உண்மைகள் விற்கும்
வியாபாரி ஒருவன்
தெருவில் கூவியபடி சென்று கொண்டிருந்தான்
எதற்கும் அஞ்சாறு உண்மைகளை
வாங்கிப் போட்டால் நல்லதென்று
அழைத்தேன்.
விலையை சொன்னான்
விலையதிகம் என்றேன்
குறைத்தால் கட்டுப்படியாகாதென்றான்
எல்லாம் பழையபொருள் என்றேன்
கிடைப்பதற்கரியதென்றான்
துருவேறி விட்டதென்றேன்
துருவேறினாலும் உருமாறாதென்றான்
கடைசியாய் என்னவிலையென்றேன்
முதலிலிருந்தே ஒரேவிலைதான் என்றான்
விற்காத பொருளை ஏன் தூக்கி
சுமக்கிறாயென்றேன்
வேறொன்றும் தெரியாதென்றான்
பொய்களை விற்கிறாயா
தூக்கி சுமக்க தேவையில்லை
என்றேன்
பழக்கமில்லை என்று சொல்லி
நடையை கட்டினான்
உன் பெயரென்ன என்றேன்
மனசாட்சியென்று சொல்லி
மறைந்து போனான்.
No comments:
Post a Comment