Tuesday, May 19, 2015

சங்கிலி

"சுந்தரி, இனிமே நீ அந்த சங்கிலியோட சுத்துறத பாத்தேன் தொலைச்சுடுவேன் தொலைச்சி. ச்சே...ச்சே கருமம் அந்த தெருப்பொறுக்கியோட கொஞ்சறதும் குலாவுறதும் எனக்கு சுத்தமா பிடிக்கல"

"அதுல என்னப்பா தப்பு? உங்களுக்கு பிடிக்கலன்னா போங்க, எனக்கு பிடிச்சிருக்கு"

"பொண்ணுன்னு செல்லம் கொடுத்து வளர்த்தேன் பாரு எம்புத்திய...., அதிலும் நான் இல்லாத நேரம் பாத்து உன் பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கான் அந்த தெருபொறுக்கி நாய்"

"அப்பா அவன திட்டாதிங்க எனக்கு பொல்லாத கோபம் வரும்"

"ஓஹோ அந்த நாய்க்காக பெத்த அப்பனயே எதுத்து பேசுறியாமா?"

"அப்பா அவன் நாய்தான். ஆனா அவன் இல்லன்னா என்னால பாதுகாப்பா ஆபிஸ் போய்ட்டு வரமுடியாது. அதோட அவன் தெருவுல கிடக்கிறத எதுவும் திங்க மாட்டான். நம்ம வீட்ல கூட நான் தட்டுல போட்டாதான் திம்பான். அவன் வந்த வந்ததிலிருந்து திருட்டுபயம் கம்மியாடிச்சி"

அவள் சொல்வதை புரிந்து கொண்டதை போல் நன்றியுடன் வாலை ஆட்டினான் சங்கிலி.

"எப்படியாவது தொலைங்க.நான் ஆபிஸ் போறேன்"

கேட்டதை கொடுக்கும் தேவதை

எனக்கோ பெருங்கவலை.எத்தனை உழைத்தாலும் என்னால் பெரும்பொருள் சேர்க்க முடியவில்லையே என.

என் விருப்பத்தை கேட்டதை கொடுக்கும் தேவதையிடம் முறையிட்டு அழுது புலம்பி விட்டு அப்படியே உறங்கிப் போனேன்.

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தவன் என் பக்கத்தில் மரவுரி கிடப்பதை கண்டேன்.

'செல்வத்தை வேண்டினால் மரவுரி கிடைக்கிறது. தேவதையின் மேல் கோபம் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து தேவதையின் விருப்பம் இதுதான் போலும்
என மன நிம்மதியடைந்து மரவுரியை உடுத்திக்கொண்டு காட்டிற்கு கிளம்பினேன். அங்கே ஓர் ஆசிரமம் அமைத்து தவம் செய்ய ஆரம்பித்தேன்.

முதலில் காய் கனி உண்டவன் காலப்போக்கில் சருகுகளை உணவாக கொண்டேன். பின் வெறும் காற்றை மட்டும் உணவாக கொண்டேன். பின் காற்றில்லாமல் கூட வாழ பழகினேன்.

உள்ளத்தில் பேரானந்தம் கிட்டியது.

என் தவ வலிமையும் அதிகமாயிற்று.
இப்போது நான் கேட்டது எல்லாம் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குத் தேவையில்லை.

என் முன் அந்த தேவதை தோன்றினாள்

தேவதை எனக்கு செல்வம் கொடுக்கவில்லை என்ற கோபம் இப்போது இல்லை.அதைவிட வலிமையான மனஅமைதி கிடைத்தது குறித்து மகிழ்ந்தேன்....

"இப்போது சொல் . செல்வம் வேண்டுமா?" - தேவதை கேட்டாள்.

"வேண்டாம் தாயே.அதை விட மனஅமைதி எனும் பெரும் செல்வம் கிடைத்திருக்கிறது"

தேவதை மறைந்தாள்

கனவுலகிலிருந்து நனவுலகுக்கு மீண்டேன்.

பக்கத்து வீட்டு குழந்தை அம்மாவிடம் இன்னொரு சாக்லேட் கேட்டு அடம்பிடித்தான்.

அம்மா பொறுமையாக அடம் பிடிக்கும் குழந்தையை கையிலெடுத்து சாக்லேட் கொடுக்காமல் குழந்தைக்கு பால்சோறு ஊட்டினாள்.

குழந்தை சோற்றை தட்டிவிட்டு அழுதான். அன்னை அழும் குழந்தையின் முதுகில் இரண்டு வைத்தாள்.

குழந்தை வாயை மூடிக்கொண்டு இல்லை இல்லை வாயைத்திறந்தபடி சாப்பிட ஆரம்பித்தான் பால்சோற்றை.

‪#‎நான்‬ படித்த கதையை கொஞ்சம் மாற்றி....

ஜோல்னாப்பை கடவுள்


ஜோல்னாப் பை கடவுள்
--------------------------

"இன்னும் ஒரு டிக்கட் யாருப்பா எடுக்கல.டிக்கேட் டிக்கேட்"

என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜோல்னாபைக் காரனை சந்தேகமாகப் பார்த்தேன்.

'இவன் டிக்கட் எடுத்தமாதிரியே தெரியலயே'

"அலோ பிரதர் டிக்கட் எடுத்தாச்சா?"

"நான் டிக்கட் எடுக்கத்தேவையில்லை"

' ஓ...ஓசிக் கிராக்கியா?'

"நான் ஒன்றும் ஓசிக்கிராக்கி இல்லை" என்றான் அழுத்தந்திருத்தமாக

என் மனதில் நினைத்ததை எப்படி படித்தான்?

"என்னால் எல்லாவற்றையும் உணர்ந்து கொள்ளமுடியும்."

"உளவியியல் படித்துள்ளீரோ?"

"நானே கற்பிப்பவன்.கற்க அவசியமில்லை"

"சர்தான்.சார் யாருங்க?"

"உன்னையும் மண்ணையும் படைத்தவன்"

"அப்டின்னா?"

"கடவுள்"

"எந்த கடவுள்? ஏசுவா?அல்லாவா? பாடிகாட் முனிஸ்வரர்ரா?"

"சாத்தான் வந்து தன்னை சாத்தான் என்றால் நம்புகிறீர்கள்.கடவுளை நம்ப மறுக்கிறீர்கள்"

"சரிவுடு நம்பனும் அவ்ளதானே? நம்பிட்டேன்"

"நான் கடவுள் என்று நிருபிக்க என்ன செய்யவேண்டும்?"

"தாபாரு பளீர்னு வெயில் அடிக்குது. பொட்டு மேகம் கூட இல்ல. இப்ப மழை வரவை பாக்கலாம்"

அடுத்த நிமிடம் இருள் கவிந்து மழை கொட்ட தொடங்கியது.

ஷட்டர்கள் இறங்கி விடப்பட்டன

வைப்பர்கள் கண்ணாடியைத் தழுவி தழுவி தண்ணீரை வழித்தெறிந்தன.

"மந்திரவாதியோ?"

சிறிது அச்சத்துடன் பார்த்தேன் அவனை.

பேருந்து மழைத்தண்ணீரை வாரி இறைத்தபடி விரைந்து கொண்டிருந்தது.

"யோவ் டிக்கட் எடுத்தியா? டிக்கட்ட காமி"
-தூங்கிக் கொண்டிருந்த பரட்டைத்தலையை எழுப்பிக்கொண்டிருந்தார் கண்டக்டர்.

என் பக்கத்தில் இருந்த ஜோல்னாபை காரனை/ரை பயமுடன் பார்த்தேன்.

"வெளியே போவோமா" என்று கேட்டார்

அவர் சொல்வதை புரிந்து கொள்வதற்குள் நாங்கள் இருவரும் பேருந்திற்கு வெளியே நின்றோம்.

பேருந்து நிற்காமல் போய்க்கொண்டே இருந்தது.

"இப்ப எதுக்கு கடவுளே என்னை வெளியே தூக்கி கிட்டு வந்தே?"

"சும்மாதான். என்னை கடவுள்னு நம்புறியா?"

"நம்பித்தானே ஆகனும்."

"நல்லது"

"எல்லாம் சரி நீ கடவுள்தானே.ஏன் இந்த சனங்கள கொத்து கொத்தா கொல்ற? இப்ப பாரு நேபாள்ல பூகம்பம். நல்லவன்லாம் திடீர் திடிர்னு சாகுறான்"

"எல்லோரையும் அப்படியே வைத்தால் பூமி தாங்காது மகனே"

"இம்மாம் பேசுறியே.என்னை ஏன் இந்த பாடு படுத்துற?"

"ஏன் நீ சந்தோசமா இல்லையா?"

"கிழிஞ்சுது.நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்"

"உன் பிரச்னை என்ன? பணமா?"

"யோவ் குடும்பஸ்தனுக்கு எத்தனை பணம் இருந்தாலும் பிரச்னை தீராது."

"அது நீங்களாகவே தேடிக்கொள்வது"

"யோவ் ஒன்னு செய்வோமா நாம இரண்டு பேரும் தொழிலை மாற்றிக்கொள்வோமா?"

"என்ன சொல்கிறாய்?"

"இன்னைக்கு தேதி 1 அடுத்த ஒன்னாம்தேதி வரைக்கும் என்னைப்போல உருமாறி என் குடும்பத்தை கவனி.நான் ஒரு மாசத்துக்கு உலகத்தை கவனிச்சுக்கிறேன்"

"சரி. பேச்சு மாற மாட்டியே. இம்மாம் பெரிய உலகத்தையே நிர்வாகம் பண்றேன். உன் சின்னஞ்சிறிய குடும்பத்தையா என்னால் நிர்வாகம் பண்ண முடியாது. என் சக்தி முழுவதும் உனக்கு அளிக்கிறேன்"

அடுத்த வினாடி கடவுள் என் உரு எடுத்து இருந்தார்.

"யோவ் கடவுளே ஒரு ரெக்வஸ்ட்."

"என்ன?"

"என பொண்டாடி பத்ரம்யா"

"ஹாஹாஹாஹா"

பெரிதாக சிரித்தார்.

"சரி இப்போது நீதான் கடவுள் என்னை உன் வீட்டில் கொண்டு போய் விடு. ஒருமாதம் கழித்து இதே இடத்தில் சந்திப்போம்"

அவரை என் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு கடவுள் தொழிலை பார்க்க போனேன்.

சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் அதே இடத்தில் நாங்கள் சந்தித்தோம்.

"யப்பா என்ன ஆளவிடு. உன் குடும்பத்தை என்னால கவனிக்க முடியாது.நான் கடவுளாவே இருக்குறேன். உன் கால தொட்டு கும்புடனும்யா. எப்டியா குடும்பத்த சமாளிக்கிற?

"ஹாஹாஹாஹா"

பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள்?

ஏழைகள் பணத்திற்காக உழைக்கிறார்கள்.
பணக்காரர்கள் பணத்தை
தங்களுக்காக உழைக்க வைக்கின்றனர்.
ஒருவர் பணத்தை கையாளும் விதத்தில்தான் அவரின் வெற்றியும் தோல்வியும் அடங்கியிருக்கிறது.

பணக்காரர்கள் மாதா மாதம் செலவு வைக்கும் பொருளை
வாங்க முக்கியத்துவம் கொடுக்காமல் வரவை தரும் சொத்து மற்றும் பிற லாபகரமான விசயங்களில் முதலீடு செய்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அந்த முதலீடானது இரவும் பகலும் உழைத்து தொடர்ச்சியான வருமானத்தை லாபமாக தந்து கொண்டே இருக்கிறது.

போதுமான சேமிப்பும் நிறைவான முதலீடும் இருக்கும்போதே
செலவினங்களை வாங்க முற்படுகின்றனர்.

பணக்காரர்கள் பணக்காரர்களாய் இருப்பதில் வியப்பேதும் இல்லை.

# ஒரு தனியார் நிதி நிர்வாகத்தின் அறிக்கையொன்றிலிருந்து