத்தகங்களை பிராண்டிக் கொண்டிருந்தது.
விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும்
பயந்து போன எலி  கண்ட படி ஓடத் துவங்கியது.
எலி ஓடும் பாதையில் டார்ச்சை திருப்பிய பரத்  டார்ச்சை கையிலிருந்து தவற விட்டான்.

கீழே விழுந்த டார்ச் விழுந்த வேகத்தில்
இங்குமங்கும் உருண்டது.

டார்ச்சை எடுக்கத் திரும்பிய பரத் அந்த சிறிய வெளிச்சத்தில்  ஒருப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.

'அறையை உள்ளே பூட்டி விட்டுத்தானே வந்தேன். அப்படியென்றால்?.........'

- தொடரும் 

பேய்க்கதை மன்னன்  எழுத்தாளர் ஏகாம்பரம் அடுத்த நாள்  பத்திரிகைக்கு கொடுக்க வேண்டிய கதையை எழுதி முடித்ததும் மின்சாரம் துண்டித்து போனது.

அப்போது தன்னைத்தவிர இன்னொரு ஆள் அறையில் இருப்பது போல் உணர்ந்தார்.

கைகால்கள் தந்தியடிக்க  முகமெல்லாம் வியர்த்துப்போய்  இருட்டில்  மொபைலைத் தேடினார்.

அப்போது இரண்டு கைகள் பின்னாலிருந்து  அவர் உடலைப்பற்றி இழுத்து அணைத்தது.

ஏகாம்பரம்  பயந்து நடுங்கியபடி குழறிய வார்த்தைகளில்

" ஏய் நீ யாரு?  கதவ பூட்டித்தானே வச்சேன் எப்படி உள்ள வந்த,உனக்கு என்ன வேணும்?" என்றார்.

கலகலவென்று சிரித்த அந்த உருவம்

" எனக்கு உன் உயிர்தான் வேண்டும் " என்றது.

" ச்சே நீதானா? நான் பயந்தே போய்ட்டேன்,  ஊரிலிருந்து எப்ப வந்த?"என்றார் சிரித்தபடி.

" இப்பத்தான் வந்தேன், வந்த நேரம். கரண்டு போயிடுச்சி. மெதுவா சாவிய போட்டு திறந்தேன்.  கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு பாத்தேன். இப்படி நடுங்குறிங்க"

' இதுக்கு அந்த பேயே வந்திருக்கலாம்'

'' என்ன வாய்க்குள்ள முனகுறிங்க"

" ஒன்னுமில்லம்மா. வெளிய சொல்லிடாத பொண்டாடிக்கு பயந்தவன்னு காரி துப்புவாங்க"

திருமணங்கள்

திருமணங்கள் விஞ்ஞானக்கூடத்தில் நிச்சயக்கப் படுகின்றன.
****************************""
வருடம் 2116

அவன் அந்த விஸ்தாரமான கட்டிடத்தின் வரவேற்பறையில் காத்திருந்தான்.

திரு.ax7543891 என்று வரவேற்பாளினி ஒலிபெருக்கியில் அழைத்ததும் அவன், அவள் முன் நின்றான்.

"உங்கள் பெயர்?"

"ax7543891"

"இனம்?"

"மனித இனம்".

"திருமணத்திற்காக பெண் வேண்டி விண்ணப்பத்திருந்தீர்கள் அல்லவா?"

"ஆமாம்"

"நீங்கள் விண்ணப்பித்திருந்தது மனித இனத்தில் ஒரு பெண் வேண்டி அல்லவா?"

"ஆமாம்"

"மன்னிக்கவும் திரு. ax. மனித இனத்தி்ல் பெண்கள் அருகி விட்டது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் அதற்கு இன்னும் பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதோ இந்த குழந்தைதான்.இவளுக்கு இப்போது வயது 12.இவள் வளர்ந்து என்று நீங்கள் திருமணம் செய்வது? அத்தோடு இவள் உங்களை நிராகரித்து விட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
உங்களுக்கேற்ற இயந்திரப் பெண் தயாராக இருக்கிறாள்.
 என்னைப்போலவே"

அவன் தவிர்க்க முடியாமல் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

"என்ன சம்மதமா?"

"சம்மதம்"

"மருத்துவச்சான்றிதழ் இருக்கிறதா?"

"இருக்கிறது".

"மன்னிக்கவும், சற்று காத்திருங்கள்"
என்று சொல்லிவிட்டு ஓரு சார்ஜர் வயரை எடுத்து தன் இடுப்பின் வலது பக்கத்தில் சொருகினாள்.

"பேட்டரி மாற்றவேண்டும் என நினைக்கிறேன்.இப்படி அடிக்கடி சார்ஜர் இறங்கி விடுகிறது"

அவன் ஒரு புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான்.

அடுத்து அவளின் ஆட்காட்டி விரலை இடவலமாக அசைத்தாள்.அதிலிருந்து செவ்வக வடிவில் 16 அங்குல அளவிற்கு திரை ஒன்று அவள் எதிரில் தோன்றியது...

அடுத்து அவள் முன் தோன்றிய எழுத்து வடிவ பிம்பத்தில் அவன் பெயரை தட்டினாள்..

திரையில் அவனைப் பற்றிய விபரங்கள் வந்து விழுந்தன..

பெயர்: ax7543891..

வயது: 27

தொழில்: விவசாயம்

தேவை:மணப்பெண்

எல்லாவற்றையும் என்டர் கொடுத்து ஒருபட்டனை தட்டினாள்.

"உங்கள் அதிர்ஷ்டம் திரு ax7543891அவர்களே.உங்களுக்கேற்ற மணப்பெண் தயாராகி விட்டாள். நீங்கள் இப்போதே இங்கேயே மணம் முடித்து அவளை அழைத்துச் செல்லலாம்"

"மிக்க நன்றி"

"சரி வாருங்கள் விஞ்ஞானக் கூடத்திற்கு செல்வோம்"

அவர்கள் இருவரும் அந்த விஞ்ஞானக் கூடத்திற்கு முன் நின்று தங்கள் அடையாள அட்டையை காட்டியதும் கதவுகள் பக்கவாட்டில் திறந்து அவர்களுக்கு வழிகாட்டின.

அங்கு ஓர் அறையில் கிடத்தப்பட்டிருந்த ஒருப் பெண்ணின் உடல் மிக அழகு படுத்தப்பட்டு சார்ஜர் ஏறிக்கொண்டிருந்தது. அவள் அழகாக இருந்தாள்.

இப்போது வரவேற்பறை பெண் மணமகளின் பின்னால் போய் அவள் முதுகின் மீது கை வைத்து ஓரிடத்தில் அழுத்தினாள். சார்ஜர் முழுவதும் ஏறியதற்கான குறியீடு காட்டியது.

"நல்லது. திரு. ax7543891 இவள் பெயர் ov5032678. இவள் இன்றிலிருந்து உங்கள் மனைவி. இவளை நீங்கள் அழைத்துச் செல்லலாம். இவள் எல்லா விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பாள். இனிமையாக பாடுவாள். நடனம் ஆடுவாள். உலகத்தின் அத்தனை மொழிகளையும் இவள் உள் வாங்கியிருக்கிறாள். இவளுக்கு தெரியாத விசயங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிறைய கற்றுக்் கொடுத்திருக்கிறோம். மனைவிக்குரிய  அத்தனை கடமைகளையும் செய்வாள் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர.

 எதாவது பிரச்னை என்றால் இவளை இங்கே அழைத்து வாருங்கள். நமது கணனி பொறியாளர் சரிசெய்து கொடுப்பார் ஒருவருடம் வரை இலவசமாக சரிசெய்து தருவோம். ஆனால் இவளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ எங்களுக்கு உடனடியாக செய்தி வந்துவிடும்.வாழ்க வளமுடன்"

"மிக்க நன்றி...."

"என் பெயர் kj0000000. என்னை நீங்கள் kj என்றே அழைக்கலாம்"

அடுத்து kj மணப்பெண்ணைப் பார்த்து செல்வி.ov இவரை பிடித்திருக்கிறதா.இவரை மணந்து கொள்ள சம்மதமா?"

"எனக்கு சம்மதம்"

"சரி இருவரும் உங்கள் விரல் ரேகைகளை பதிந்து விட்டு நீங்கள் செல்லலாம். வாழ்த்துகள் இருவருக்கும்"

அவன் தன் புத்தம்புது மனைவியின் தோள்மீது கைப்போட்டபடி அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஈர்ப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு............

ஈர்ப்பு

ஒரு மாலை வேளையில் ஓர் உணவகத்தில்தான் அந்த இளம்பெண்ணை  சந்தித்தேன்.  ஏதாவது சாப்பிடலாம்  என்று  நினைத்து சர்வரை அழைக்க நினைத்த போது  என் எதிரில் இரண்டு குழந்தைகளுடன் ஓர் இளவயது பெண்  வந்து  உட்கார்ந்தாள். 

" வணக்கம் சார்"

" வணக்கம்மா"  

" என்னத் தெரியுதா சார்?"

" எனக்குத் தெரியலம்மா"

" முதல்ல இத பிடிங்க" என்றபடி ஒரு பூங்கொத்தை  நீட்டினாள்.

" இது எதுக்கும்மா?"

" முதல்ல பிடிங்க, அப்பறம் இன்னைக்கு என்னோட  ட்ரீட்"

" சாப்பிடுறேன். ஆனா காரணம் இல்லாத எப்படி?"

" முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் சொல்றேன்"

" சாப்பிட்டே ஆகனுமா?"

" ஆமாம், உங்கப்  பொண்ணு வாங்கி கொடுத்தா  சாப்பிட மாட்டிங்களா?"

"  கண்டிப்பா, இந்த குழந்தைங்க?"

" என் குழந்தைங்கதான். இவ சாருமதி, பையன் ஆனந்த்.இவங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"

குழந்தைகளை ஆசிர்வதித்தேன்

" என்னோட பேரு கூட ஆனந்த கிருஷ்ணன் தான்"

" தெரியும் சார் உங்க பேர் தான் வச்சிருக்கேன்"

" என் பேர் எப்படி தெரியும்மா உனக்கு?"

" எனக்குத் தெரியும். சரி என்ன  ஞாபகம் இருக்கா உங்களுக்கு?"

" சொன்னாதானே தெரியும்"

'" உங்களுக்கு ரொம்ப மறதி சார்"

" வயசாடுச்சிம்மா"

" சார் உங்களுக்கு அப்படி ஒன்னும் வயசான மாதிரி தெரியலயே. என்னோட பெயர் கலைமதி

" சரி எனக்கு எதுக்கு  ட்ரீட்  கொடுக்க ஆசை படுற கலைமதி?"

" யோசிங்க. இப்ப சாப்பிடுங்க"

அனைவருக்கும் உணவு வரவே சாப்பிட்டோம்"

" என்ன யோசிச்சிங்களா?"

" ஞாபகம் வரலயே கலை"

"  நல்லவங்க அவங்க செஞ்ச நல்லத உடனே மறந்துடுவாங்க. சரி நானே சொல்றேன். நான் இப்ப ஒரு டாக்டர். குறிப்பாக சொல்லனுமுன்னா மகப்பேறு மருத்துவர்.  அன்பான கணவர் , பிஸ்னஸ் பண்றார். நல்ல மாமனார் மாமியார். இந்த ஊரிலயே ரொம்ப பெரிய  குடும்பம்"

" ரொம்ப சந்தோசம்மா"

" இத்தனையும் நீங்க சொன்ன சின்ன அறிவுரை"

" நானா, எப்ப?"

" இதே இடத்துல"

" இதே இடத்துலயா?"

" அப்ப நான் +2 படிச்சிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுக்கே உள்ள சேட்டைகள்,  அடாவடி இதெல்லாம் எங்கிட்ட இருந்துச்சி. அதோட அந்த வயசுக்கே உள்ள  பொய்யான ஈர்ப்பை காதல்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் நீங்க மண்டையில உரைக்கிற மாதிரி புத்தி சொன்னிங்க"

" இப்ப  எனக்கு ஞாபகம் வருது கலை,  ஒரு பையன் கூட ஸ்கூல் யூனிபார்ம்ல சாப்பிட வந்த,  அந்த பையன்   கை கழுவ போன சமயத்துல  உன்ன  நல்லா திட்டி விட்டேன்."

"  யப்பா திட்டா அது ? நல்லா வெளுத்து வாங்கிட்டிங்க என்ன"

" இல்லம்மா, அறியா வயசுல ஏற்படுற ஈர்ப்பை காதல்னு நம்பி  ஏமாந்து போற புள்ளைங்க நிறைய, அதான் வந்த கோபத்துல நல்லா திட்டினேன். நான் கூட அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன். அதோட அன்னைக்கு நீங்க இரண்டு பெரும் பண்ண சேட்டைகள், அளவு கடந்த நெருக்கம் எனக்கு கோபத்த வரவச்சிடுச்சி.  அதுக்காக வருத்தப்படுறேன்"

" இல்லப்பா.... உங்கள அப்பான்னு கூப்பிடலாம்தானே?

" தாராளமா"

" அன்னைக்கு ரொம்ப அழுதேன். அப்பறம் யோசிச்சு பாத்தேன்.  யாரோ முன்னபின்ன தெரியாதவங்க ஏன் நம்மை திட்டனுமுன்னு.  அப்பறம் காதலை  மூட்டை கட்டி வச்சிட்டு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன்"

" அந்த பையன்?"

" சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விலகிட்டார்"

" விலகிட்டார்? ரொம்ப நல்ல பையன் போலிருக்கு"

" அதனாலதான்  நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

" ஓ...!

" எனக்கு வேலை கிடைச்சப்ப, அவர்  அவங்கப்பாவோட வியாபாரத்தை கவனிச்சிக்கிட்டு இருந்தார். இதோ இதே  இடத்துலதான் என் காதலை அவர்கிட்ட சொன்னேன்"

" ரொம்ப சந்தோசப்  பட்டார். இரண்டு வீட்டலயும்  சம்மதிச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்  இப்ப நான்  சிட்டியில பேமஸ் டாக்டர்."

" ரொம்ப சந்தோசம்மா"

" அப்பா, நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ஒருநாளைக்கு"

" கண்டிப்பா வரேன் மா"

கலைமதி கொடுத்த விசிட்டிங்  கார்டை வாங்கிக் கொண்டு  வாழ்த்தி விட்டு விடைபெற்றேன்.

கொலையும் செய்வாள் பத்மினி


கொலையும் செய்வாள் பத்மினி
*********************

"எத்தன நாளைக்கு இப்படி நாம திருட்டுத்தனமா சந்திக்கிறது கௌதம்?"

"வெயிட் வெயிட். கூடிய சீக்கிரம் இதுக்கு முடிவு கட்டிடலாம் அனிதா. என் பொண்டாட்டி ஒரு டூவீலர் வேனுமுன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. இப்ப ஒரு ஆக்டிவா மாட்டியிருக்கு. நாலு மாசத்துல மூனு பேர காலி பண்ணிட்டு இரண்டு கை மாறியிருக்கு"

"எனக்கு புரியல கௌதம்.என்ன சொல்லவர?"

"அந்த வண்டிய வாங்குனவன் எவனும் உயிரோட இல்ல. கிட்டதட்ட எமன். ரொம்ப சல்லிசா விலைக்கு வருது. புது வண்டி. இந்த வண்டிய காட்டுனா எம்பொண்டாட்டி பத்மினி வானாங்க மாட்டா"

"வாவ்...! செம்ம ஐடியா"

"ம் அதான், புரியுதா இப்ப. வண்டிய பத்மினி பேருல வாங்க போறேன். இராசி இல்லாத வண்டின்னு அவ கிட்ட சொல்லமாட்டேன். அந்த வண்டி ராசிப் படி கூடிய சீக்கிரம்.... இல்லன்னாலும் நானே பிரேக் வயர கட் பண்ணிடுறேன். அப்பறம் அவ மூலமா கிடைக்குற இன்சூரன்ஸ் பணம், சர்விஸ் பணம் எல்லாம் நமக்குத்தான். ஓகேவா?"

"சூப்பர்"

"சரி ஏதாவது கொடுத்துட்டுப்போ"

"ம்ம்ம்மா"

*******************

கவனமாக பத்மினியின் பெயரில் வண்டியை வாங்கினான் கௌதம்

"என்ன பப்பி வண்டி பிடிச்சிருக்கா?"

"எப்படிங்க வண்டி புதுசா இருக்கு,விலை இவ்வளவு கம்மியா இருக்கு?"

"ஓனர் வெளிநாடு போறான் பப்பி அதான் வந்த விலைக்கு விக்கிறான்"

"நான் ரொம்ப லக்கிங்க"

"நானும்தான்"

****************

"ஏங்க வண்டியில ஏதோ சத்தம் வருது. நீங்க ஆபிஸ் போற வழியிலதான ஹோன்டா ஷோரூம். அப்படியே சர்விஸ் விட்டுட்டு சாயந்தரம் எடுத்தாந்துடுங்க"

மறுத்தால் சந்தேகம் வரும் என்று நினைத்த கௌதம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் எதிர்பட்ட அனிதா வழிமறித்து ஏறிக்கொண்டாள்.

"என்ன கௌதம் இந்த வண்டி?"

"அந்த சனியன் சர்விஸ் விட சொல்றா
மறுத்தா சந்தேகம் வரும்"

"ம்"என்றபடி கௌதமை கட்டிபிடித்த அனிதா அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்

"என்ன அனி?"

என்றபடி திரும்ப முயன்றவன் அப்போது தான் கவனித்தான்
இரும்பு ஷீட்களை ஏற்றி வந்த ட்ரெயிலரை.

வேகமா பிரேக் அடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்து இரண்டு பேரையும் சேர்த்து ஆக்டிவா வோடு தூக்கி எறிந்தது அந்த ட்ரெயிலர் எமன்.

அதே நேரம்.

'ஏன்டா இராசி இல்லாத வண்டிய வாங்கி என்னையாட கொல்லப்பாக்குற?'

என்று முனகினாள்  பிரேக் வயரை பிடுங்கி விட்ட பத்மினி.