Saturday, June 27, 2020

நடிகன்



நடிகன்

நான் மனோ- மனோகர்

மிகப்பெரிய இடத்துப்பிள்ளை, இப்போது நடுத்தெருவில்.
அதற்கு காரணம் நான்தான்.

ஒழுங்காக படித்து முடித்துவிட்டு அப்பாவிற்கு உதவியாக அப்பாவின் வியாபாரங்களை கவனித்திருக்கலாம். 

நண்பர்களை சேர்த்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டு குடி கும்மாளம் என்று இருந்தால் எந்த தகப்பனுக்குத்தான் பிடிக்கும்?

அவரும் எவ்வளவோ சொல்லி சொல்லி பார்த்தார் நான் திருந்தவில்லை. 
கடைசியில் பெல்ட் எடுத்து விளாசி விட்டார்.

நான் கோபித்துக்கொண்டு வெளியே வந்து விட்டேன்.

எதுவும் பிடிக்கவில்லை. என்னையே பிடிக்கவில்லை. பக்கத்தில் இருந்த பூங்காவில் அமர்ந்தேன்.

சாவதற்கும் தைரியமில்லை. சின்ன வயசிலியே அம்மாவை இழந்தவன். ஒருவேளை அம்மா இருந்திருந்தால் ஒழுங்காக வளர்த்திருப்பாளோ என்னவோ?

"ஹலோ சார்"

திரும்பிப்பார்த்தேன்.

ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு மனிதர் என்னருகில் நின்றிருந்தார்.

என்ன என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன்.

"வணக்கம், நான் பிலிம் டைரக்டர்.நல்ல ஹிரோ தேடிக்கிட்டு இருக்கேன்.நீங்க என் படத்துல நடிக்க முடியுமா?"

"என்ன சொல்றிங்க சார்?"

"நிஜமாத்தான் சொல்றேன்.நான் உங்கள போலவேத்தான் என் படத்துக்கு ஒரு ஹீரோ தேடிக்கிட்டு இருந்தேன். ஒன்னும் யோசிக்க வேணாம் வாங்க என் கூட"

இவரை நம்புவதா வேண்டாமா? எனக்குள் குழப்பம்.

என்கையில சுத்தமாக  காசு இல்ல. அதனால இழப்பதற்கு ஒன்றுமில்லை. இப்ப இருக்கும் மனநிலைக்கு ஒரு மாற்றுச்சூழல் வேண்டும். சரி போய்த்தான் பார்ப்போம்.

அடுத்த ஒருமணி நேரத்தில் ஒரு பிரமாண்ட மாளிகையின் முன் கார் நின்றது.

"வாங்க உள்ள இதான் நம்ம குடிசை"

பின் தொடர்ந்தேன்.

ஹாலில் உட்கார வைத்தவர், "இங்க உக்காருங்க. டீவி பாத்துக்கிட்டு இருங்க. கொஞ்ச நேரத்துல குளிச்சிட்டு வரேன்"

அவர் போனவுடன், மின்னல் போல் அவள் என்னெதிரில் காப்பி கோப்பைகளுடன்.

அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தேன். அழகென்றால் அப்படி ஓர் அழகு.
தேவதைகளை பற்றி படித்திருக்கிறேன்.

இப்போது இதோ என்னெதிரில்.

"காப்பி எடுத்துங்குங்க"

"தாங்க்ஸ்"

"உங்க பேரு?"

"மனோ....மனோகர்"

"அப்பா உங்கள பெரிய ஹீரோவா ஆக்குறேன் சொல்லியிருப்பாரே?"

"ஆமாம்"

"நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். அப்பாவுக்கு கொஞ்சநாளா மனநிலை சரி இல்லை."

நான் கொஞ்சம் மிரண்டேன்.

"பயப்படாதிங்க மனோ.நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் ஆகாது. அவர் ரொம்ப வருசம் அஸிடென்ட் டைரக்டராகவே காலத்தை ஓட்டியவர். அவருக்கு தன்னால் ஒரு டைரக்டரா ஆக முடியலயேன்னு வருத்தம்.ஆனா ரொம்ப திறமை உள்ளவர்.யாரும் அவர் திறமையை புரிஞ்சிக்கல.அந்த ஏக்கத்திலியே அவர் மனநிலை பாதிச்சிடிச்சி. இப்படித்தான் போற வர பசங்கள உங்கள ஹீரோ ஆக்குறேன் கொண்டு வருவார்.நடிக்க சொல்லி கேட்பார்.மறுநாள் நீங்க யாருன்னு கேட்பார்"

"ஐயோ. அப்ப நான் போயிடட்டுமா?"

"உடனே போயிடாதிங்க.அப்பறம் அவர கண்ட்ரோல் பண்ணவே முடியாது. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிடுவார். இன்னைக்கு மட்டும் இங்க இருந்துட்டு நாளைக்கு போயிடுங்களேன்.ப்ளிஸ் எனக்காக"

புன்னகைத்தாள்

அந்த புன்னகையில் சுருண்டு போனேன்.

அவர் குளித்து முடித்து தலையை துவட்டியபடி வந்தார்.

"என்ன மனோ காப்பி சாப்பிட்டிங்களா?"

" சாப்பிட்டேன் சார்"

"சரி நான் வரேன் மனோ. அப்பா கூட பேசிக்கிட்டு இருங்க."
- கிளம்பினாள்.

"உங்க பேரு?"

"சுதா"

உள்ளே போய் மறைந்து போனாள்.

"சரி மனோ இப்ப உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறேன்.நான் சொல்ற சீனுக்கு நடிச்சி காமிங்க பாப்போம்"

'சரிதான் அவ சொன்னது'

"நீங்க சிச்சுவேசன் சொல்லுங்க சார். பிச்சி உதறிடுவோம்"

நானும் அவர் போக்கிலியே போனேன்.

"இப்ப பாருங்க மனோ. நம்ம ஹீரோ -அதாவது நீங்க- கடத்தல்காரங்க கிட்ட மாட்டிக்கிறிங்க. அப்ப ஒரு வசனம் பேசுறிங்க. 

'அய்யா என்ன விட்றுங்க. என்ன ஒன்னும் பண்ணிடாதிங்க.எனக்கு பயமா இருக்கு. நீங்க எவ்வளவு பணம் கேட்டாலும் எங்கப்பா கிட்ட வாங்கி கொடுத்துடுரேங்க ப்ளிஸ்... ப்ளிஸ் அப்படின்னு சொல்லுவேன்னு நினைசசிங்களாடான்னு' சொல்லிட்டு சும்மா வில்லன்கள பின்னி எடுக்குறிங்க."

அவர் சொன்னபடியே நடித்து காண்பித்தேன்.

"வெரிகுட். பிரமாதம்"

"அடுத்து லவ் சீன். இதுல கதாநாயகியா நடிப்பது யாரு தெரியுமா?, என் பொண்ணு சுதா"

"அவர் சொல்வது நடக்காது என்று தெரிந்திருந்தும். அதை கேட்டதும் வானத்தில் ஜிவ்வென்று பறந்தேன்"

சுதா வந்தாள். சில காதல் வசனங்களை பேச சொன்னார். சில நடன அசைவுகள். 

எல்லோம் ஓகே மனோ.அடுத்த மாசம் நம்ம படத்த ஆரம்பிச்சிடலாம்.

சாப்பிட்டு படுத்தேன். என் நினைவுகள் சுதாவையே சுற்றிச்  சுற்றி. 

கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்தால் சுதா.

"என்னங்க சுதா?"

"அப்பா நம்மள வச்சி பேச சொன்ன வசனமெல்லாம் பொய்தான். ஆனாலும் அது உண்மையாக இருக்கக்கூடாதான்னு தோணுது."

அவள் கண்களை பார்த்தேன்.

வெட்கம் நிறைய.

குட்நைட் மனோ. தூங்குங்க காலையில பேசலாம். 

போய் விட்டாள், என் தூக்கத்தை பறித்துக்கொண்டு.

அவளை நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன்.
காலையில் கதவை தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தேன்
கதவை திறந்தால் சுதா.

"மனோ. அப்பா தூங்குறார் நீங்க கிளம்புங்க. நாம அப்பறம் மீட் பண்ணலாம்"

'மனமில்லாமல் வெளியே வந்தேன்.
இனி எங்கு போவது? சரி வீட்டுக்கு போகலாம்'

வீட்டை அடைந்தேன்.

"ராஸ்கல். உன்னால எனக்கு இருபத்தைந்து லட்ச ரூபா லாஸ். யாரு உன்ன கடத்தி வச்சிருந்தாங்க? "

அப்பா எகிறினார்

"கடத்துனாங்களா? டாட், நைட் ஒரு லூஸ் கிட்ட மாட்டிக்கிட்டேன்"

போடா முட்டாள். இங்க வா. "

LED யில் ஒரு பென்ட்ரைவை செருகி ஆன் செய்தார். அதில்  நான் நடித்து காட்டிய வசனங்கள் ஓடிக்கொண்டிருந்து. அழகாக எடிட் செய்யப்பட்டிருந்தது கடைசி வசனம் மட்டும் வெட்டப்பட்டு.

நான் அழகாக ஏமாற்றப்பட்டிருக்கிறேன். 

உடனே சுதா வீட்டிற்கு போனேன். வீடு பூட்டிக்கிடந்தது.
கேட்டில் TO LET வாசகம்

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.

அவர்கள் நடிப்புக்கு 25 லட்ச ரூபாய் குறைவுதான்.

அவளும் நானும்



அவளும் நானும்
***************
வயது 38

"அங்கிள் உங்கள அந்த ஆன்ட்டி கூப்பிடுறாங்க"

-- ஒரு சிறுமியின் குரல்.

"யாரு?"

திரும்பிப் பார்த்தால்
தாமரை.
*****************
வயது 7

"ஏன்டா மாப்ள இன்னும் படுக்கைய நனைக்கிற பழக்கம் போகலயாடா"

மாமி தன் பெண்களுக்கு முன்னால் கேட்கும் போது நாக்கைப் பிடுங்கி கொள்ளலாம் போல இருக்கும்
அதுவும் இந்த தாமரை நமுட்டு சிரிப்பு சிரிப்பாள்.

தாமரை பெரிய மாமா பெண். மாமாவிற்கு இரண்டு பெண்கள். 
தாமரை என்னுடன் பேச மாட்டாள். எதுவாக இருந்தாலும் தன் தங்கையிடம் கொடுத்து விடுவாள் கடன்காரி.

விடுமுறை மாமா வீட்டில்தான் கழியும். கினற்றுக்கு குளிக்கப் போனோம். அது பெரிய பாறைக்கிணறு. எனக்கு இறங்க பயம். அவள் நன்றாக நீச்சல் அடித்தாள். எனக்கு நீச்சல் தெரியாது. அப்பவும் நமுட்டு சிரிப்பு சிரித்து விட்டு எனக்காக பம்பு செட்டை போட்டு விட்டாள்.

வயது11

தாமரைக்கு இப்போது முன் இரண்டு பற்கள் நீண்டு அவலட்சனமாய் இருந்தாலும் அவள் லட்சனமாகவே இருந்தாள்

தாமரையின் ஊரில் பெரிய பள்ளிக்கூடம் இல்லாததால் எங்கள் வீட்டில் தங்கி படித்தாள். இங்கே நான் அவளை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிப்பேன். நான்தான் கிளாஸ் லீடர் வகுப்பில் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து கொண்டு இருந்தேன். ஆறாம் வகுப்பு முழுவதும் கணேசன் என்ற என் பெயர் பரவியது.

வகுப்பில் புளியங்காய் மாங்காய் இலந்தைப்  பழம் வைத்துக்கொண்டு ரகசியமாக தின்பார்கள்.அதில் இரண்டு குள்ளச்சியும் ஒரு கட்டச்சியும் கூட்டு களவாணிகள்.
என் வேலை அவர்களை ஆசிரியரிடம் போட்டு கொடுப்பது.
பின்ன என்னா நமக்கு குடுக்காம திங்குறாளுங்க.

தாமரை படிப்பில் அத்தனை சுட்டி இல்லை

சில காலம் அவளை பிரிந்திட்டேன்.

வயது 19 

இப்போது சின்ன மாமாவிற்கு கல்யாணம் நடந்து சின்ன மாமி வந்துட்டாங்க.
நான் அவங்களுக்கு செல்லப் பிள்ளை. சிறுவயதிலிருந்தே தூக்கி வளர்த்தவர். சின்ன மாமிக்கு தெரியாத விசயங்கள் ஒன்றுமே இல்லை என்பது என் நம்பிக்கை.நகரத்தில் வளர்ந்தவர். எல்லோரும் ஒரே சொந்தம்.

நான் எப்போதும் சின்ன மாமியுடன் தான் இருப்பேன். 
மாமி வயலில் வேலை செய்து கொண்டிருந்தாங்க. நான் வரப்பில் நின்று படி அவங்க கிட்ட பேசிக்கொண்டு இருந்தேன்.
திடிரென்று கரும்பு தோட்டத்தில் இருந்து யாரோ வரும் சத்தம்.

வந்தவள் தாமரை.

கையில் பூக்கூடையுடன் ஒரு தேவதை போல வந்தாள் 
பருவத்தின் அத்தனை அழகையும் தன்னுள் அடக்கிய படி. பல வருடங்களுக்குப்பின் இன்றுதான் பார்க்கிறேன்.

என்னைப்பார்த்ததும் தலையை குனிந்து கொண்டாள். கண்களில் மின்னல் . இதழில் சிறு புன்னகை. 

புன்னகைக்கிறாளா? நமுட்டு சிரிப்பு சிரிக்கிறாளா?
கடன்காரி பேசினால் என்ன முத்தா உதிர்ந்து விடும்.

'ஆ! எங்க போச்சி பல்லு?'

வாய்க்காலில் தண்ணீர் சலசலத்து கொண்டு ஓடியது. ஒற்றை வரப்பில் பூமி அதிராமல் நடந்தவள் லேசாக திரும்பி பார்த்து விட்டு ஒரு கனகாம்பரம் பூவை வாய்க்கால் தண்ணீரில் போட்டாள். தண்ணீர் நான் இருக்கும் திசை நோக்கி வந்ததால், இப்போது பூ என்னை நோக்கி.....

குனிந்து பூவை எடுத்துக்கொண்டேன்.

திரும்பிப் பார்த்தால், அவள் வலமாக திரும்பி கரும்புத் தோட்டத்தில்  மறைந்து போனாள்.

எல்லாம் முடிந்தது ஒரு நிமிடத்தில்

"அத்தே எங்க பல்ல காணும் ?"

"டேய் இப்ப அவ வளந்துட்டாடா. நல்ல சதை போட்டிருக்கு. அவ பல்லுக்கு கம்பி கட்டியிருந்தா
அதான் பல்ல காணும். உனக்கு பிடிச்சிருக்கா? கட்டிக்கிறியா?"

"ஐயோ...! போங்க அத்தே. கிண்டல் பண்றிங்க."

"கிண்டல் இல்லடா. என்ன நீங்க இரண்டு பேரும் ஒரே வயசா போயிட்டிங்க. இல்ல நானே பெரியவர் கிட்ட சொல்லி முடிச்சுருவேன்"

"என்ன அத்தே இப்படி சொல்றிங்க? அப்ப உங்க பொண்ணு எனக்கில்லையா?"

"அய்யோ என் மருமவனே. அவளையும் சேத்து கட்டிக்க, இப்ப என்ன கெட்டுப் போச்சி?"

அதன் பிறகு தாமரை கல்யாணம் செய்து போய் விட்டாள்.
*********************
வயது 38

தாமரையை நோக்கிப் போனேன்.

"எங்களலாம் மறந்துட்டிங்களா?"

முதன் முதலாக என்னிடம் சகஜமாக பேசுகிறாள்.

என் மனைவி குழந்தைகளைப் பற்றி விசாரித்துக்கொண்டேப் போனாள்.
அவளுக்கு மூன்று பெண்கள். அதில் ஒரு பெண்ணுக்கு சற்றுமுன்தான் திருமணம் முடிந்தது.

நான் வந்தது அவளுடைய பெண்ணின் திருமணத்திற்குத்தான்.

பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவழைத்தாள்.

"பிள்ளைங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க"

எனக்கு கட்டளையிட்டாள்.

ஆசிர்வதித்தேன்.
ஒரு நிமிடம் தாமரையை உற்றுப்  பார்த்தேன்.

தலையில் ஓரிரு நரைமுடிகள். ஒட்டிய கன்னம்.முன்நீட்டிய பற்கள். இருப்பினும் அவள் எனக்கு அழகாகவே தெரிந்தாள்.
அவள் இப்போது மாமியார். ஐந்தாவது படிக்கும் என் மகன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

நான் என்னை ஒரு நிமிடம் உள் வாங்கினேன். 
38 வயது எனக்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வர வில்லை. 
38 வயது ஆண் இன்னமும் அப்பாதான்.
38வயது பெண் மாமியாராகி விட்டாள்.

Friday, June 26, 2020

கருப்பசாமி கோவில்

அடர்ந்த கருவேலங்காட்டிற்கு நடுவில்  இருப்பது தான் கருப்பசாமி கோவில்

அடர்ந்த மரங்களுக்கு இடையில்  மண்சிலையாக இருந்த கருப்ப சாமி பூசாரி குணசேகரன் தயவால் காற்றடிக்க ஆரம்பித்ததும்  மிகப்பெரிய கோவிலாக வளர்ந்து இன்று கருப்பசாமி மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.  இத்தனையும்  கோவிலுக்கு  பூசாரியாக  குணசேகரன் வந்தபிறகுதான்.  தன் அப்பா வழியில் அப்பாவிற்கு பிறகு கோவிலின் பூசாரியாக உருவெடுத்தார்.

சும்மா ஒன்றுக்கும் இரண்டுக்கும் தட்டேந்திக்கொண்டிருந்தவருக்கு   கொஞ்சம் இவர் பக்கம் காற்றடிக்க யாரோ சிலருக்கு குறி சொல்லப்போய் அது பலித்து விட கருப்பசாமியை பின்னுக்குத்தள்ளி இவர் ஹீரோவாகிப்போனார். 

தமிழகத்தின் சில அரசியல் பிரமுகர் முதல் உள்ளூர் பிரமுகர்கள் அதிகாரிகள் , காவல்துறை என  மிக செல்வாக்கை பெற்றிருந்தார்.
 
தொலைந்த பொருளை கண்டுபிடிக்கவும் காரியம் கை கூடவும்  துரோகம் இழைத்தவனை வஞ்சம் தீர்க்க  என நிறைய பேர் வருவார்கள்.  செவ்வாய் கிழமை ஆகிவிட்டால் கோவிலுக்கே பேருந்துகள் விடுமளவுக்கு கூட்டம் கூடும்.   கூட்டத்திற்கிடையில்  நுழைந்து  பிடிகாசுகளை அள்ளி கொடுப்பார். அதை வாங்க கூட்டம் முண்டியடிக்கும்.

அந்த காசுகளை வாங்கி வீட்டில் வைத்தால் பணம் பெருகும் என்று நம்பிக்கை.  

ஒரு நாள் காலையில் அபிசேகம் செய்ய கோவிலைத்திறந்த பூசாரி குணசேகரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப் பட்டிருந்தது.  கோவிலின் வெங்கல சிலை காணவில்லை. 

உடனே தாமதிக்காமல்  தனது பைக்கில் கிளம்பினார் காவல்துறைக்கு புகார் கொடுக்க.

கொஞ்ச தூரம் சென்றிருப்பார். எதிரே  புல்லட் ஒன்று வந்தது. வந்தவர் போலிஸ் இன்பெக்டர்.   

இருவரும் அரக்க பரக்க கீழறங்கினர். 

"உங்கள பாக்கத்தான் ஓடியாரேன் இன்ஸ்பெக்டர். இன்னைக்கு................"

பூசாரி சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் இடைமறித்தார்.

" பூசாரி, ரொம்ப அர்ஜெண்ட்.
 ராத்திரி ஸ்டேசன்ல முகமூடி திருடனுங்க  நுழைஞ்சி  இரண்டு காண்ஸ்டபிள கட்டி போட்டுட்டு பெட்டிய உடைச்சி  இரண்டு லட்ச ரூபா பணம்,  FIR  புத்தகம்  வெளிய  நிப்பாட்டி வச்சிருந்த    பைக் எல்லாத்தையும்  தூக்கிட்டு போய்ட்டானுங்க  அது யாருன்னு நீங்கதான் கண்டுபிடிக்கனும் "

பூசாரி தலையில் கைவைத்தபடி உட்கார்ந்து விட்டார்.

ஆதவன்

ஆதவன்

ஆதவன் என்ற பெயரைக் கேட்டாலே போதும் நான் நீ என்று சம்பளம் எல்லாம் வேண்டாம் அவர் படத்தில் தலைக் காட்டினால் போதும் என்ற முன்னனி நடிக நடிகைகள் இன்று அவரைப் பார்த்தாலே நழுவுகிறார்கள்.

கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் லைட்பாயாக, உதவி டைரக்டராக அதற்குப் பின் அசோசியட் டைரக்டர் என்று வளர்ந்து  மெதுவாக எப்படியோ ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து முதன்முதலாக ஒருப் படத்தை இயக்கினார். 

சண்டைக்காட்சிகள் இல்லாமல், குத்தாட்டம் இல்லாமல் இயல்பான பாடல்காட்சிகளுடன் மிகக் குறைந்த செலவில் படம் வெளிவந்தது.

படம் வசூலை வாரிகுவித்ததோடு அல்லாமல் அவார்ட்களை அள்ளித்தந்தது.

எல்லாம் மூன்று படங்கள் வரைதான். நாலாவதாக சொந்தப்பட முயற்சியில் படுதோல்வி. ஒருவாரம் கூட நிற்கவில்லை.இரண்டாம் நாளே காலைக் காட்சி போடலாமா என்று ஆலோசித்தனர் தியேட்டர்க்காரர்கள்

"ஆதவன் அவன் அவ்வளவுதாய்யா. நான் சொல்லல.  கலை கலைன்னு சொல்லிக்கிட்டு இருந்தா இன்டஸ்ட்ரில நிக்க முடியாது தெரியுமோ.அங்கங்க மசாலா தூவனும்".  -அனுபவஸ்தர் ஒருவர்.

அடுத்து ஒரு தயாரிப்பாளர் உதவியில் படம் எடுத்தார். படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.

தயாரிப்பாளர் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டார்.

'ஆதவன் படத்துக்கு போவோமா கூட்டமே இருக்காது ' என்று காதலர்கள் பேசிக்கொள்ளுமளவிற்கு போய்விட்டது.

வீட்டில் மனைவி முகங்கொடுத்து பேசுவதில்லை. பிள்ளைகள் கிட்டே வர பயந்தார்கள். இனி யாரிடமும் உதவி டைரக்டர் என்று போய் நிற்க முடியாது.

என்ன செய்யலாம்?
இருப்பதை எல்லாம் விற்று பழைய கடன்களை அடைத்தார். ஓரிருவரை வைத்துக்கொண்டு மற்றவர்களை செட்டில் செய்து அனுப்பி வைத்தார்.

கையிலிருப்பதை கூட்டிக் கழித்துப் பார்த்தார். இதோட சரி.ஒன்னு இதுல நிலைச்சி இருக்கனும் இல்ல.எங்கேயாவது போய் டீ கிளாஸ் கழுவினாலும் சரி என்று முடிவெடுத்தார்.

மளமளவென்று புதுசா நடிக நடிகையை தேர்வு செய்தார். புது இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தார். பாடல்களுக்கு இவர் சொன்ன மெட்டுக்களில் பாடல்கள் தயார் செய்தார்.  என்ன படம் என்ன கதை என்று யாருக்கும் புரியவில்லை.  படம் கொஞ்சம் வளர்ந்தது. ஒளிப்பதிவாளர் பாதியில் கழண்டு கொண்டார்.

"என்னய்யா படம் எடுக்குறான்.ஒரு இழவும் புரியல"

ஒருவழியாக படம் முடிவடைந்தது.
 கதை எங்கே என்று தேடுமளவிற்கு  இருந்தது.

கதை இல்லாவிட்டாலும் பரவாயில்ல ஒரு கோர்வை வேண்டாமா?. குரங்கு மாதிரி ஹீரோ கோட்டான் மாதிரி ஹீரோயின். கலைப்படமா மசாலாப்படமா ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. பாதியிலியே வினியோகஸ்தர்கள் எழுந்து விட்டனர்.

மெதுவாக சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரை வாடகைக்குப் பிடித்து காலை காட்சி மட்டும் திரையிட்டார். 
முதல் காட்சி பத்து பேர் கூட தேறாது.  அடுத்த காட்சி போடலாமா வேனாமா? ,ஆலோசித்தார் தியேட்டர்க் காரர்.

அடுத்த நாள் காலைக் காட்சி  கொஞ்சம் சுமாரானக் கூட்டம்   

கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அடுத்தடுத்து கூட்டம் திமுதிமுவென.

'என்னமா படம் எடுத்திருக்கான்யா.சூப்பர்ல?'

பத்திரிக்கைகள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தன.  மளமளவென்று தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் படம் பிய்த்துக்கொண்டு போனது.

இப்போது ஆதவனுக்கே ரசிகனின் மனநிலை புரியவில்லை.

"நான்தான் சொன்னேன்ல உண்மையான கலைஞனுக்கு அழிவு கிடையாதுய்யா ஆதவன் திரும்ப எழுந்து வருவான்னு சொன்னேன்ல இந்தா வந்துட்டான் பாத்தியா?"  

-தூற்றிய கூட்டம் துதி பாடியது.

Sunday, November 19, 2017

பொம்மை

பொம்மைக்கு
சோறுட்டிய குழந்தை
'வயிறு ரொம்பிடுச்சா?'
என கேட்கிறது

பக்தனின் கேள்விக்கு
பதில் சொல்லாத
கடவுள் போல்
மௌனித்து நிற்கிறது
பொம்மை

கடவுளின் மௌனத்தை
புரிந்த பக்தன் போல்
மனநிறைவுடன்
புன்னகைக்கிறது
குழந்தை.

Friday, November 17, 2017

வடு

வடு
*********

"ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ"

இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த  குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள்.
இப்போது எங்கிருக்கிறாளோ? எப்படியிருக்கிறாளோ?
அவளுக்கும் என்னைப்போல் ஓரிரு நரை விழுந்திருக்குமல்லவா? 
அவளுக்கும் என்னைப் போல் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்குமல்லவா?

சென்னையில்  அலுவலக வேலையாக வந்தவன்  வேலையை முடித்து விட்டு நடைபோட்டவனை அந்தக்குரல் என்னவோ செய்தது.

"ச்சந்த்ருஊஊஊஊ"

இப்போது குரல் மிக அருகில் தெளிவாக கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.  வெண்ணிலா?  அவளேதான் எத்தனை வயதானால் என்ன? அந்தக் கன்னத்தில் உள்ள பிறை போன்ற வெட்டுக்காயத்தின் தழும்பு மறக்க முடியுமா?
*************

"இங்கப் பாருங்க உங்க பையன் என்ன பண்ணி வச்சிருக்கான்னு,புள்ளையா வளக்குறிங்க?"
எதிர்வீட்டு வெண்ணிலாவின் அம்மா  அப்பாவிடம் சண்டை பிடித்துக் கொண்டிருந்தாள்.

கன்னத்தில் ரத்தம் வடிய வெண்ணிலா அழுது கொண்டிருந்தாள். அப்பா வெளு வெளுவென்று வெளுத்து விட்டார்.

"இனிமே கிட்டிப்புல் விளையாடுவியா விளையாடுவியா?"

நான் வாங்கிய அடி கூட வலிக்கவில்லை எனக்கு. வெண்ணிலா அழுததுதான் எனக்கு வலித்தது.

அப்பாவே தன் சைக்கிளில் அவளை உட்கார வைத்து டாக்டரிடம் அழைத்துச்சென்றார்,
நான்கு தையல் போட்டார்களாம்.

மறுநாள் பள்ளிக்கு வரவில்லை அவள். இரண்டு நாள் கழித்து மெதுவாக என் வீட்டுக்கு வந்தாள்.

அம்மாதான் விசாரித்தாள்.

"இப்ப தேவலாமாடி"

"தேவலாம்  அத்த"

என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

"சாரிடி நிலா"

"பரவால்லடா. வேனுமுன்னா செஞ்ச? நீதான் பாவம் என்னால உங்கப்பாகிட்ட அடி வாங்குன"

"பச்"

"டேய் ச்சந்த்ருஊஊ  உன் கணக்கு நோட்ட குடுறா, விட்டுப்போன கணக்குலாம் எழுதிக்கிட்டுத் தரேன்"

"ஏன்டி நிலா அவன்தான் உன் கன்னத்த பேத்தான்ல? அப்பறம் ஏன்டி அவன் கூட பேசுற? அப்பறம் உங்கம்மா திட்டுவா"

"போங்க அத்த. அம்மாவுக்கு வேற வேல இல்லை. வேனுமுன்னு யாராவது செய்வாங்களா?"

வெண்ணிலாவின்  குடும்பம் எங்கள் எதிர் வீட்டில் குடிவரும் போது நான் நான்காவது படித்தேன்.
அவளும் நான்காம் வகுப்பு. அதிலிருந்து எங்கள் நட்பு வளர்ந்தது. இப்படியே எங்கள் நட்பு வளர்ந்தது பத்தாம் வகுப்பு வரை. 

ஒருநாள் அவளின் அப்பாவுக்கு வேலை மாற்றலாகி   வேறு ஊர் போக கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.

வெண்ணிலா அழுது கொண்டே விடை பெற்றாள்.

"என்ன மறந்துடாதடா ச்சந்த்ருஊஊ"

****************

அதன் பிறகு இதோ என் எதிரில் மூச்சு வாங்க நின்று கொண்டிருக்கிறாள்.
அவளைப் பார்த்தால் யாரும் நாற்பது வயது பெண்மணி என்று  சொல்ல மாட்டார்கள்.
மிக அழகாகவே இருந்தாள்.

நான் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் நெற்றி வகிட்டுக் குங்குமம்
அவள் திருமணமானவள் என பறைச்சாற்றியது.

"ச்ந்த்ருஊஊஊஊ"

என் நினைவுகளை கலைத்தது அவளின் குரல்.

"என்னடா அப்படி பாக்குற.யப்பா எத்தனை வருசம் ஆச்சு உன்னைப் பாத்து"

"சரி இத்தன வருசம் கழிச்சி எப்படி என்ன நாந்தான்னு கண்டு புடிச்ச?"

"அது சஸ்பென்ஸ். அந்த ரகசியத்தை சொல்லமாட்டேன்.

ஆனா உன்னோட நடை இன்னும் மாறவே இல்லை. கொஞ்சம் சாஞ்சி சாஞ்சி நடக்குறது. தூரத்துலருந்து நீதானான்னு சந்தேகமா இருந்துச்சி. நீ திரும்புனப்ப கண்பார்ம் பண்ணிக்கிட்டேன்"

"---------------"

"ச்சந்த்ருஊஊஊஊ"

"சொல்லுடி"

"நான் பழையமாதிரியே கூப்புடுலமாமுல்ல?"

"தாராளமா. எல்லாரும் ரொம்ப மரியாத குடுத்து குடுத்து ரொம்ப கெட்டு போய்ட்டேன். நீயாவது அப்படி கூப்புடு"

"நீ மாறவே இல்லடா. ஒன்னு சொல்லட்டா?"

"சொல்லு"

" நாப்பது வயசிலும் ஹேண்ட்சம்மாத்தான் இருக்க.அப்படியே மணவறையில உக்கார வச்சா மாப்ளதான்"

"ச்சீ....போடி"

"நிசமாப்பா"

"சரி, நீ எப்டி இருக்க? எத்தன பிள்ளைங்க? உன் லைப் எப்டி இருக்கு?

"ம் நல்லாருக்கேன். இரண்டு பெண்கள். பெரியவள கட்டிக்குடுத்தாச்சி,உனக்கு?"

"இரண்டு பசங்க.படிக்கிறாங்க"

"ஒன்னு சொல்லட்டா ச்சந்த்ருஊஊ?"

"என்ன சொல்லப்போற"

"இதுக்கு மேல என் பர்சனல் லைப் பத்தி கேக்காத. நானும் கேக்கல"

"சரி கேக்கல"

"நம் இந்தியப் பெற்றோர்கள் என்ன நினைக்கிறாங்க தெரியுமா?  மகள் கண்ணுக்கு லட்சணமா இரண்டு புள்ளைய பெத்துட்டு, நல்லது கெட்டதுக்கு பட்டுப் புடவை கட்டிக்கிட்டு நகைகளை அள்ளிப் போட்டுக் கிட்டா அவ சந்தோசமா இருக்கான்னு முடிவு கட்டிடுறாங்க"

நான் அவளையே பார்த்தேன்.

"கமான் ச்ந்த்ருஊஊஊ , இன்னைக்கு என்னோட செலவுலாம் உன்னோடதுதான். பணம் நிறைய வச்சுருக்கியா?"

"ஏய் உனக்கு இல்லாததா? என்ன வேணும்?"

"நீ வா உனக்கு நிறைய செலவு வைக்குறேன்.முதல்ல வயித்துக்கு"

உயர்தர ஹோட்டலில் ஒரு மசால் தோசையும் காப்பியும் சாப்பிட்டு விட்டு காச கொடுறா என்று அதிகாரம் செய்தாள்.

"அடுத்து என்னவோ?"

"வா, சொல்றேன்"

பேன்சி ஸ்டோர் ஒன்றில் நுழைந்து கைநிறைய வளையல்கள், பொட்டு கண்மை நகபாலிஷ் என்று வாங்கித்தள்ளினாள்.

"அடுத்து?"

"வா சொல்றேன்"

பிரமாண்டமான துணிக்கடையில் நுழைந்து  சிம்பிளாக காட்டன் புடவை ஒன்றை எடுத்தாள்.

அடுத்து நகைக் கடையில் நுழைந்து  ஒரு வெள்ளி மோதிரம் வாங்கிக் கொண்டாள்.

"அடுத்து என்னவோ?"

"ஐஸ்க்ரிம்"

ஐஸ்கிரிமை அவள் சாப்பிடும் போது யாரும் பார்த்தால் இவளுக்கு ஒரு மருமகன் இருக்கிறான் என்று சொல்லமாட்டார்கள். ஒரு குழந்தையைப் போல ருசித்தாள்.

"பீச்சுக்கு போலாமா?"

உடனே ஒரு டாக்சி பிடித்தேன்.

கடற்கரையில் ஒருக் குழந்தையைப் போல  அலைகளோடு விளையாடினாள். என் மீது தண்ணீரை வாரி இறைத்தாள். கடலை வாங்கி கொறித்தாள். பழங்கதைகளை பேசினாள். எழுந்தாள்

"சரி நேரமாச்சி போலாம்"

"எங்க?"

"நேரா கோயம்பேட்ல என்ன பஸ் ஏத்தி விடுற"

"எந்த ஊருக்கு?"

"அது சொல்லமாட்டேன்,திருச்சி பஸ்ல ஏத்தி விடு.போதும்.

கோயம்பேடு வந்து திருச்சி பேருந்தில் உட்கார வைத்து தண்ணீர் பாட்டிலும் சில பிஸ்கட் பாக்கட்டும் சில வார இதழ்களும் வாங்கிக் கொடுத்தேன்.

பேருந்து புறப்படும் போது  கையசைத்தாள்.நானும் கையை அசைத்தேன். பேருந்து திரும்பும் போது ஒரு பேப்பர் மடிப்பு அவள் கையில் இருந்து கீழே விழுந்தது.

'அன்புள்ள  சந்த்ரு இன்னைக்கு  ரொம்ப சந்தோசமா இருந்தேன். என் பால்ய காலத்தை மீட்டு கொடுத்ததிற்கு மிக்க நன்றி. இதுவே நம் கடைசி சந்திப்பாக இருக்கட்டும்.உன்னை வாழ்க்கையில் திரும்ப சந்திப்போமா என்று நினைத்தேன்.உன்னை சந்தித்து விட்டேன்.அது போதும் எனக்கு.

உன் குழந்தைகளுக்கு என் ஆசிகள்.என் நினைவை இ்த்தோடு அழித்து விடு.உன் மனைவியை எப்போதும் போல் சந்தோசமாக வைத்துக் கொள்.நாம் இனிமேல் எப்போதும் சந்திக்க வேண்டாம்.அது இருவருக்குமே நல்லதல்ல.  நான் எங்கு இருக்கிறேன் என் மொபைல் நம்பர் என்ன, நான் பேஸ்புக்கில் இருக்கிறேனா   என்று தேட முயற்சிக்க வேண்டாம் பை.

இப்படிக்கு, உன் தோழி நிலா'.

பேருந்து என் கண்களில் இருந்து மறைந்து போனது.
*****************

பேருந்தில் பயணித்த வெண்ணிலா தன் மொபைல் எடுத்து பேஸ்புக்கை திறந்து அதில் சந்திரசேகரன் சுப்ரமணியன் என்ற பேஸ் புக் பக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையும் அறியாமல் சந்திரசேகரனின் புரபைல் பிக்சரை அவளது விரல்கள் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது. அவள் உதடுகள்
'சந்த்ரூஊஊஊஊஊ' என்று முணுமுணுத்தன.

முற்றும்.

*எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு சந்த்ரூவும் எல்லா ஆண்களுக்குள்ளும் ஒரு வெண்ணிலாவும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

-மகா

பெண் குழந்தை

''பொட்டப்புள்ள பொறந்தா
இங்க வராதே"

விட்டு விட்டு வலிக்கும் இடுப்பு வலியை விட மாமியார் சொன்ன வார்த்தைகள் குத்தூசிகளாய் துளைத்தன
வசந்திக்கு.

"ஏன் அண்ணி இது முத புள்ள. எது பொறந்தாலும் நல்லபடியா பொறக்கட்டுமே. நம்ம கையிலியா இருக்கு?"
-இது அம்மா.

"சீர்செனத்தி செய்யக் கூட வக்கில்ல.இதுல பேச்சிக்கெல்லாம் குறைச்சல் இல்ல"

அம்மா மென்று முழுங்கினாள்.

வளைகாப்பு முடிந்து தாய் வீடு சென்றபோது மாமியார் சொன்ன வார்த்தைகள் வசந்திக்கு ஞாபகத்தில் வந்து போனது.

"இந்தாளு எங்கம்மா போய் தொலைஞ்சாரு?"

"நான்தான் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரச் சொன்னேன் வசந்தி"

வசந்திக்கு கணவன் தன் பக்கத்தில் இருந்தால் போதுமென்று இருந்தது.

"ம்க்கும் இப்ப  அதான் குறைச்சல்"

நர்ஸ் வந்து பார்த்து விட்டு இன்னைக்கு இராத்ரிக்குள்ள சுகபிரசவம் ஆயிடும் என்று சொல்லி விட்டுப் போனாள்..

சொல்லி வைத்த மாதிரி காலை நான்கு மணிக்கு அழகான தங்க விக்கிரகம் போல்  பெண் குழந்தை பிறந்தது.

வசந்தியின் கணவன்  தான் அப்பாவான சந்தோசத்தில் எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்துக்கொண்டிருந்தான்.

கண் விழித்த  வசந்திக்கு மாமியாரை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கவலை எழுந்தது.....

காலை விசயம் தெரிந்து ஒவ்வொருவராக பார்க்க வந்தார்கள். 

மெதுவாக எட்டுமணிக்கு மாமியார் வந்தாள். வசந்திக்கு குலை நடுங்கியது. 

" வாங்க அண்ணி"

- வசந்தியின் அம்மா ஈனஸ்வரத்தில முனகினாள்.

வசந்தியின் மாமியார் உள்ளே நுழைந்தவள்  குழந்தையைத் தூக்கி கொஞ்சினாள்.

மருமகளைப் பற்றி சம்பந்தியிடம் விசாரித்தாள்.

வசந்திக்கோ தலைச் சுற்றியது. மழை ஏதாவது வருகிறதா என வெளியேப் பாரத்தாள்.

வசந்தியின் அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

கொஞ்ச நேரத்தில் வசந்தியின் மாமியார் வெளியே சென்ற பிறகு  வசந்தியின் நாத்தனாரிடமிருந்து
போன்.

"எங்கம்மா வந்தாங்களா?"

"வந்துட்டு இப்பத்தான் வெளியே போனாங்க"

"ஏய் எப்படி நான் போட்ட பிளான்?எங்கம்மா பேத்திய கொஞ்சிருப்பாங்களே"

"ஆமாண்டி.நீ என்ன பண்ண?"

"இரண்டு பொட்டப்புள்ளைய பெத்துட்டேன்னு என்ன எம் மாமியா திட்றான்னு நான்தான் எங்கம்மாவுக்கு போன் பண்ணேன்"

"தேங்க்ஸ்டி"

"அச்சோ இதுக்காலாமா தேங்க்ஸ் சொல்வாங்க. எம் மருமவ எப்டி இருக்கா?நாளைக்கு வரேன்டி. உடம்ப பாத்துக்க"

வசந்தி  மனதிற்குள் நாத்தனாரை வாழ்த்தினாள்.