உனக்கென்ன?
புன்னகைத்து விட்டாய்,
உதிர்ந்து போவது
நானல்லவோ?
தாம்பரத்திலிருந்து கிளம்ப தயாராக இருந்த 21G பேருந்தில் கடைசியாக மிச்சமிருந்த ஓரிருக்கையில் ஓடி வந்து அமர்ந்து கொண்டான் அரவிந்த்
அமர்ந்தவுடன் மொபலில் முகநூலில் மேய்ந்தான். இனி பாரிஸ் கார்னர் போகும்வரை இந்த முகநூல்தான் அவன் பொழுதுபோக்கு.
பாரிஸ்கார்னரில் ஏதோ ஓர் அலுவலகத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை செய்யும் அழகான திருமணம் ஆகாத வாலிபன்.
பேருந்து கிளம்பியபின் அவசரஅவசரமாக ஓடிவந்து ஏறினாள் அவள்.
அவன் பக்கத்தில் ஓர் இருக்கை மட்டும் காலியாக இருந்ததைப் பார்த்தாள்.
'எப்படி பாரிஸ் கார்னர் வரை நின்றுகொண்டு வருவது?'
இதுவரை அவள் எந்த ஓர் ஆணின் பக்கத்திலும் உட்கார்ந்ததில்லை.
'இவனை நம்பி உட்காரலாமா?'
"சார் நான் உட்காரலாமா?"
யாருக்கோ உள்பெட்டியில் தகவல் அனுப்பிக்கொண்டிருந்தவன் கொஞ்சமும் தலை நிமிராமல்,
"எனக்கு ஆட்சேபனை இல்லை" என்றான்.
அமர்ந்தவுடனே உள்பெட்டியில் தமிழ்ப்பிரியன்
ஆறேழு மாதங்களாக அவள் முகம் தெரியாமல் முகநூலில் அவள் எழுதும் கவிதைகளில் லயித்து துரத்தி துரத்தி காதலிப்பவன். தினமும் அவள் உண்மைப்பெயர் அறிய துடிப்பவன்.
எத்தனை தடவை உங்கள நான் பிளாக் பண்ணிடுவேன் என்று மிரட்டலுக்கெல்லாம் அசைந்து கொடுக்காதவன்.
ஆனால் மிரட்டியிருக்கிறாளேத் தவிர அவனை பிளாக் செய்தததில்லை. காரணம் நாகரிகமான குறும்பான அவனுடைய பின்னூட்டங்களும் குறுங்கவிதைகளும் அவளைக் கட்டி போட்டதென்னவோ உண்மை. இத்தனைக்கும் தன் காதலை அவன் நேரடியாக சொன்னான் இல்லை.சாடைமாடையாக பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறான்.கவிதையால் உணர்த்தியிருக்கிறான். வேறு எந்த பெண்ணிடமும் நெருங்கியதில்லை. இதோ அவன் தான் அடுத்த தகவலை அனுப்பியிருக்கிறான். மொபலை திறந்தாள்
"ஹாய் பிறைநிலா காலை வணக்கம்"
பிறைநிலா - அவள் முகநூல் பெயர்.
"வணக்கம் ப்ரியன்"
"என்ன கவிதாயினிக்கு மூட் வரவில்லையோ கவிதை எழுத?"
"அதான் நீங்க எழுதிறிங்களே எனக்கும் சேர்த்து. போதாதா?"
"என்ன இருந்தாலும் கவிதாயினி எழுதுவது போல் ஆகுமோ?"
"கவிஞர் ஓவரா வழியிறாரு.தொடச்சிக்குங்க"
"பிறைநிலா எப்போது முழுநிலவாகும்?"
"இது வளராத நிலா"
"நிலவில் காலடி வைக்க முடியுமா?"
"காலை வெட்டி விடுவேன்"
"இதெல்லாம் சரியில்லை.பேசாமல் என் பெயரை மாற்ற போகிறேன்"
"என்னவென்று?"
"நிலா ரசிகன்னு"
"ரொம்ப ரசிக்காதிங்க. பிறைநிலா பிடியற்றஅரிவாள் போலவும் இருக்கும் தெரியுமா?"
"பிடி போட்டால் போச்சி"
"யாருக்கு?"
"அரிவாளுக்கு"
"கவிஞர்களுக்கு கற்பனைத்திறன் அதிகம்"
"கற்பனையை உண்மையாக்கினால் என்ன?"
"ம்.உதை விழும்.சரிங்க ப்ரியன் எனக்கு ஆபிஸ் வந்தாச்சி. பை"
"எனக்கும்தான். பை"
அந்த நிலாப்பிரியன்தான் இந்த அரவிந்த் என்று தெரியாமல் அவளும்,
தன் பக்கத்தில் இதுவரை அமர்ந்திருந்தவளிடம்தான் தான் சாட் செய்தோம் என்று அறியாமல் அவனும் அவரவர் அலுவலகங்களுக்கு பறந்தனர்.