Tuesday, July 14, 2020

சென்னை எக்ஸ்பிரஸ்



"ஆர் யூ அரவிந்த்?"

என்ற பெண் குரல் கேட்டு நிமிர்ந்தவன் திகைத்துப் போனான் 

"என் பேர் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"வெளியே சார்ட்ல பார்த்தேன்"

"ஓ...!"

உடனே அவளிடம், ஏதோ சொல்ல துடித்தான்.

'ம்ஹூம் இப்ப வேனாம். கொஞ்சம் பழகிட்டு சொல்வோம். எடுத்த உடனே சொன்னா நல்லாருக்காது' என மனதை தேற்றிக் கொண்டான்.

அடுத்து அந்த குயில் கூவியது

"நீங்க சென்னைக்கா?"

"ஆமாங்க"

"என்ன மூடியா இருக்கிங்க? ஜாலியா இருங்க அரவிந்த்.நானும் சென்னைக்குதான்"

"உங்க பேர் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா மேடம்?"

"அர்ச்சனா"

பரபரவென்று பேஸ்புக்கை திறந்து அர்ச்சனா வென்று டைப் பண்ணி செர்ச் கொடுத்தான் வந்து விழுந்த அர்ச்சனாக்களில் ஒன்றை தெரிவு செய்து,

இது நீங்கதானே என்று அவளிடம் காட்டினான்.

"ஆமாம்"

"அது என்ன எல்லா அர்ச்சனாக்களும் ஐபிஎஸ் படிக்கிறிங்க?"

"ஏய் யூ நாட்டி."

"போலிஸ்?"

"ஆமா, இப்ப இல்ல"

அதன் அர்த்தம் புரிந்தவனாய் ஆமோதித்தான்.

"பேஸ்புக்ல பொளந்து கட்டுறிங்க. கதை கவிதைன்னு"

"பொழுது போகனுமே"

"ஆனா என்னோட ரெக்வஸ்ட பெண்டிங்க்ல வச்சிருக்கிங்க"

"முன்னபின்ன தெரியாதவங்கள நான் சேத்துக்க மாட்டேன்"

"இப்பத்தான் தெரியுமே"

இந்த ரயில் சென்னை போக ஒருநாள் இருக்குல்ல, பாப்போம்"

இப்போது அரவிந்துக்கு அவளிடம் இன்னொரு கேள்வியை கேட்கத் தோன்றியது,பேஸ்புக்கில் கூட நண்பனாக ஏற்றுக் கொள்ளாதவளிடம் கேட்டால் சப்பென்று அறைந்தால் என்ன செய்வது என்று தோன்றியது அவனுக்கு.....

ஆனால் அவள் மற்றபடி வெகு ஸ்வராஸ்யமாகத்தான் பேசிக்கொண்டே வந்தாள். 
வழிநெடுக அவனும் அவளுக்கு தேவையான உணவுகளை வாங்கிக் கொடுத்து கர்ம சிரத்தையாக பார்த்துக் கொண்டான்.

அரக்கோணம் வந்தவுடன், தூங்கிக் கொண்டிருந்த அரவிந்தை தட்டி எழுப்பினாள் அர்ச்சனா.

"குட்மார்னிங் மேடம்"

"அப்பறம்?..,இந்தா பேஸ்புக்ல ரெக்வஸ்ட் ஓகே பண்ணிட்டேன்"

"தேங்க் யூ.....காபி சாப்பிடலாமா?"

"ஷ்யூர்"

"இன்னும் கொஞ்ச நேரத்துல பிரிய போறோம், உங்க கிட்ட ஒரு விசயம் சொல்லனும். இன்னொரு விசயம் கேட்கனும்"

"ம் சொல்லு"

"அடிக்க மாட்டிங்கல்ல?"

"சும்மா கேளு அரவிந்த்"

"முதல்ல சொல்றது, அடுத்து கேட்பது"

"ஓகே"

"நீங்க என் பாட்டி மாதிரியே இருக்கிங்க"

 அவன் சொன்னதை கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தபடி அவன் முகத்தை இரண்டு கைகளாலும் ஏந்தியபடி அவன் நெற்றியில் முத்தமிட்டாள்.

"டேய் படவா என்னமோ கேட்கப் போறேன்னு சொன்ன"

"அடிக்கமாட்டிங்ல்ல ?"

"ம்ஹூம்"

"உங்களுக்கு பேத்தி இருக்காங்களா?"

"படவா ராஸ்கல்., குறும்புக்காரன்டா நீ.... இரண்டு பேர் இருக்காளுங்க.....அட்ரஸ் தரேன். வீட்டுக்கு வா"

என்றாள் அறுபது வயது அர்ச்சனா ஐபிஎஸ்.

Tuesday, July 7, 2020

வணக்கத்திற்குரிய மாமியாரே...!



 செந்திலுக்கு வணக்கம் வைத்துவிட்டு  ஐயோ  இந்த கையால  அந்த நாய்க்கு வணக்கம் வேற வச்சுட்டேனே  கைய அடுப்புக்குள்ள அப்படியே  வச்சி கரிக்கு விட்டுறலாமா என்று புலம்பிய கவுண்டமணி போல் மனதுக்குள் கறுவிக்கொண்டிருந்தான் சந்துரு.

  பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து இப்படித்தான்  நிலைகொள்ளாமல் தவித்தான்.  அக்கா அம்மா தங்கை   இப்படி எல்லோரும் 
' பொண்ணுக்கு என்னடா குறைச்சல் ஏன்டா இந்த பொண்ண வேணாங்குற'
 என்று கேட்டதிற்கு பதில் சொல்ல முடியாமல்   தவித்தான்.

" நல்லாத்தான்டா பொண்ணு பாக்க வந்த உனக்கென்னடா ஆச்சி? ஏன் பிடிக்கலங்குற "  - அக்கா 

" டேய் நிறைய வரன் தட்டிப்போய் இந்த பொண்ணு அமைஞ்சிருக்குடா,  பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு எல்லாத்துக்கும் உன்னப்பிடிச்சிப்போச்சாம்டா சரின்னு சொல்லுடா - அம்மா

அவனுக்கும் பெண்ணைப் பார்த்தவுடன் பிடித்து தான் இருந்தது.. ஆனால்?

" டேய் பொண்ணோட அம்மா போன் பண்ணாங்கடா அவங்களுக்கு என்ன சொல்றது இப்ப. உன் முடிவுதான் என்னா ஏன் வானாங்குற சொல்லித் தொல மொதல்ல" 
அப்பா கிடுக்கிப்பிடி போட்டார்.

" பொண்ணோட அம்மா என்ன சொன்னா..... ங்க  அப்பா?"

" மாப்பிள்ளைக்கு பொண்ண பிடிச்சிருக்கான்னு கேட்க சொன்னாங்க. சீக்கிரம் முடிவை சொல்லுங்க. வேற இரண்டு இடத்திலிருந்து பொண்ணு கேட்டு வந்திருக்காங்க அப்படின்னாங்க"

" யோசனை பண்ணி சொல்றேம்பா"

" இன்னும் என்ன அண்ணா  யோசனை? " தங்கை

" இப்பவே காரணத்தை சொல்லு"-  அக்கா

'எப்படிச் சொல்லி இவர்களுக்கு புரிய வைப்பது? '

நழுவப் பார்த்தான்.

" சொல்லிட்டு போடா" 
அப்பா கர்ஜித்தார்

அப்பாவை பற்றி தெரியும்.
கோபம் வந்தால் அவ்வளவுதான்.

" டேய் எதா இருந்தாலும் மறைக்காம சொல்லுடா"- அம்மா

" இல்லம்மா பொண்ணோட அம்மா இருக்காங்கல்ல?"

" ஆமா ரம்யா  அவளுக்கென்ன?  உனக்கு நல்ல மாமியார் கிடைச்சிருக்காங்கடா"

" ஐயோ ரம்யா என்னோட மாமியார்னு  சொல்லாதிங்க சகிக்கல"

" பின்ன எப்படி, அவளோட பொண்ண கட்டுனா அவ உனக்கு மாமியார் தானே? என்ன வயசு கொஞ்சம் கம்மியா இருக்கா அதுக்கென்ன?"

" ஐயோ எங்கூட ஒன்னா படிச்சவலாம் எனக்கு மாமியாரா?"

" என்னது ரம்யா உங்கூட படிச்சாளா?"

" ஆமாம்மா, படிக்கிறப்ப  செம  கிண்டல் பண்ணுவேன். என்னக்கண்டாலே அலறி அடிச்சிக்கிட்டு ஓடுவா"

"அடக்கடவுளே, அதான் வேணாங்குறியா?"

" இப்ப சொல்லு, அவளப்போய் சாரி அவங்களப்போய் எப்படி என் மாமியார்ன்னு சொல்றது?"

" சரி சின்ன மாமியாருன்னு சொல்லிக்க"

" சின்ன மாமியாரா?"

" ஆமா,   அவளோட  அக்காப்பொண்ண நீ  கட்டுனா அவ உனக்கு சின்ன மாமியார்தானே?"

" அப்ப பொண்ணு பார்க்க போனப்ப வார்த்தைக்கு வார்த்தை என்னோட பொண்ணு என்னோட பொண்ணுன்னு சொன்னாளே"

" அது உன்ன சீண்ட... எப்படிலாம் அவள  கிண்டல் பண்ணியாம் அவளே எல்லாத்தையும் சொல்லிட்டா. அப்பறம்    தன்னோட அக்காப்பொண்ணுக்கு உன்னை  மாப்பிள்ளையா சஜஸ்ட் பண்ணது  அவளேதான்.
பொண்ணுக்கு அந்தப்பக்கம் உக்காந்து இருந்தவங்கதான் பொண்ணோட அம்மா.  உனக்கு சர்ப்பிரைஸ் கொடுக்கத்தான்  தெரிஞ்ச மாதிரி காட்டிக்கல... சரி சரி  சின்ன மாமியாரை மரியாதையா பேசு நான் அவங்களுக்கு தகவல் சொல்லிடுறேன்"

" மொதல்ல அந்த ரம்யா நம்பர கொடும்மா அந்த ரம்யாவ ஒரு வழி்பண்றேன்"

" டேய் பொண்ணோட நம்பர கேட்டாலும் ஒரு லாஜிக் இருக்கு. மாமியாரோட நம்பர கேக்குறான் பாரு ..... போய் வேலைய பாருடா" 
என்றபடி அக்கா நொடித்து விட்டுப்போனாள்.

Sunday, June 28, 2020

ஸஸேமீரா

ஸஸேமிரா
~~~~~~~

நந்தன் என்று ஓர் அரசன். அவனுக்கு மதிநுட்பம் வாய்ந்த சுதன் என்றொரு மந்திரி.  சுதனின் மதிநுட்பத்தால் நந்தன் தன் எல்லைகளை விரிவு படுத்தி சிறப்பாக ஆட்சி செய்து வந்தான்.

நந்தனின் பட்டமகிஷி பானுமதி.  
பானுமதி யாராலும் வர்ணிக்க முடியாத அளவிற்கு கொள்ளை அழகு வாய்ந்தவள்.
இவர்களின் பட்டத்து இளவரசன் ஜெயபாலன்.

நந்தன் தன் மகாராணியின் மேல் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தான். அரசனுக்கு தன் மகாராணியை ஓவியம் வரைய நினைத்தான் இதற்காக நாட்டில் தலைசிறந்த ஓவியனை வரவழைத்து ஓவியம் வரையச் சொன்னான்.

ஓவியனும் மிகச் சிறப்பாக ஓவியத்தை வரைந்து முடித்தான். அரசன் அளாவிலா மகிழ்ச்சி கொண்டான்.ஓவியம் அத்தனை தத்ரூபமாக அமைந்திருந்தது.

ஆனால் நாட்டின் ராஜகுரு ஓவியனைப் பார்த்து இந்த ஓவியத்தில் ஒரு பிழை உள்ளது என்றார்.

அரசன் கேட்டான்,

"அப்படி என்ன பிழை உள்ளது ராஜகுருவே?"

"மகாராணியின் தொடையில் எள்ளளவு மச்சம் ஒன்று உண்டு.அது ஓவியத்தில் இல்லை" என்றார் ராஜகுரு.

அந்த நிமிடம் முதல் அரசனின் நிம்மதி பறி போயிற்று.

'மகாராணியின் மச்சம் ராஜகுருவுக்கு எப்படி தெரிந்தது?'

உடனே மந்திரி சுதனை அழைத்து,
இந்த ராஜகுருவை சிரச்சேதம் செய்து விடுங்கள் எனக் கட்டளை இட்டான்.

சுதனுக்கும் ராஜகுரு ஒரு உத்தமமான மனிதர் என்று தெரியும். இருந்தாலும் அரசனின் கட்டளை ஆயிற்றே.

ராஜகுருவோ, 

"என்னைப் போய் அரசன் சந்தேகப் பட்டானே, பானுமதி என் மகள் போல் அல்லவா?" என்று அழுது புலம்பினார்.

"ராஜகுருவை தன் வீட்டில் மறைத்து வைத்து விட்டு, 
அரசனிடம்
ராஜகுருவை சிரச்சேதம் செய்து நானே என் கையால் புதைத்து விட்டேன்" என்றான்.

அரசனும் மந்திரி மேல் உள்ள நம்பிக்கையால் சரியென்றான் இருந்தாலும் அரசனுக்கு உள்ளூர வருத்தம் ராஜகுருவை இழந்தது.

இது இப்படி இருக்க, ராஜகுமாரன் ஜெயபாலன் வேட்டைக்கு கிளம்பினான் அப்போது மந்திரியின் குமாரன் ராஜகுமாரனை தடுத்து  சகுனம் சரியில்லை இப்போது வேட்டைக்கு போவது தங்களுக்கு ஆபத்து என்றான்.

ராஜகுமாரனோ மந்திரிகுமாரனின் பேச்சை கேட்காமல் வேட்டைக்கு கிளம்பினான்.

காட்டில் பல மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடினான்.

பொழுதான சமயம் புலி ஒன்று இவனை துரத்தியது. புலிக்கு பயந்து  பதற்றத்தில் கையில் இருந்த வில் அம்புகளை போட்டு விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டான். மரத்தின் மேல் அவனுக்கு இன்னோர் ஆபத்து காத்திருந்து.

மேலே கரடி ஒன்று உட்கார்ந்து இருந்தது.

மேலே கரடி, கீழே புலி

செய்வதறியாது திகைத்தான்.
 அப்போது, ராஜகுமாரன் கரடியைப் பார்த்து சொன்னான் 

"என்னை மரணபயம் ஆட்டுவிக்குறது தயவு செய்து என்னை புலியிடமிருந்து காப்பாற்று எனக்கு அடைக்கலம் தா"

கரடி சொன்னது,
"ராஜகுமாரனே பயப்படவேண்டாம், நான் உனக்கு அடைக்கலம் தருகிறேன். வாருங்கள். அடைக்கலம் புகுந்தவர்களை காப்பாற்றுவதே மரபு."

கீழே புலி,
எப்படியும் இவன்  கீழறங்கித்தானே ஆக வேண்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தது.

நேரமோ இருட்டிக் கொண்டே வந்து இரவும் ஆனது.

அப்போது, கரடி சொன்னது,

"ராஜகுமாரனே என் மடியில் படுத்து உறங்குங்கள்.இப்போது அந்த புலி போகிற மாதிரி தெரியவில்லை. எப்படியும் காலையில் போய்விடும் அதன்பிறகு நாம் கீழே இறங்கலாம்"

ராஜகுமாரனும் கரடியின் மடியில் படுத்துக் கொண்டான்.

அப்போது புலி கரடியைப் பார்த்து சொன்னது.

"ஏ கரடியே நாம் ஓரினம் இவன் மானுடன் எப்படி பார்த்தாலும் நமக்கு இவன் பொது எதிரி. இவனால் இந்தக் காடே நாசம் அடையும். அவனை கீழே தள்ளி விடு நான் உன்னை விட்டு விடுகிறேன்"

அதற்கு கரடி,

"புலியே,இப்போதைக்கு இவன் என்னிடம் அடைக்கலம் புகுந்தான்.அடைக்கலம் புகுந்தவர்களை காப்பதே சாஸ்திரம்.நான் இவனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன் உயிரை காப்பதாய்,நான் சத்தியத்தை மீறுவதாக இல்லை" என்றது.

சற்று நேரம் கழித்து  கரடி ராஜகுமாரனை எழுப்பி,

"ராஜகுமாரா, நான் கீழே விழுந்து விடாமல் நீ  பார்த்துக் கொள் நான் சற்று நேரம் உறங்கிக் கொள்கிறேன்" என்று உறங்கி விட்டது.

அப்போது புலி, ராஜகுமாரனைப் பார்த்து,

"ராஜகுமாரா, கரடி ஏன் உனக்கு அடைக்கலம் தந்தது என்று நீ யோசிக்கவில்லையா? நான் போனபிறகு உன்னை கொன்று சாப்பிடத்தான். பேசாமல் கரடியை கீழே தள்ளி விடு. நான் உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

ராஜகுமாரனும் தனக்கு அடைக்கலம் தந்தது கரடி என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் நன்றி மறந்து கரடியை கீழே தள்ளி விட்டான்.

கரடியின் நல்ல நேரம் கீழே விழ இருந்த கரடியை ஒரு கிளை தடுத்து விட்டது. உடனே கரடி ஒரு முனிவராக மாறினார்.

ஆம் முனிவர்தான் கரடியின் உருவில் இருந்தார்.

முனிவர் ராஜகுமாரனைப் பார்த்து சொல்கிறார்.

"நன்றி இல்லாத கீழ் மகனே, பயப்படாதே உன்னைப் போல் நான் செய்ய மாட்டேன்.ஆனால் நீ செய்த பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். நான் உன்னை சபிக்கிறேன். நீ உன் சுய நினைவு மறந்து சித்தபிரமை பிடித்து அலைய வேண்டும்
உனக்கு 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை தவிர வேறொன்றும் நினைவில் இருக்காது.  எப்பொழுதும் அதே வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டு இருப்பாய்"

பயந்து போன ராஜகுமாரன், முனிவரின் காலில் விழுந்து வணங்கி தன்னை மன்னிக்க வேண்டினான்.சாப விமோசனமும் வேண்டினான்.

அதற்கு முனிவர்,
"சாபம் கொடுத்தது கொடுத்தது கொடுத்ததுதான்.இருந்தாலும் உனக்கு ஒரு பரிகாரம் சொல்கிறேன். என்று நீ இந்த ஸஸேமிரா என்ற வார்த்தையின் பொருளை ஒரு தர்மாத்மாவின் வாயால் கேட்டு உணர்கிறாயோ அன்று நீ சுயநினைவை அடைவாய்" என்றார்.

அதற்குள் விடிந்து விட்டது. புலியும் போய் விட்டது.

அங்கே அரண்மனையில் மகனை காணாமல் ராணி அழுது புலம்பினாள்.

அரசனும் மந்திரியும் படைகளுடன் வந்து ராஜகுமாரனைத் தேடி கண்டு பிடித்து அழைத்து சென்றனர்.

அரசன் தன் மகனுக்கு  உலகின் அத்தனை வைத்தியர்களையும் அழைத்து சிகிச்சை அளித்தான்.ஆயினும் குணம் ஆகவில்லை.

அப்போது அரசன் சொன்னான் மந்திரியிடம்,
"ராஜகுரு இப்போதிருந்தால் ஏதாவது உதவி செய்வார்.ஆராயாமல் அவசரப் பட்டு நான் அவரை கொன்று விட்டேன்"
என்றான்.

மந்திரி,

"அரசே கவலைப் படாதீர்கள்,நான் ஏதாவது வழி கிடைக்குமா என்று ஆலோசிக்கிறேன்" என்று கூறி விட்டு தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த ராஜகுருவிடம் கலந்து ஆலோசிக்கிறான்.

மறுநாள் ராஜகுருவின் ஆலோசனைப் படி மந்திரி அரசனிடம் சொல்கிறான்,

"அரசே என் வீட்டில் ஓர் இளம் பெண் இருக்கிறாள், தன்னை வந்து இளவரசன் பார்த்தால் ஏதாவது வழி சொல்கிறேன் என்கிறாள்,இதையும்தான் முயற்சித்து பார்ப்போமே" 

அதற்கு அரசனும் சம்மதிக்க, ராஜகுமாரன் மந்திரியின் வீட்டில் உட்கார வைக்கப் படுகிறான்.அவன் எதிரே ஒரு திரைச்சீலை. மறுபுறம் ராஜகுரு.

ராஜகுமாரன், எப்போதும் போல் 'ஸஸேமிரா' என்ற வார்த்தையை முனுமுனுக்கிறான்.

அதை கேட்ட ராஜகுரு அம்பிகையை தியானித்து அந்த வார்த்தையின் அர்த்தங்களை கேட்டார்.

அம்பிகையும் அந்த ஸ ஸே மிரா என்ற நான்கு எழுத்துக்களுக்கான நான்கு சுலோகங்களை அவர் காதில் உச்சரித்தாள்.

ராஜகுரு அந்த வார்த்தையின் முதல் எழுத்தான ஸ என்ற எழுத்தின் அர்த்ததை சொல்ல தொடங்கினார்


"ஸத் குணங்களை நம்பிக் கொண்டிருக்கும் ஒருவனை ஏமாற்றுவதில் என்ன புத்திசாலித் தனம் உள்ளது மார்பில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை கொல்வதில் என்ன வீரம் உள்ளது"

அடுத்து ராஜகுமாரன் ஸேமிரா என்றான். காரணம் அவனுக்கு ஸ என்ற எழுத்தின் அர்த்தம் தெரிந்து விட்டது.

ராஜகுரு சொல்கிறார்,

ஸே

"கங்கையில் குளித்தால் பிரம்மஹத்தி தோசம் போய்விடுகிறது.ஆனால் உற்ற நண்பனுக்கு துரோகம்  செய்பவனுடைய பாவம் விலகுவதில்லை.பாவத்தின் தன்மையை பொறுத்து தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும்"

அடுத்து 'மிரா ' என்றான் ராஜகுமாரன்.

'மி'

ராஜகுரு சொல்கிறார்:

"மித்திர (நண்பன்)துரோகி, நன்றியில்லாத மனிதன், நம்பிக்கை துரோகி இம்மூவரும் சந்திர சூரியர் இருக்கும் வரை நரகத்தில் கிடப்பர்.

அடுத்து, ரா என்றான்.

ராஜகுரு சொல்கிறார்,

'ரா'

ராஜனே உன் மகனின் நலத்தை உண்மையில் நீ விரும்பினால் அறிஞர்களை போற்று.அவர்களுக்கு பரிசுகளை கொடு 

என்று நான்கு சுலோகங்களை சொல்லி முடித்தார்.

ராஜகுமாரன் சுயநினைவுக்கு வந்து காட்டில் நடந்த விபரங்களை சொல்கிறான்.

அப்போது அரசன் சொல்கிறான்,

"அழகிய பெண்ணே நீ யார்? காட்டில் நடந்த விபரங்கள் உனக்கு எப்படி தெரியும் " 

திரைச்சீலையின் மறைவில் இருந்த ராஜகுரு பெண் குரல் விடுத்து, 

"எனக்கு நான் வணங்கும் அம்பிகை தேவி அருள் செய்கிறாள்.அவள் எனக்கு எல்லா விசயங்களையும் அறிய செய்கிறாள். அதுபோலவே  மகாராணியின் தொடையில் இருந்த மச்சம் என்னுடைய ஞான திருஷ்டியால் கண்டு கொண்டேன்.அதைதான் நான் சொன்னேன் என்கிறார்.வ

அரசன் திரைச்சீலையைப் பிடித்து இழுக்கிறான்  ராஜகுரு வெளிப் படுகிறார்.

மந்திரி சுதனும் ராஜகுருவை தான் மறைத்து வைத்த ரகசியங்களை சொல்கிறான்.

அரசன்  ராஜகுருவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்து அருளுமாறு மண்றாடுகிறான். ராஜகுரு அரசனை மன்னித்து ஆசிர்வதிக்கிறார்.

குறிப்பு: இந்தக் கதை விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதாக சொல்லப் படுகிறது

Saturday, June 27, 2020

இறப்பதெப்படி?

இறப்பதெப்படி?
******************

இறப்பதெப்படி?

தூக்குப் போட்டுக் கொள்ளலாமா?

வேண்டாம். கழுத்து இறுகி தொண்டை எலும்பு உடைந்து மூச்சு திணறி கைகால்களை உதைத்துக்கொண்டு...
ஒரு கோழையால் அது முடியாது.

நிறைய பேர் செய்வது போல் ஓடுகிற இரயில் அடிபட்டு?

இரயில் வரும் நேரம் பார்த்து மிகச்சரியாய் குறுக்கே பாயவேண்டும். சினிமாவில் வருவது போல் தண்டவாளத்தில் தலைவைப்பது எல்லாம் வேலைக்காகாது. மின்னல் வேகத்தில் பாய்ந்து அதைவிட விரைவாக உடல் கிழிந்து தலை உடைந்து  நாலு மூலைக்கும் சிதறுமோ? இல்லை தூக்கி முழுசாக எறிந்து விடுமோ?
இதுவும் வேண்டாம்.

சினிமாவில் வருவது போல் விஷம் குடித்தால்?
அதுசரி அவர்களுக்கு மட்டும் விஷம் எங்கிருந்து கிடைக்கும்?

"அண்ணே ஒருபாட்டில் விஷம் கொடுண்ணே. காசு வந்ததும் திருப்பி கொடுக்கிறேன்"

-செருப்பால் அடிக்கமாட்டான்?

தண்ணிர் லாரிகளுக்கு முன் பாயலாமா?

நம் நேரம்-அவன்நேரமும் கூட- அலர்டா இருப்பான்.

"ஏன்டா சாவுகிராக்கி கொய்யாலே வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா? அய்ய மூஞ்சப்பாரு"
நாலுதலைமுறைகள் சந்தி சிரிப்பார்கள் அவன் நாவிற்கிடையில்.

சின்னவயசா இருக்குறப்ப அருக்காணி புருசன்கிட்ட சண்ட போட்டுகிட்டு ஒரு நெருப்புட்டி குச்சி எல்லாத்தையும் தண்ணியில கரைச்சி வச்சிருந்துச்சே அதுமாதிரி?
அதெப்படி நெருப்புகுச்சி மருந்த தின்னா செத்து போகலாமா?

பத்து வயதில் வந்த சந்தேகம்.

வெறும் வயிற்றில் அரளி விதைகளை நைசாக அரைத்து விழுங்கி விட்டால் குடலில் பசை போல ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே யாருக்கும் தெரியாமல்  எங்காவது படுத்து விட்டால் போதும் கொஞ்ச நேரம்  வயிற்றை பிராண்டும் அதை தாங்கி கொண்டால் பிறகு பரலோகம்தான்......

நான் ஏன் சாகவேண்டும்?

அதுசரி நான் இதுவரை  வாழ்ந்து என்ன கிழித்து விட்டேன்.... 

நான்கு வயதில் அப்பாவை முழுங்கினேன்.  பத்து வயதில்  நண்பர் களோடு சேர்ந்து பீடி குடிக்க ஆரம்பித்தேன் படிப்படியாக வளர்ந்து குடி சீட்டாட்டம்  பெண்கள் சகவாசம்

அம்மாவின் உழைப்பை சீட்டாடத்தில் விட்டேன். கொடுக்காவிட்டால் அம்மாவை இழுத்துப்போட்டு அடித்தேன்.அம்மா இருக்கும் வரை அம்மாவின் அருமை புரியவில்லை.

இன்று நான் அனாதை. கையிலே காசில்லை சீந்துவோர் யாருமில்லை.  
வயது நாற்பதை நெருங்கி விட்டது. கடைசி வரை அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்யவில்லை. 

" டேய் கொமாரு ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிடா"

காதில் வாங்க வில்லையே. ஒரு வேளை அம்மா பேச்சை கேட்டிருந்தால் வாழ்க்கை மாறி இருக்கலாம்

எங்கு போவது என்று புரியாமல் நடக்கின்றேன் இந்த இரயில் பாதைகளுக்கிடையில்

சரேலென என்னை இரண்டு கரங்கள் இழுத்து விட்டன. நான் தண்டவாளத்துக்கு அப்பால்  போய் விழுந்தேன் உடலெங்கும் சி்ராய்ப்பு

என்ன ஏதென்று நிதானிப்பதற்குள் ஒரு பாசஞ்சர் கடந்து போனது.

" இந்நேரம் செத்து போயிருப்பய்யா"

 என்னை காப்பாற்றுவதாக நினைத்து இழுத்துப் போட்டவள் சொன்னாள்

அவளைப் பார்த்தேன்  அழகான முகம் ஆனால் ஏனோ முகமெல்லாம் சோகம் அப்பி கிடந்தது. கழுத்தில் தாலி இல்லை. வயது முப்பதுக்கு மேல் இருக்கலாம்.

" என்னை ஏன் காப்பாத்தினே?"

" சரி இரு அடுத்த இரயில்ல தள்ளி விடுறேன்"

நான் புன்னகைத்தேன்

" சரி வா  போகலாம்"

" எங்க?'

" என் கடைக்கு வாய்யா ஒரு டீ போட்டுத் தரேன் குடிச்சிட்டு போ"

" எங்கிட்ட காசு இல்ல"

" அட காசு வேனாம் உன்ன பாத்தா பாவமா இருக்கு, இனிமே சாக நினைக்காதே சாக நினைக்கனுமுன்னா நானெல்லாம் எப்பவோ செத்து போயிருக்கனும்"

மெதுவாக எழுந்து அவளைப் பின் தொடர்ந்தேன்.

அவள் ரோட்டோர டீக்கடை ஒன்றில் நுழைந்தாள். நான் அழுக்கு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன்.

ஒரு டீயை போட்டு என்னிடம் கொடுத்தாள்.

' ம்..... டீ நல்லாத்தான் போடுறாள்'

" இப்ப சொல்லு உனக்கு என்னதான் பிரச்னை?"

என் கதையை சொன்னேன்

" நீயெல்லாம் ஒரு ஆம்பள த்தூ, பொழைக்க ஆயிரம் வழி இருக்குய்யா, நான் ஏன் உசுரோட இருக்கேன்? இந்தா இதுங்க இரண்டுங்களுக்காத்தான்"

அவள் கை காட்டிய இடத்தில் மணலில் இரண்டு பெண் குழந்தைகள் புழுதியை பூசியபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

" அவன் இதுங்க இரண்ட கொடுத்துட்டு ரயில்ல அடிப்பட்டு செத்து போய்ட்டான், என்ன பண்றது? வயிறு இருக்கே  ஆனா ஒன்னுய்யயா   என்ன மாதிரி பொண்ணுங்க இந்த உசுர காப்பாத்துறத விட  மானத்த காப்பாத்துறது பெரிய விசயம்.  டீ குடிக்க வரியான்னு கேக்குற மாதிரி படுக்க வரியான்னு கேக்குறானுங்க"

நான் எதுவும் சொல்லாமல் வெளியே கிளம்பினேன்

" எங்கய்யா போற?"

" எங்காவது, எனக்குன்னு ஒரு வேல கிடைக்காமலா போயிடும்?"

அவள் என் கையைப் பிடித்தாள்

" நீ இங்கயே இருந்துடுயா எனக்குத் தொணையா"

" உன்னோட பேரென்ன?"

" காவேரி"

" இங்க பாரு காவேரி, நான் கேடு கெட்டவன். என்னால் உனக்கு எந்த பிரயோஜனமும் இருக்காது"

" இந்த உலகத்துல யாருமே கெட்டவங்க இல்லைய்யா பொறக்கும் போது.  இன்னைக்கு  நீ  புதுசா பொறந்திருக்க உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்குய்யா"

மறு பேச்சி பேசாமல் நீ தள்ளு இனிமே நான் டீ போடுறேன் என்றேன்

"உனக்கு டீ போடத்தெரியுமாய்யா?"

"என் வாழ்க்கையில் முழுசா கத்துக்கிட்ட வேல இது ஒன்னுதான்"

காவேரி க்ளுக்கென்று சிரித்தபடி  என் இடுப்பில் குத்தி  விட்டு உள்ளே போனாள்.


நல்லறமும் இல்லறமும்

#சிறுகதை

நல்லறமும் இல்லறமும்

வசந்திக்கு தன் கணவன்  சுந்தரம் யாருடனோ மொபைல் போனில் பேசுவது
தெளிவாக கேட்டது. ஆனால் மறுமுனையில் என்ன பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

"இல்ல காவேரி நான் சொல்றது கேளு"

"-------------"

"உண்மைதான். நீ எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்க இல்லங்கல்ல? நம்ம நட்பு நீடிக்கனுமுன்னு ஆசைபடுறேன். இதுவரைக்கும் நல்லவனா வாழ்ந்துட்டேன். அத்தோட  இந்த விசயம் என் பொண்டாடிக்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவளுக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காது."

"-----------------------"

"காவேரி நான் சொல்றத புரிஞ்சிக்க, இதுவரைக்கும் என் பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சதில்லை, ப்ளீஸ் என்ன விட்டுடேன்"

சரேலென்று இடை புகுந்தாள் வசந்தி.

"எவ அவ காவேரி? இன்னைக்கு இரண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும். எத்தன நாளா நடக்குது இந்த கூத்து? ச்சே உங்களுக்கு அசிங்கமா இல்ல....."

"வசந்தி ஒரு நிமிசம்....."

"பேசாதிங்க, பேரன் பேத்தி எடுத்த வயசில.... மருமகன் மருமகளுக்குலாம் தெரிஞ்சா காரி துப்ப மாட்டாங்க?"

சுந்தரம் ஒரு கணம் ஆடிப்போனார்.

"கத்தாத வசந்தி... விசயம் தெரியாம பேசாத...,"

"இன்னும் என்ன விசயம் தெரியனும்... இப்பவே என் புள்ளைங்கள கூப்புடுறேன்"

சுந்தரம் அழுது விடுவார் போலிருந்தது.

"ப்ளீஸ் வசந்தி என்ன பேசவிடேன்"

"என்ன சொல்லப் போறிங்க?"

சுந்தரம் ஒன்றும் பேசாமல் நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.

வசந்தி மெதுவாக அவர் அருகே வந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டாள்.

சுந்தரம் இப்போது மேலும் குழம்பினார்.

'என்ன செய்கிறாள் இவள்?,அந்த கத்து கத்தியவள் இப்போது வாஞ்சையோடு முத்தமிடுகிறாள்"

வசந்தி கணவனின் தலையை மெல்ல வருடியபடி,

"பயந்துட்டிங்களா? இத்தனை வருட தாம்பத்தியத்தில் இவ்வளவுதானா என்னை புரிந்து கொண்டது? ஆனால் உங்களை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். உங்களால் தவறு செய்ய முடியாது.  என்ன பிரச்னை?"

"காவேரி என்னுடைய புதிய நண்பன், பல கஸ்டமர்களை எனக்கு  கொடுத்துருக்கான், அதுக்கு நானும் நிறைய கமிசன் கொடுத்திருக்கேன்,நாளைக்கு அவனுக்கு பர்த் டே. அதான் பார்ட்டி கொடுக்க கூப்பிடுறான், உனக்குத்தான் தெரியுமே நான் குடிக்க மாட்டேன்னு, அதான் நாசூக்கா தவிர்த்தா விடாப்பிடியா  கம்பல் பண்றான். இல்லன்னா நம்ம பிஸ்னஸ முறிச்சிக்கலாங்குறான்"

"ம்"

"அதான்... அதுக்குள்ள நீ கத்தி கலாட்டா பண்ணிட்ட நான் பயந்தே போய்ட்டேன்"

"சும்மா கொஞ்சம் விளையாடி பார்த்தேன். உங்க மேல எனக்கு சந்தேகம் வருமா?,அப்பறம் அந்த மாதிரி நட்பு நமக்கு வேண்டாம், கழட்டி விட்றுங்க போகட்டும்' என்றபடி தன் கணவனை கட்டிக் கொண்டாள் வசந்தி.

வள்ளி ஓடி விட்டாள்

வள்ளி ஓடி விட்டாள்
*****************

" என்னங்க என்னங்க எங்க இருக்கிங்க
இங்க பாருங்களேன் நம்ம வள்ளி ஓடிப்போயிட்டாங்க இத படிச்சிப் பாருங்களேன்" என்று கையில் ஒரு கடுதாசியுடன் அரக்க பரக்க ஓடி வந்தாள் சிவகாமி.

கணவர்  முருகேசன் அதை வாங்கி படித்துப் பார்த்தார்.

' அன்புள்ள அப்பா அம்மாவுக்கு உங்கள் மகள் எழுதிக்கொள்வது. என் மனதுக்கு பிடித்தவருடன் போகிறேன் என்னைத் தேட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அன்பு மகள்'

" சிவகாமி, இது எங்க இருந்துச்சி?"

" அவ டேபிள்லதாங்க, இப்ப என்னங்க பண்றது?"

உடனடியாக கல்லூரிக்கு போன் போட்டார்

வள்ளி இன்று கல்லூரிக்கு வரவில்லை என்ற பதில் வந்தது.

அவள் தோழிகள் யாருக்கு போன் செய்தாலும் 
நாங்க பாக்கலயே என்ற பதில்தான் வந்தது.

நம் வள்ளியா இப்படி செய்தது என்ற குழப்பமே இருவருக்கும்

வள்ளி அப்படி பட்ட பெண் இல்லையே, எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா பேசி முடிச்சிருக்கலாமே இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுச்சி என்று புலம்பித் தீர்த்தார்.

இப்ப எங்கன்னு தேடுவது? சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா எத்தனை அசிங்கம் என்றாள் சிவகாமி

" உன் வேலைய பாருடி என்  பொண்ணு மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, நீ புலம்பாத" 

" புலம்பாம என்னங்க பண்றது?"

" நாமளே கண்டு புடிச்சி  முறையாக கல்யாணத்தை பண்ணி வச்சிடுவோம்"

" அய்யோ அவன் என்ன சாதியோ குலமோ?"

" என்னடி பெரிய சாதி குலமுன்னு பினாத்துற, என் பொண்ணுக்கு  பிடிச்சிருந்தா அப்பறம் அதில் நாம யாரு"

வாசலில் யாரோ வரும் சப்தம்

வள்ளிதான்  வந்தாள். அப்பா அம்மாவின் குழப்பமான முகத்தைப் பார்த்தவுடன்,

' கண்டு புடிச்சிட்டாங்களோ' என்ற எண்ணம் ஓடியது அவள் மனதில்
 பூனை போல் மெதுவாக தன் அறைக்குள் நுழைய முயன்றவளை

அப்பாவின் குரல் தடுத்தது.

" வள்ளி"

நடுங்கிய குரலில்,

" அப்பா" என்றாள்

" எங்க போய்ட்டு வர?"

" காலேஜ்குப்பா"

" பொய்"

" நிசமாந்தான்பா"

" வள்ளி என்கிட்ட மறைக்காத, என்கிட்ட உண்மைய சொல்லு உன்ன மன்னிச்சுடுறேன்"

" அது வந்து......என் மேல கோப  பட மாட்டிங்கல்ல"

" என்னன்னு சொல்லி தொலடி"- சிவகாமி

" நீ  பேசாம இரு சிவகாமி"

" பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க"

" அது வந்து,   சொல்லுவேன் என்ன திட்டக்கூடாது சரியா"

" சரி திட்டல"

" அத்தைய பாக்க போனேன்"

" அத்தையா....?" எகிறினார் முருகேசன்

" பாத்திங்களா கோப மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப  கோப படுறிங்க"

" சரி அத்தைக்கு நமக்கும்  ஆகாதுன்னு தெரியுமுல்ல?"

" நீங்க உங்க தங்கச்சிக்கிட்ட சண்ட போட்டுக்கிட்டா நான்  எங்க அத்தைக்கிட்ட பேசமா இருக்கனுமா?"

" அப்ப இது என்ன?" கையிலிருந்த பேப்பரை காட்டினார் 

 அவள் விழுந்து விழுந்து சிரித்தபடி

" இதுக்குத்தான் கோபமா? இது எங்க காலேஜ்ல நாடகம் போடுறோம் அதுக்கான ஸ்கி்ரிப்ட்"

" நீ சொல்றத நம்பலாமா?"

" உங்க மேல சத்தியம்"

" சரி இது எத்தன நாள் நடக்குது?"

" எது?"

" அத்தைய போய் பாக்குறது?"

" ரொம்ப நாளா"

" சரி உங்க அத்த எப்படி இருக்கா?"

" அத்தைக்கு உடம்பு சரியில்ல, ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க"

" என்னாச்சி என் தங்கச்சிக்கு, சிவகாமி கிளம்பு, ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடலாம்"

அரக்க பரக்க கிளம்பினார் முருகேசன்.

ghost

ghost

நண்பர்களுடன் செகண்ட் ஷோ பார்த்து விட்டு விசில் அடித்தபடியே  தன் அறைக்கு திரும்பிய பரத்  தன்னை யாரோ பின் தொடர்வது போல் உணர்ந்தான்.

மெதுவாக தலையை திருப்பிப் பார்த்தான்.
ஏதோ நிழலாடுவது போல் இருந்தது.

கொஞ்சம்  தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  நடந்தான்.

திரும்பவும் யாரோ பின் தொடர்வது போல் இருந்தது .

மெதுவாக திரும்பிப் பார்த்தான்.

தெருநாய் ஒன்று   வந்து கொண்டிருந்தது.

" ச்சே இதுக்கா பயந்தோம்"
தன்னைத்தானே தேற்றியபடி அறைக் கதவைத் திறந்தான்.  பேண்ட்டை கழட்டி  லுங்கிக்கு மாறிய பரத் ஒரு சிகரெட்டை பற்ற வைத்து லாவகமாக புகையை
 இழுத்தபடி மொபைலை எடுத்தான் 

அது சார்ஜ் முழுவதும் தீர்ந்து  எப்பவோ உயிரை விட்டிருந்தது

சார்ஜரில் மொபைலுக்கு கனைக்சன் கொடுக்கும் போதுதானா மின்சாரம் போக வேண்டும்.

அப்போதுதான் கவனித்தான்.

ஏதோ கரக் மொரக் என்ற சப்தம்

மேஜை டிராயரில் இருந்த பென்சில் டார்ச்சை எடுத்து அடித்துப் பார்த்தான்
ஒரு எலி பழைய புத்தகங்களை பிராண்டிக் கொண்டிருந்தது.
விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும்
பயந்து போன எலி  கண்ட படி ஓடத் துவங்கியது.
எலி ஓடும் பாதையில் டார்ச்சை திருப்பிய பரத்  டார்ச்சை கையிலிருந்து தவற விட்டான்.

கீழே விழுந்த டார்ச் விழுந்த வேகத்தில்
இங்குமங்கும் உருண்டது.

டார்ச்சை எடுக்கத் திரும்பிய பரத் அந்த சிறிய வெளிச்சத்தில்  ஒருப் பெண்ணின் முகத்தைப் பார்த்தான்.

'அறையை உள்ளே பூட்டி விட்டுத்தானே வந்தேன். அப்படியென்றால்?.........'

- தொடரும் 

பேய்க்கதை மன்னன்  எழுத்தாளர் ஏகாம்பரம் அடுத்த நாள்  பத்திரிகைக்கு கொடுக்க வேண்டிய கதையை எழுதி முடித்ததும் மின்சாரம் துண்டித்து போனது.

அப்போது தன்னைத்தவிர இன்னொரு ஆள் அறையில் இருப்பது போல் உணர்ந்தார்.

கைகால்கள் தந்தியடிக்க  முகமெல்லாம் வியர்த்துப்போய்  இருட்டில்  மொபைலைத் தேடினார்.

அப்போது இரண்டு கைகள் பின்னாலிருந்து  அவர் உடலைப்பற்றி இழுத்து அணைத்தது.

ஏகாம்பரம்  பயந்து நடுங்கியபடி குழறிய வார்த்தைகளில்

" ஏய் நீ யாரு?  கதவ பூட்டித்தானே வச்சேன் எப்படி உள்ள வந்த,உனக்கு என்ன வேணும்?" என்றார்.

கலகலவென்று சிரித்த அந்த உருவம்

" எனக்கு உன் உயிர்தான் வேண்டும் " என்றது.

" ச்சே நீதானா? நான் பயந்தே போய்ட்டேன்,  ஊரிலிருந்து எப்ப வந்த?"என்றார் சிரித்தபடி.

" இப்பத்தான் வந்தேன், வந்த நேரம். கரண்டு போயிடுச்சி. மெதுவா சாவிய போட்டு திறந்தேன்.  கொஞ்சம் உங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு பாத்தேன். இப்படி நடுங்குறிங்க"

' இதுக்கு அந்த பேயே வந்திருக்கலாம்'

'' என்ன வாய்க்குள்ள முனகுறிங்க"

" ஒன்னுமில்லம்மா. வெளிய சொல்லிடாத பொண்டாடிக்கு பயந்தவன்னு காரி துப்புவாங்க"