Sunday, January 4, 2015

"அடக்கடவுளே... காலம் கெட்டு கிடக்கு"

"என்னாச்சி?"

"இரண்டு நாளைக்கு முன்னாடி வீடு எரியிற மாதிரி கனவு கண்டேன்னு சொன்னேன்ல"

"ஆமாம்.அதுக்கென்ன இப்போ?"

"அலமேலு குட்டி வயசுக்கு வந்துட்டா"

"நாலாவது தானே படிக்கிறா"

"அதான் அக்கம் பக்கம் யாருக்கும் சொல்லாம தண்ணிய ஊத்தியாச்சி"

இப்படித்தான் தான் கண்ட கனவுகளுக்கு ஏதாவது ஒரு மேற்கோளை காட்டுவாள் என் மனைவி.

ஏறக்குறைய அவை சரியாகவே இருக்கும்

"இந்த மூலையில பல்லி கத்துனா ஏதாவது நல்ல சேதி வரும்"

"எங்க இங்கயா?"

"கைய காட்டாதிங்க"

எங்கள் குலதெய்வம் கோவிலுக்கு நேராக செல்ல பஸ் வசதி அதிகம் இல்லாத காலம் அது. பெரும்பாலும் ஆற்றைக்கடந்து பஸ் பிடித்து அங்கிருந்து பின் மறுபடியும் அதே ஆற்றைக்கடந்து கோவிலுக்கு போகவேண்டும். தலையச் சுற்றி மூக்கைத் தொடுவது போல.

அந்த ஆற்றங்கரையில் ஓர் அய்யனார் கோவில்.

தான் கண்ட ஒரு கனவைப் பற்றி சொன்னாள் என் மனைவி.

"கோவிலுக்கு போயிட்டு ஆத்தை தாண்டி கரையேறுனேனா? கரையிலியே அய்யானார் என்ன மறிச்சிக்கிட்டாரு.

அப்ப அய்யானாரு என்கிட்ட சொன்னாரு
இந்தாம்மா உன் வழி இங்கில்லையே அப்படியே திரும்பி போயிடு.இது என் இடம் இந்தப்பக்கம் எல்லாம் வராதே.இந்த வழியா வந்து போற என்னைக்காவது என்ன கும்புட்டு இருக்கியா?அப்படியே திரும்பி போ"

அப்ப திரும்பி பாத்தா நம்ம சாமி நிக்குது.

நம்ம சாமி சொல்லிச்சி அய்யனார்கிட்ட

"டேய் என் வீட்டு பிள்ளைடா அவ.அவள போக விடுடா.அவ வழியில்லாமத்தானே இப்படியே வரா"
இரண்டு சாமிக்கும் சண்டை. நான் பயந்து போய் கண்ணு முழிச்சிக்கிட்டேன்.

எனக்கு இதை எத்தனை தூரம் நம்புவது எனத் தெரியவில்லை.

அய்யனாரை கடக்கும் நாங்கள் அவரை கும்பிடாதது உண்மைதான்.அதுவே அவள் ஆழ்மனதுக்குள் குற்ற உணர்ச்சியாகி கனவாக வந்திருக்கலாம்.

பிறகு ஒரு தினம் நாங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு போய்விட்டு திரும்பினோம். மைத்துனன் சைக்கிளில் வந்தான். திரும்பும் போது மனைவி சொன்னாள்.

"நானும் அம்மாவும் மகனும் பஸ்ல (ஒரே ஒரு பஸ்) போறோம். நீங்க சைக்கிள்ல போங்க.போகும் போது மறக்காம அய்யானாருக்கு சூடம் ஏத்திட்டு போங்க மறக்க கூடாது" என்றாள்.

மைத்துனனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.எங்களுக்காக வந்திருந்தான்.

"டேய் தீப்பெட்டி எடுக்க மறந்துட்டன்டா" என்றேன் அவனிடம்

"மாமா,அக்கா ஒரு லூசு.அதுக்கு வேலை இல்ல.நாம போகலாம்" என்றான்.

சரி போகலாம் என்றேன் அரைமனதாக.

மிகச்சரியாக கோவிலின் வாசலில் நன்றாக போய் கொண்டிருந்த சைக்கிள் சறுக்கி விட்டு இரண்டு பேரும் கீழே விழுந்துவிட்டோம்.

இதை எத்தனை பேர் நம்புவீர்கள்?

மேலே உள்ளது எங்கள் குலதெய்வம் கோவிலில் நான் எடுத்தப் படம்

No comments:

Post a Comment