Saturday, June 27, 2020

ghost

ghost

நண்பர்களுடன் செகண்ட் ஷோ பார்த்து விட்டு விசில் அடித்தபடியே  தன் அறைக்கு திரும்பிய பரத்  தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான்.

மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தான்.
ஏதோ நிழலாடுவது போல் இருந்தது.

கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  நடந்தான்.

திரும்பவும் யாரோ பின் தொடர்வது போல் இருந்தது .

மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

தெருநாய் ஒன்று   வந்து கொண்டிருந்தது.

" ச்சே இதுக்கா பயந்தோம்"
தன்னைத்தானே தேற்றியபடி அறைக் கதவைத் திறந்தான்.  பேண்ட்டை கழட்டி  லுங்கிக்கு மாறிய பரத் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து லாவகமாக புகையை
 இழுத்தபடி மொபைலை எடுத்தான் 

அது சார்ஜ் முழுவதும் தீர்ந்து  எப்பவோ உயிரை விட்டிருந்தது

சார்ஜரில் மொபைலுக்கு கனைக்சன் கொடுக்கும் போதுதானா மின்சாரம் போக வேண்டும்.

அப்போதுதான் கவனித்தான்.

ஏதோ கரக் மொரக் என்ற சப்தம்

மேஜை டிராயரில் இருந்த பென்சில் டார்ச்சை எடுத்து அடித்துப் பார்த்தான்
ஒரு எலி பழைய புத்தகங்களை பிராண்டிக் கொண்டிருந்தது.
விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும்
பயந்து போன எலி  கண்ட படி ஓடத் துவங்கியது.
எலி ஓடும் பாதையில் டார்ச்சை திருப்பிய பரத்  டார்ச்சை கையிலிருந்து தவற விட்டான்.

கீழே விழுந்த டார்ச் விழுந்த வேகத்தில்
இங்குமங்கும் உருண்டது.

டார்ச்சை எடுக்கத் திரும்பிய பரத் அந்த சிறிய வெளிச்சத்தில்  ஒருப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.

'அறையை உள்ளே பூட்டி விட்டுத்தானே வந்தேன். அப்படியென்றால்?.........'

- தொடரும் 

பேய்க்கதை மன்னன்  எழுத்தாளர் ஏகாம்பரம் அடுத்த நாள்  பத்திரிகைக்கு கொடுக்க வேண்டிய கதையை எழுதி முடித்ததும் மின்சாரம் துண்டித்து போனது.

அப்போது தன்னைத்தவிர இன்னொரு ஆள் அறையில் இருப்பது போல் உணர்ந்தார்.

கைகால்கள் தந்தியடிக்க  முகமெல்லாம் வியர்த்துப்போய்  இருட்டில்  மொபைலைத் தேடினார்.

அப்போது இரண்டு கைகள் பின்னாலிருந்து  அவர் உடலைப்பற்றி இழுத்து அணைத்தது.

ஏகாம்பரம்  பயந்து நடுங்கியபடி குழறிய வார்த்தைகளில்

" ஏய் நீ யாரு?  கதவ பூட்டித்தானே வச்சேன் எப்படி உள்ள வந்த,உனக்கு என்ன வேணும்?" என்றார்.

கலகலவென்று சிரித்த அந்த உருவம்

" எனக்கு உன் உயிர்தான் வேண்டும் " என்றது.

" ச்சே நீதானா? நான் பயந்தே போய்ட்டேன்,  ஊரிலிருந்து எப்ப வந்த?"என்றார் சிரித்தபடி.

" இப்பத்தான் வந்தேன், வந்த நேரம். கரண்டு போயிடுச்சி. மெதுவா சாவிய போட்டு திறந்தேன்.  கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு பாத்தேன். இப்படி நடுங்குறிங்க"

' இதுக்கு அந்த பேயே வந்திருக்கலாம்'

'' என்ன வாய்க்குள்ள முனகுறிங்க"

" ஒன்னுமில்லம்மா. வெளிய சொல்லிடாத பொண்டாடிக்கு பயந்தவன்னு காரி துப்புவாங்க"

திருமணங்கள்

திருமணங்கள் விஞ்ஞானக்கூடத்தில் நிச்சயக்கப் படுகின்றன.
****************************""
வருடம் 2116

அவன் அந்த விஸ்தாரமான கட்டிடத்தின் வரவேற்பறையில் காத்திருந்தான்.

திரு.ax7543891 என்று வரவேற்பாளினி ஒலிபெருக்கியில் அழைத்ததும் அவன், அவள் முன் நின்றான்.

"உங்கள் பெயர்?"

"ax7543891"

"இனம்?"

"மனித இனம்".

"திருமணத்திற்காக பெண் வேண்டி விண்ணப்பத்திருந்தீர்கள் அல்லவா?"

"ஆமாம்"

"நீங்கள் விண்ணப்பித்திருந்தது மனித இனத்தில் ஒரு பெண் வேண்டி அல்லவா?"

"ஆமாம்"

"மன்னிக்கவும் திரு. ax. மனித இனத்தி்ல் பெண்கள் அருகி விட்டது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் அதற்கு இன்னும் பதினைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டும். இதோ இந்த குழந்தைதான்.இவளுக்கு இப்போது வயது 12.இவள் வளர்ந்து என்று நீங்கள் திருமணம் செய்வது? அத்தோடு இவள் உங்களை நிராகரித்து விட்டால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது.
உங்களுக்கேற்ற இயந்திரப் பெண் தயாராக இருக்கிறாள்.
 என்னைப்போலவே"

அவன் தவிர்க்க முடியாமல் புன்னகை ஒன்றை உதிர்த்தான்.

"என்ன சம்மதமா?"

"சம்மதம்"

"மருத்துவச்சான்றிதழ் இருக்கிறதா?"

"இருக்கிறது".

"மன்னிக்கவும், சற்று காத்திருங்கள்"
என்று சொல்லிவிட்டு ஓரு சார்ஜர் வயரை எடுத்து தன் இடுப்பின் வலது பக்கத்தில் சொருகினாள்.

"பேட்டரி மாற்றவேண்டும் என நினைக்கிறேன்.இப்படி அடிக்கடி சார்ஜர் இறங்கி விடுகிறது"

அவன் ஒரு புன்முறுவல் ஒன்றை உதிர்த்தான்.

அடுத்து அவளின் ஆட்காட்டி விரலை இடவலமாக அசைத்தாள்.அதிலிருந்து செவ்வக வடிவில் 16 அங்குல அளவிற்கு திரை ஒன்று அவள் எதிரில் தோன்றியது...

அடுத்து அவள் முன் தோன்றிய எழுத்து வடிவ பிம்பத்தில் அவன் பெயரை தட்டினாள்..

திரையில் அவனைப் பற்றிய விபரங்கள் வந்து விழுந்தன..

பெயர்: ax7543891..

வயது: 27

தொழில்: விவசாயம்

தேவை:மணப்பெண்

எல்லாவற்றையும் என்டர் கொடுத்து ஒருபட்டனை தட்டினாள்.

"உங்கள் அதிர்ஷ்டம் திரு ax7543891அவர்களே.உங்களுக்கேற்ற மணப்பெண் தயாராகி விட்டாள். நீங்கள் இப்போதே இங்கேயே மணம் முடித்து அவளை அழைத்துச் செல்லலாம்"

"மிக்க நன்றி"

"சரி வாருங்கள் விஞ்ஞானக் கூடத்திற்கு செல்வோம்"

அவர்கள் இருவரும் அந்த விஞ்ஞானக் கூடத்திற்கு முன் நின்று தங்கள் அடையாள அட்டையை காட்டியதும் கதவுகள் பக்கவாட்டில் திறந்து அவர்களுக்கு வழிகாட்டின.

அங்கு ஓர் அறையில் கிடத்தப்பட்டிருந்த ஒருப் பெண்ணின் உடல் மிக அழகு படுத்தப்பட்டு சார்ஜர் ஏறிக்கொண்டிருந்தது. அவள் அழகாக இருந்தாள்.

இப்போது வரவேற்பறை பெண் மணமகளின் பின்னால் போய் அவள் முதுகின் மீது கை வைத்து ஓரிடத்தில் அழுத்தினாள். சார்ஜர் முழுவதும் ஏறியதற்கான குறியீடு காட்டியது.

"நல்லது. திரு. ax7543891 இவள் பெயர் ov5032678. இவள் இன்றிலிருந்து உங்கள் மனைவி. இவளை நீங்கள் அழைத்துச் செல்லலாம். இவள் எல்லா விதத்திலும் உங்களுக்கு உதவியாக இருப்பாள். இனிமையாக பாடுவாள். நடனம் ஆடுவாள். உலகத்தின் அத்தனை மொழிகளையும் இவள் உள் வாங்கியிருக்கிறாள். இவளுக்கு தெரியாத விசயங்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு நிறைய கற்றுக்் கொடுத்திருக்கிறோம். மனைவிக்குரிய  அத்தனை கடமைகளையும் செய்வாள் குழந்தை பெற்றுக்கொள்வதை தவிர.

 எதாவது பிரச்னை என்றால் இவளை இங்கே அழைத்து வாருங்கள். நமது கணனி பொறியாளர் சரிசெய்து கொடுப்பார் ஒருவருடம் வரை இலவசமாக சரிசெய்து தருவோம். ஆனால் இவளை துன்புறுத்தினாலோ, அடித்தாலோ எங்களுக்கு உடனடியாக செய்தி வந்துவிடும்.வாழ்க வளமுடன்"

"மிக்க நன்றி...."

"என் பெயர் kj0000000. என்னை நீங்கள் kj என்றே அழைக்கலாம்"

அடுத்து kj மணப்பெண்ணைப் பார்த்து செல்வி.ov இவரை பிடித்திருக்கிறதா.இவரை மணந்து கொள்ள சம்மதமா?"

"எனக்கு சம்மதம்"

"சரி இருவரும் உங்கள் விரல் ரேகைகளை பதிந்து விட்டு நீங்கள் செல்லலாம். வாழ்த்துகள் இருவருக்கும்"

அவன் தன் புத்தம்புது மனைவியின் தோள்மீது கைப்போட்டபடி அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான்.

ஈர்ப்பு

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு............

ஈர்ப்பு

ஒரு மாலை வேளையில் ஓர் உணவகத்தில்தான் அந்த இளம்பெண்ணை  சந்தித்தேன்.  ஏதாவது சாப்பிடலாம்  என்று  நினைத்து சர்வரை அழைக்க நினைத்த போது  என் எதிரில் இரண்டு குழந்தைகளுடன் ஓர் இளவயது பெண்  வந்து  உட்கார்ந்தாள். 

" வணக்கம் சார்"

" வணக்கம்மா"  

" என்னத் தெரியுதா சார்?"

" எனக்குத் தெரியலம்மா"

" முதல்ல இத பிடிங்க" என்றபடி ஒரு பூங்கொத்தை  நீட்டினாள்.

" இது எதுக்கும்மா?"

" முதல்ல பிடிங்க, அப்பறம் இன்னைக்கு என்னோட  ட்ரீட்"

" சாப்பிடுறேன். ஆனா காரணம் இல்லாத எப்படி?"

" முதல்ல சாப்பிடுங்க, அப்பறம் சொல்றேன்"

" சாப்பிட்டே ஆகனுமா?"

" ஆமாம், உங்கப்  பொண்ணு வாங்கி கொடுத்தா  சாப்பிட மாட்டிங்களா?"

"  கண்டிப்பா, இந்த குழந்தைங்க?"

" என் குழந்தைங்கதான். இவ சாருமதி, பையன் ஆனந்த்.இவங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"

குழந்தைகளை ஆசிர்வதித்தேன்

" என்னோட பேரு கூட ஆனந்த கிருஷ்ணன் தான்"

" தெரியும் சார் உங்க பேர் தான் வச்சிருக்கேன்"

" என் பேர் எப்படி தெரியும்மா உனக்கு?"

" எனக்குத் தெரியும். சரி என்ன  ஞாபகம் இருக்கா உங்களுக்கு?"

" சொன்னாதானே தெரியும்"

'" உங்களுக்கு ரொம்ப மறதி சார்"

" வயசாடுச்சிம்மா"

" சார் உங்களுக்கு அப்படி ஒன்னும் வயசான மாதிரி தெரியலயே. என்னோட பெயர் கலைமதி

" சரி எனக்கு எதுக்கு  ட்ரீட்  கொடுக்க ஆசை படுற கலைமதி?"

" யோசிங்க. இப்ப சாப்பிடுங்க"

அனைவருக்கும் உணவு வரவே சாப்பிட்டோம்"

" என்ன யோசிச்சிங்களா?"

" ஞாபகம் வரலயே கலை"

"  நல்லவங்க அவங்க செஞ்ச நல்லத உடனே மறந்துடுவாங்க. சரி நானே சொல்றேன். நான் இப்ப ஒரு டாக்டர். குறிப்பாக சொல்லனுமுன்னா மகப்பேறு மருத்துவர்.  அன்பான கணவர் , பிஸ்னஸ் பண்றார். நல்ல மாமனார் மாமியார். இந்த ஊரிலயே ரொம்ப பெரிய  குடும்பம்"

" ரொம்ப சந்தோசம்மா"

" இத்தனையும் நீங்க சொன்ன சின்ன அறிவுரை"

" நானா, எப்ப?"

" இதே இடத்துல"

" இதே இடத்துலயா?"

" அப்ப நான் +2 படிச்சிக்கிட்டு இருந்தேன் அந்த வயசுக்கே உள்ள சேட்டைகள்,  அடாவடி இதெல்லாம் எங்கிட்ட இருந்துச்சி. அதோட அந்த வயசுக்கே உள்ள  பொய்யான ஈர்ப்பை காதல்னு நம்பிக்கிட்டு இருந்தேன். அப்ப தான் நீங்க மண்டையில உரைக்கிற மாதிரி புத்தி சொன்னிங்க"

" இப்ப  எனக்கு ஞாபகம் வருது கலை,  ஒரு பையன் கூட ஸ்கூல் யூனிபார்ம்ல சாப்பிட வந்த,  அந்த பையன்   கை கழுவ போன சமயத்துல  உன்ன  நல்லா திட்டி விட்டேன்."

"  யப்பா திட்டா அது ? நல்லா வெளுத்து வாங்கிட்டிங்க என்ன"

" இல்லம்மா, அறியா வயசுல ஏற்படுற ஈர்ப்பை காதல்னு நம்பி  ஏமாந்து போற புள்ளைங்க நிறைய, அதான் வந்த கோபத்துல நல்லா திட்டினேன். நான் கூட அப்பறம் ரொம்ப வருத்தப்பட்டேன். அதோட அன்னைக்கு நீங்க இரண்டு பெரும் பண்ண சேட்டைகள், அளவு கடந்த நெருக்கம் எனக்கு கோபத்த வரவச்சிடுச்சி.  அதுக்காக வருத்தப்படுறேன்"

" இல்லப்பா.... உங்கள அப்பான்னு கூப்பிடலாம்தானே?

" தாராளமா"

" அன்னைக்கு ரொம்ப அழுதேன். அப்பறம் யோசிச்சு பாத்தேன்.  யாரோ முன்னபின்ன தெரியாதவங்க ஏன் நம்மை திட்டனுமுன்னு.  அப்பறம் காதலை  மூட்டை கட்டி வச்சிட்டு தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன்"

" அந்த பையன்?"

" சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விலகிட்டார்"

" விலகிட்டார்? ரொம்ப நல்ல பையன் போலிருக்கு"

" அதனாலதான்  நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

" ஓ...!

" எனக்கு வேலை கிடைச்சப்ப, அவர்  அவங்கப்பாவோட வியாபாரத்தை கவனிச்சிக்கிட்டு இருந்தார். இதோ இதே  இடத்துலதான் என் காதலை அவர்கிட்ட சொன்னேன்"

" ரொம்ப சந்தோசப்  பட்டார். இரண்டு வீட்டலயும்  சம்மதிச்சி கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்  இப்ப நான்  சிட்டியில பேமஸ் டாக்டர்."

" ரொம்ப சந்தோசம்மா"

" அப்பா, நீங்க எங்க வீட்டுக்கு வரணும் ஒருநாளைக்கு"

" கண்டிப்பா வரேன் மா"

கலைமதி கொடுத்த விசிட்டிங்  கார்டை வாங்கிக் கொண்டு  வாழ்த்தி விட்டு விடைபெற்றேன்.

கொலையும் செய்வாள் பத்மினி


கொலையும் செய்வாள் பத்மினி
*********************

"எத்தன நாளைக்கு இப்படி நாம திருட்டுத்தனமா சந்திக்கிறது கௌதம்?"

"வெயிட் வெயிட். கூடிய சீக்கிரம் இதுக்கு முடிவு கட்டிடலாம் அனிதா. என் பொண்டாட்டி ஒரு டூவீலர் வேனுமுன்னு கேட்டுக்கிட்டு இருக்கா. இப்ப ஒரு ஆக்டிவா மாட்டியிருக்கு. நாலு மாசத்துல மூனு பேர காலி பண்ணிட்டு இரண்டு கை மாறியிருக்கு"

"எனக்கு புரியல கௌதம்.என்ன சொல்லவர?"

"அந்த வண்டிய வாங்குனவன் எவனும் உயிரோட இல்ல. கிட்டதட்ட எமன். ரொம்ப சல்லிசா விலைக்கு வருது. புது வண்டி. இந்த வண்டிய காட்டுனா எம்பொண்டாட்டி பத்மினி வானாங்க மாட்டா"

"வாவ்...! செம்ம ஐடியா"

"ம் அதான், புரியுதா இப்ப. வண்டிய பத்மினி பேருல வாங்க போறேன். இராசி இல்லாத வண்டின்னு அவ கிட்ட சொல்லமாட்டேன். அந்த வண்டி ராசிப் படி கூடிய சீக்கிரம்.... இல்லன்னாலும் நானே பிரேக் வயர கட் பண்ணிடுறேன். அப்பறம் அவ மூலமா கிடைக்குற இன்சூரன்ஸ் பணம், சர்விஸ் பணம் எல்லாம் நமக்குத்தான். ஓகேவா?"

"சூப்பர்"

"சரி ஏதாவது கொடுத்துட்டுப்போ"

"ம்ம்ம்மா"

*******************

கவனமாக பத்மினியின் பெயரில் வண்டியை வாங்கினான் கௌதம்

"என்ன பப்பி வண்டி பிடிச்சிருக்கா?"

"எப்படிங்க வண்டி புதுசா இருக்கு,விலை இவ்வளவு கம்மியா இருக்கு?"

"ஓனர் வெளிநாடு போறான் பப்பி அதான் வந்த விலைக்கு விக்கிறான்"

"நான் ரொம்ப லக்கிங்க"

"நானும்தான்"

****************

"ஏங்க வண்டியில ஏதோ சத்தம் வருது. நீங்க ஆபிஸ் போற வழியிலதான ஹோன்டா ஷோரூம். அப்படியே சர்விஸ் விட்டுட்டு சாயந்தரம் எடுத்தாந்துடுங்க"

மறுத்தால் சந்தேகம் வரும் என்று நினைத்த கௌதம் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் எதிர்பட்ட அனிதா வழிமறித்து ஏறிக்கொண்டாள்.

"என்ன கௌதம் இந்த வண்டி?"

"அந்த சனியன் சர்விஸ் விட சொல்றா
மறுத்தா சந்தேகம் வரும்"

"ம்"என்றபடி கௌதமை கட்டிபிடித்த அனிதா அவன் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்

"என்ன அனி?"

என்றபடி திரும்ப முயன்றவன் அப்போது தான் கவனித்தான்
இரும்பு ஷீட்களை ஏற்றி வந்த ட்ரெயிலரை.

வேகமா பிரேக் அடிக்க முயன்று அது தோல்வியில் முடிந்து இரண்டு பேரையும் சேர்த்து ஆக்டிவா வோடு தூக்கி எறிந்தது அந்த ட்ரெயிலர் எமன்.

அதே நேரம்.

'ஏன்டா இராசி இல்லாத வண்டிய வாங்கி என்னையாட கொல்லப்பாக்குற?'

என்று முனகினாள்  பிரேக் வயரை பிடுங்கி விட்ட பத்மினி.

வடு

வடு
*********

"ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ"

இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த  குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள்.
இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?
அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா?  
அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா?

சென்னையில்  அலுவலக வேலையாக வந்தவன்  வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது. 

"ச்சந்த்ருஊஊஊஊ"

இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.  வெண்ணிலா?  அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில் உள்ள பிறை போன்ற வெட்டுக்காயத்தின் தழும்பு மறக்க முடியுமா?
*************

"இங்கப் பாருங்க உங்க பையன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு,புள்ளையா வளக்குறிங்க?"
எதிர்வீட்டு வெண்ணிலாவின் அம்மா  அப்பாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் ரத்தம் வடிய வெண்ணிலா அழுது கொண்டிருந்தாள். அப்பா வெளு வெளுவென்று வெளுத்து விட்டார். 

"இனிமே கிட்டிப்புல் விளையாடுவியா விளையாடுவியா?"

நான் வாங்கிய அடி கூட வலிக்கவில்லை எனக்கு. வெண்ணிலா அழுததுதான் எனக்கு வலித்தது.

அப்பாவே தன் சைக்கிளில் அவளை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்துச்சென்றார்,
நான்கு தையல் போட்டார்களாம்.

மறுநாள் பள்ளிக்கு வரவில்லை அவள். இரண்டு நாள் கழித்து மெதுவாக என் வீட்டுக்கு வந்தாள்.

அம்மாதான் விசாரித்தாள். 

"இப்ப தேவலாமாடி"

"தேவலாம்  அத்த"

என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

"சாரிடி நிலா"

"பரவால்லடா. வேனுமுன்னா செஞ்ச? நீதான் பாவம் என்னால உங்கப்பாகிட்ட அடி வாங்குன"

"பச்"

"டேய் ச்சந்த்ருஊஊ  உன் கணக்கு நோட்ட குடுறா, விட்டுப்போன கணக்குலாம் எழுதிக்கிட்டுத் தரேன்"

"ஏன்டி நிலா அவன்தான் உன் கன்னத்த பேத்தான்ல? அப்பறம் ஏன்டி அவன் கூட பேசுற? அப்பறம் உங்கம்மா திட்டுவா"

"போங்க அத்த. அம்மாவுக்கு வேற வேல இல்லை. வேனுமுன்னு யாராவது செய்வாங்களா?"

வெண்ணிலாவின்  குடும்பம் எங்கள் எதிர் வீட்டில் குடிவரும் போது நான் நான்காவது படித்தேன்.
 அவளும் நான்காம் வகுப்பு. அதிலிருந்து எங்கள் நட்பு வளர்ந்தது. இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது பத்தாம் வகுப்பு வரை.  

ஒருநாள் அவளின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி   வேறு ஊர் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். 

வெண்ணிலா அழுது கொண்டே விடை பெற்றாள்.

"என்ன மறந்துடாதடா ச்சந்த்ருஊஊ"

****************

அதன் பிறகு இதோ என் எதிரில் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்தால் யாரும் நாற்பது வயது பெண்மணி என்று  சொல்ல மாட்டார்கள்.
மிக அழகாகவே இருந்தாள்.

நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் நெற்றி வகிட்டுக் குங்குமம் 
அவள் திருமணமானவள் என பறைச்சாற்றியது.

"ச்ந்த்ருஊஊஊஊ"

என் நினைவுகளை கலைத்தது அவளின் குரல்.

"என்னடா அப்படி பாக்குற.யப்பா எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பாத்து"

"சரி இத்தன வருசம் கழிச்சி எப்படி என்ன நாந்தான்னு கண்டு புடிச்ச?"

"அது சஸ்பென்ஸ். அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன். 

ஆனா உன்னோட நடை இன்னும் மாறவே இல்லை. கொஞ்சம் சாஞ்சி சாஞ்சி நடக்குறது. தூரத்துலருந்து நீதானான்னு சந்தேகமா இருந்துச்சி. நீ திரும்புனப்ப கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்"

"---------------"

"ச்சந்த்ருஊஊஊஊ"

"சொல்லுடி"

"நான் பழையமாதிரியே கூப்புடுலமாமுல்ல?"

"தாராளமா. எல்லாரும் ரொம்ப மரியாத குடுத்து குடுத்து ரொம்ப கெட்டு போய்ட்டேன். நீயாவது அப்படி கூப்புடு"

"நீ மாறவே இல்லடா. ஒன்னு சொல்லட்டா?"

"சொல்லு"

" நாப்பது வயசிலும் ஹேண்ட்சம்மாத்தான் இருக்க.அப்படியே மணவறையில உக்கார வச்சா மாப்ளதான்"

"ச்சீ....போடி"

"நிசமாப்பா"

"சரி, நீ எப்டி இருக்க? எத்தன பிள்ளைங்க? உன் லைப் எப்டி இருக்கு?

"ம் நல்லாருக்கேன். இரண்டு பெண்கள். பெரியவள கட்டிக்குடுத்தாச்சி,உனக்கு?"

"இரண்டு பசங்க.படிக்கிறாங்க"

"ஒன்னு சொல்லட்டா ச்சந்த்ருஊஊ?"

"என்ன சொல்லப்போற"

"இதுக்கு மேல என் பர்சனல் லைப் பத்தி கேக்காத. நானும் கேக்கல"

"சரி கேக்கல"

"நம் இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா?  மகள் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைய பெத்துட்டு, நல்லது கெட்டதுக்கு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு நகைகளை அள்ளிப் போட்டுக் கிட்டா அவ சந்தோசமா இருக்கான்னு முடிவு கட்டிடுறாங்க"

நான் அவளையே பார்த்தேன்.

"கமான் ச்ந்த்ருஊஊஊ , இன்னைக்கு என்னோட செலவுலாம் உன்னோடதுதான். பணம் நிறைய வச்சுருக்கியா?"

"ஏய் உனக்கு இல்லாததா? என்ன வேணும்?"

"நீ வா உனக்கு நிறைய செலவு வைக்குறேன்.முதல்ல வயித்துக்கு"

உயர்தர ஹோட்டலில் ஒரு மசால் தோசையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு காச கொடுறா என்று அதிகாரம் செய்தாள்.

"அடுத்து என்னவோ?"

"வா, சொல்றேன்"

பேன்சி ஸ்டோர் ஒன்றில் நுழைந்து கைநிறைய வளையல்கள், பொட்டு கண்மை நகபாலிஷ் என்று வாங்கித்தள்ளினாள்.

"அடுத்து?"

"வா சொல்றேன்"

பிரமாண்டமான துணிக்கடையில் நுழைந்து  சிம்பிளாக காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள். 

அடுத்து நகைக் கடையில் நுழைந்து  ஒரு வெள்ளி மோதிரம் வாங்கிக் கொண்டாள்.

"அடுத்து என்னவோ?"

"ஐஸ்க்ரிம்"

ஐஸ்கிரிமை அவள் சாப்பிடும் போது யாரும் பார்த்தால் இவளுக்கு ஒரு மருமகன் இருக்கிறான் என்று சொல்லமாட்டார்கள். ஒரு குழந்தையைப் போல ருசித்தாள்.

"பீச்சுக்கு போலாமா?"

உடனே ஒரு டாக்சி பிடித்தேன்.

கடற்கரையில் ஒருக் குழந்தையைப் போல  அலைகளோடு விளையாடினாள். என் மீது தண்ணீரை வாரி இறைத்தாள். கடலை வாங்கி கொறித்தாள். பழங்கதைகளை பேசினாள். எழுந்தாள்

"சரி நேரமாச்சி போலாம்"

"எங்க?"

"நேரா கோயம்பேட்ல என்ன பஸ் ஏத்தி விடுற"

"எந்த ஊருக்கு?"

"அது சொல்லமாட்டேன்,திருச்சி பஸ்ல ஏத்தி விடு.போதும்.

கோயம்பேடு வந்து திருச்சி பேருந்தில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலும் சில பிஸ்கட் பாக்கட்டும் சில வார இதழ்களும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்து புறப்படும் போது  கையசைத்தாள்.நானும் கையை அசைத்தேன். பேருந்து திரும்பும் போது ஒரு பேப்பர் மடிப்பு அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.

'அன்புள்ள  சந்த்ரு இன்னைக்கு  ரொம்ப சந்தோசமா இருந்தேன். என் பால்ய காலத்தை மீட்டு கொடுத்ததிற்கு மிக்க நன்றி. இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.உன்னை வாழ்க்கையில் திரும்ப சந்திப்போமா என்று நினைத்தேன்.உன்னை சந்தித்து விட்டேன்.அது போதும் எனக்கு.

உன் குழந்தைகளுக்கு என் ஆசிகள்.என் நினைவை இ்த்தோடு அழித்து விடு.உன் மனைவியை எப்போதும் போல் சந்தோசமாக வைத்துக் கொள்.நாம் இனிமேல் எப்போதும் சந்திக்க வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல.  நான் எங்கு இருக்கிறேன் என் மொபைல் நம்பர் என்ன, நான் பேஸ்புக்கில் இருக்கிறேனா   என்று தேட முயற்சிக்க வேண்டாம் பை.

இப்படிக்கு, உன் தோழி நிலா'.

பேருந்து என் கண்களில் இருந்து மறைந்து போனது.
*****************

பேருந்தில் பயணித்த வெண்ணிலா தன் மொபைல் எடுத்து பேஸ்புக்கை திறந்து அதில் சந்திரசேகரன் சுப்ரமணியன் என்ற பேஸ் புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் சந்திரசேகரனின் புரபைல் பிக்சரை அவளது விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அவள் உதடுகள் 
'சந்த்ரூஊஊஊஊஊ' என்று முணுமுணுத்தன.

முற்றும்.

*எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சந்த்ரூவும் எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு வெண்ணிலாவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இரத்தத்தின் நிறம் கருப்பு

இரத்தத்தின் நிறம் கருப்பு
****************************

See all notifications

'விஷ்னு commented on your post'

அபர்ணா சிரித்தபடி  தன் பேஸ்புக் பக்கத்தை திறந்தாள்.

எல்லாம் கமெண்ட்டும் ஒரே மாதிரியாய்.  

'வாவ்'

'நைஸ்'

'செம'

எல்லா கமெண்டையும் படித்துவிட்டு,

மெஸேஜ் பக்கத்தை திறந்தாள்.

அங்கேயும் வழக்கம் போல்

'ஹாய்'

'i love you sellam'

'varalama?'

'நீங்க எப்ப ஃபிரி?'

விஷ்னு மட்டும்  ஆய் செல்லம் உன் மேனிக்கு சோப்பாக நான் மாற வேண்டும் என்று கவிதை பாடி வைத்திருந்தான்.

இங்கே விஷ்னுவைப் பற்றி சொல்லியாக வேண்டும்.

பேஸ்புக்கில் பெண்களுடன் கடலை போடவேண்டியது.மடங்குகிற பெண்களை முடித்து விட்டு அடுத்தப் பெண்ணை தொடரவேண்டியது.வயது ஒரு பொருட்டில்லை அவனுக்கு தினம் ஒருப் பெண் வேண்டும்.  அவ்வளவுதான்.  கேட்டால் காமத்திற்கு வயதில்லை என்பான். கொஞ்சம் அழகும்  நிறைய வசதியும்  வைத்து பெண்களை வளைத்தான்.

இதோ நம் நாயகி அபர்ணா அவனுக்கு,
'இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே'  என்று பதில் அனுப்பினாள் 

அவளை புகழ்ந்து வந்த அத்தனை கமெண்ட்களுக்கும் பொறுப்பாய் யாருடைய  மனம் கோணாமல் பதில் எழுதினாள்.

'உங்க நிஜப்பெயரே அபர்ணாதானா?  உங்கள நேரா பாக்கனுமே என்று வழிந்தான் சோப்பாக மாற துடித்த  விஷ்னு.

'ம் பாக்கலாமே' என்று பதில் அனுப்பினாள் அபர்ணா.

'ஐயோ தெய்வமே எப்பங்க?'

'சண்டே'

'எங்க? எத்தன மணிக்கு?'

'நுங்கம் பாக்கம் இரயில்வே ஸ்டேசன். காலை 5மணிக்கு'

'ஐயோ நீங்க சுடுக்காட்டுக்கு வரச்சொன்னாலும் வருவேங்க, ஆனா ஏன் காலையில  அதுவும் இரயில்வே ஸ்டேசன்ல?'

'நான் சண்டே ஊருக்கு கிளம்புறேன்.  அப்படியே உங்கள பாத்துட்டு கிளம்பலாமுன்னு'

'அப்ப நீங்க இருக்குறது நுங்கம் பாக்கமா?'

'ம்.சந்தோசம்தானே?

'இல்ல அபர்ணா'

'என்னாச்சி? நாந்தான் வரேன்னு சொன்னேனே'

'அந்த சண்டே வர இன்னும் நாலு நாள் இருக்கு'

'அதுக்கு?'

'அட்வான்ஸா முத்தம்'

'போடா'

'சரி  சரி கோச்சுக்காத அபர்ணா.என் போட்டோவ நீ பாத்திருக்க. உன் போட்டோவ நான் பாக்கலயே. எப்படி அடையாளம் கண்டு பிடிக்கிறது?'

'மஞ்சள் சுடில வரேன்,நல்லா கேளு.  கூட யாரையும் அழைச்சிட்டு வராத. தனியா வா'

'ம் சரி அபர்ணா.

நான்கு நாட்கள் கழித்து நுங்கம் பாக்கம் இரயில் நிலையத்தில் அந்த ஞாயிற்றுக் கிழமை காலை  மணி நான்கு ஐம்பதுக்கே   தனியாக கிடந்த இருக்கை ஓன்றில் அவளுக்காக காத்திருந்தான்.

இன்னும் விடியாத காலையில் ஐன நடமாட்டம் அதிகமில்லை.  மசமசவன்று கொஞ்சம் இருட்டாக வேறு இருந்தது.

மிகச்சரியாக  ஐந்துமணிக்கு நீல ஜீன்ஸ்  டீ சர்ட் அணிந்து இரயில் நிலையத்திற்குள் நுழைந்தாள் அபர்ணா.

நேராக விஷ்னு இருக்குமிடம் அறிந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் பின்னால் கைபோட்டபடி அவன் வாயை கெட்டியாக  பொத்தியவள் அவன் என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் மறுகையில் வைத்திருந்த கூர்மையான கத்தியை அவன் வயிற்றில் இறக்கினாள்.  

ஒருமுறை திமிறியவனை  கத்தவிடாமல்  வாயை கெட்டியாக மூடி கத்தியை இன்னொருமுறை இறக்கினாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவாசம் அடங்கியதும் கத்தியிலிருந்த இரத்தத்தை அவன் அணிந்திருந்த கருப்பு சட்டையில் துடைத்து விட்டு  கத்தியை பைக்குள் வைத்தவள் மறக்காமல் விஷ்னுவின்  மொபைலை எடுத்துக்கொண்டு சாவகாசமாக  அங்கிருந்து புறப்பட்டாள்.

இன்னும் சற்று நேரத்தில்

இன்னும் சற்று நேரத்தில்
உலகம் அழியப்போவது போல
ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி ஓடிக்கொண்டிருந்தனர்

பலூன் காரன் கையில் இருந்த ஊதிய பலூன்கள்
அவிழ்த்து விட்டால் பறந்துவிடுவோம் என்பது போல் ஆர்ப்பரித்தன

பலூனையே முறைத்தபடி
இருந்தது
காய்கறிக் கடையில் வெண்டைக்காயின்
முனை ஒடித்து போட்டபடி 
பேரம்பேசிய தாயின் இடுப்பில் இருந்த
குழந்தை ஒன்று.

சாராய நெடியில் நாளைய உலகம் நம் கையில் என்பது போல் பிதற்றினர் இருவர்

தேநீர் கடையின் வாசலில்
தேநீரை உறிஞ்சியபடி  சிலர்

இத்தனைபேர் மத்தியில்
நின்றபடி,

"ஏ அயோக்கியனே திரும்பிப் பார்"என்றேன்

நாலைந்து பேர் திரும்பிப் பார்த்தனர்.

"ஏ குடிகாரா" என்றேன்.

இரண்டு குடிமகன்களும் திரும்பிப் பார்த்தனர்.

"ஏ திருட்டுப் பயலே"
 என்றேன்

ஏழெட்டு பேர் ஏக காலத்தில்
திரும்பினர்.

"ஏ மனிதனே திரும்பிப் பார்"
என்றேன்.

ஒருவரும் திரும்பிப் பார்க்க வில்லை

ஊதிய பலூனின் நூலை
கையில் பிடித்தபடி
 அம்மாவின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து புன்னகைத்தது